தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – பிப்பிரவரி 2011
தேதியூர் V.J. ராமன்
திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் கிருஷ்ண சாமி.
“என்ன மாமா, சௌக்யமா” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
“அடேடே, பட்டாபி. . .” காலங் கார்த்தாலேயே கடன் கேட்க வந்துட்டான் போல இருக்கே. கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கவும் மாட்டாளே. கலக்கத்துடன் “வா. பட்டாபி. என்ன விஷயம்.” விசாரித்தார் கிருஷ்ணசாமி.
“மாமா. . . ஒரு நூறு ரூபாய் அர்ஜென்ட்டா வேண்டியிருக்கு. அம்மாவுக்கு மருந்து வாங்கணும்.”
நினைத்தது சரியாப் போச்சு. “என்ன பட்டாபி. நீ கடன் வாங்கினா திருப்பித் தர மாட்டாயாமே.”
“நிச்சயம் திருப்பித் தந்துடுவேன் மாமா. . . நம்புங்கள் மாமா.”
அம்மாவுக்காக என்று கேட்கிறானே என்று நூறு ரூபாயைத் திரும்பி வராத கடனாக இருக்கட்டும். கொடுத்தார் கிருஷ்ணசாமி.
சொல்லிவைத்தாற்போல் ஒருவாரத்தில் நூறு ரூபாயைத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து ஆச்சர்யத்தில் மூழ்கடித்தான் பட்டாபி. அன்று மாலை வாக்கிங் போகும்போது இந்த அதிசய நிகழ்வை ராமசாமியிடம் விவரித்தார் கிருஷ்ணசாமி.
“கிருஷ்ணசாமி. . . ஜாக்கிரதை. . . இப்படித் தான் பலபேர் நம்பிக்கையை ஏற்படுத்திப் பின்னால் நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள். பல பேரை ஏமாற்றியவன் பட்டாபி.”
“என்னைப் பொருத்தவரை, பட்டாபி நம்பிக்கையானவன் என்றே தோன்றுகிறது.”
“தப்பாய் யோஜிக்கிறே கிருஷ்ணசாமி. . . நம்பிக்கை என்பது பல பேரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.”
“அப்போ, யாரைத்தான் நம்புவது ராமசாமி.”
“இதற்கு நம்ம ஜோஸ்யர்தான் பதில் சொல்ல முடியும். திரும்பிப் போகும்போது அவரைப் பார்த்துவிட்டுப் போகலாம்.”
“வாங்கோ, வாங்கோ. நீங்கள் வருவேள்னு எதிர்பார்த்தேன் வந்துட்டேள்.”
“என்னை எதிர்பார்த்தேளா! எப்படி”.
“ஒரு நம்பிக்கைதான்” ஜோஸ்யர் பதில் சொன்னார்
இருவருக்கும் ஒரே ஆச்சரியம். “இந்த நம்பிக்கை பற்றித்தான் உங்களைக் கேட்கலாம்ன்னு வந்தோம்…”
“பார்த்தேளா. நமது ஜீவிதமே ஒரு நம்பிக்கையில்தான் ஓடிண்டு இருக்கு.”
“எப்படிச் செல்றேள் . . .”
“இதோ பாருங்கோ. ராத்திரி படுக்கிறோம். காலையில் எழுந்திருப்போம் என்ற நம்பிக்கையில்தானே. நமக்குள்ளே நமக்குத் தெரியாமலே இந்த நம்பிக்கை பிறந்த உடனேயே வந்துடறது. பிறந்த குழந்தையைத் தூக்கிப்போட்டுக் கொஞ்சமே. அது நம்மைத் தூக்கிப் போட்டவர் பிடித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையிலே தானே சிரிக்கிறது. இப்படித்தான் ஆரம்ப காலம்தொட்டே நம்ம நம்பிக்கை என்பது வேரூன்ற ஆரம்பித்துவிடுகிறது.”
“எல்லாம் சரிதான் ஜோஸ்யர்வாள். . . யாரை நம்புவது என்பதுதானே பிரச்சினை. நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் அதிகம் இருக்கிறார்களே.” காலையில் நடந்த பட்டாபி சமாச் சாரத்தைச் சொல்லி அவனை நம்புவதா கூடாதா என்று கேட்டார் கிருஷ்ணசாமி.
