தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – மார்ச் 2011