“நம்பிக்கையை ஒருவர் ஏற்படுத்துவதன் மூலம் வருவது நம்பிக்கையே இல்லை. அதை உங்கள் மனது ஏற்றுக்கொள்ளக்கூட மறுக்கலாம். பலபேரால் தனது ஆத்ம அனுபவத்தினால் ஒரு தனிநபர் மீதும் குறிப்பிட்ட தெய்வத்தின் மீதும் உணரப்படுவதே உண்மையான நம்பிக்கை. நம்பினார் கெடுவதில்லை என்று சொல்வது அந்தப் பரம்பொருளை. நர ஜென்மங்களை அல்ல.”
“வாழ்க்கை ஜீவிதமே நம்பிக்கையில்தான் ஓடுகிறது என்று இப்போதுதானே சொன்னீர்கள். அப்போ வாழ்க்கைத் துணையான பெண்டாட்டியை நம்பக் கூடாதா.”
“பதிவிரதையான அவள் உங்களைத் தெய்வமாக மதிக்கிறாளே. தெய்வம் கைவிடுமா? நீங்கள் அவள்மீது நம்பிக்கை இழக்காதவரை. . . மனிதர்களையே கடவுளாக நம்புபவர்களும் தன் வாழ்க்கையில் நன்மைகளையே சந்திக்கிறார்கள். பரமாச்சார்யாள், சாய்பாபா போன்ற மஹான்களை முழுமையாக நம்பியவர்கள் நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தானே இருக்கிறார்கள்.”
பழயனூர் என்ற ஊரில் தேவராஜ சர்மா என்ற ஒருவர் பரமாச்சார்யாள்மீது தீவிர பக்தி நம்பிக்கை உடைய பக்தராக இருந்தார். ஒரு சமயம் அவருக்குக் கடுமையான காது வலி ஏற்பட்டது. பரிசோதித்த டாக்டர் ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். . . காஞ்சிபுரம் சென்று பெரியவாள் உத்திரவு கிடைத்தால்தான் ஆபரேஷன் செய்துகொள்வது என்று தீர்மானித்தார் சர்மா. காஞ்சிபுரம் உடன் புறப்பட்டார். அன்று கடையில் அவருக்குக் கிடைத்தது ஆரஞ்சுப் பழங்கள் மட்டுமே. . . அதை வாங்கிக்கொண்டு பெரியவாளை நமஸ்கரித்து விவரத்தைச் சொல்லித் தனது சங்கடத்தைப் போக்க ஆசிர்வாதம் வேண்டினார். தன்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து வந்துள்ளார் என்பது பரமேச்வரன் அவதாரமான பரமாச்சார்யாளுக்குத் தெரியாமல் போகுமா. . . எந்தவிதமான பதிலும் பெரியவாளிடமிருந்து வரவில்லை. . . மாறாக அவர் கையில் உள்ள ஆரஞ்சுப் பழங்களின் தோல்களை உரித்தவண்ணம் இருந்தார். சர்மாவுக்கு தன்னுள் உள்ள வலியை உரித்து வெளியில் பரமாச்சார்யாள் எரிவதாகவே உணர்ந்தார். ஏதோ ஒரு மாற்றம் உடம்பில் ஏற்படுவதாகவே அவர் உணர்ந்தார். .. ஆச்சர்யம் இரண்டே நாளில் காதில் உள்ள வலி பூர்ணமாகவே விலகிவிட்டது. மறுபடியும் டாக்டரிடம் சென்று காண்பித்தபோது டாக்டருக்குப் பெரும் அதிர்ச்சி. உண்மையைச் சொல்லுங்கள், எந்த டாக்டரால் இது சாத்யம் ஆயிற்று. . . எனக்கும் அந்த மருந்து விவரம் தெரிந்தால் மற்றவர்களுக்கும் உதவலாமே என்று டாக்டர் கேட்க ‘உண்மை தான் டாக்டர். . . அந்த வைத்யர் சாட்சாத் பரமேச்வர அவதாரமான பரமாச்சார்யாள்தான். . . நான் அவர்மீது கொண்டுள்ள அதீதமான நம்பிக்கையினாலேயே அவரது அணுக்கிரகம் என்னும் மருந்து எனக்கு பூர்ணமாகக் கிடைத்தது. . . வலி பறந்தது. அதிசயித்துப்போன டாக்டர் உங்களுக்கு ஆபரேஷன் இனித் தேவையே இல்லை என்று சொன்னதும் சர்மாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. . .
இப்படி மானுட அவதாரங்களைத் தெய்வமாகவே நம்பும் எவரும் கைவிடப்படுவதும் இல்லை. நம்புவதற்காக நடிப்பவர்களை நம்புதல் கூடாது. . . என்ன சரிதானா.”
“சரிதான். . . ஜோதிஷ ரீதியாக” என்று இழுத்தார் ராமசாமி.
பொதுவாக லக்னம், 4, 5, 9, 10ஆம் இடங்களில் குருபகவான் வரப்பெற்றவர்கள், லக்னம், 7ஆம் இடத்தில் சூரியன் வரப் பெற்றவர்கள் எல்லோருமே தான் எடுக்கும் முடிவகள் எப்போதுமே சரியானவை என்ற அசாத்யமான நம்பிக்கை உடையவர்கள். சூரியன் மற்றும் சந்திரன் நீச்சம் அடைந்து அதாவது துலாம் மாதம் மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எல்லோருமே எப்போதும் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கின்றார்கள். லக்னம், 5, 7இல் சனிச்வரன் கேதுபகவான் வரப்பெற்றவர்கள் தன்மீதே நம்பிக்கை இல்லாதவர்களாகவும் மற்றும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவும் இருப்பார்கள். 3ஆம் இடம் குருபகவான், சனிச்வரன் வரப்பெற்றவர்களுக்கு எதிலுமே நம்பிக்கை இல்லாமலும் இருக்கும். அமாவாசையில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக எவர்மீதும் அதிகம் நம்பிக்கை உடன் வருதில்லை. 3, 6, 8, 12ஆம் இடங்களில் சந்திரன் வரப்பெற்றவர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவே என்றும் இருப்பார்கள்.
“நட்பே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வருகிறது. இணைபிரியாத உங்கள் இருவருக்கும் சொல்லப்போனால் 3ஆம் இடம் ஜாதக ரீதியாக மிக ஒற்றுமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.”
முகமலர்ச்சியுடன் இருவரும் வீடு திரும்பினார்கள். மறுநாள் காலை.
“மாமா. . . சௌக்யமா.” கேட்ட குரல் மாதிரி இருக்கே என்று திரும்பிப் பார்த்தார் கிருஷ்ணசாமி.
“நான்தான் மாமா, பட்டாபி. தப்பா நினைச்சுக்கலேன்னா. . . ஒரு ஆயிரம் ரூபாய் அர்ஜென்டா வேணும் மாமா. இரண்டே நாளில் சம்பளம் வந்ததும் தந்துடறேன்.”
இப்போது சற்று விழித்துக்கொண்டார் கிருஷ்ணசாமி.
“இல்லேப்பா. உன்மீது இருந்த நம்பிக்கை எனக்குப் போய்விட்டது.”
“என்ன மாமா சொல்றேள். நான்தான் உங்களிடம் முன்பு வாங்கியக் கடனை திருப்பிக்கொடுத்து விட்டேனே.”
“வாஸ்தவம்தான். நீ திருப்பிக்கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் நூறு ரூபாயைப் போன வாரம் கொடுத்தேன். எல்லோருமே, நீ வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமாட்டே என்று நம்பிக்கையுடன் சொல்லுகிறார்கள். அவர்களது நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பவில்லை.”
உண்மையாகவே இந்தத் தடவை வாங்கும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் பட்டாபிக்கு இல்லை. நம்பிக்கையை ஏற்படுத்தி, தான் நடத்த இருந்த நாடகம் இவருக்கு எப்படியோ புரிந்துவிட்டதே. சரி உங்களை விட்டால் வேறு யாரேனும் கிடைக்காமலா போய்விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நடையைக் கட்டினான் பட்டாபி.
No Comment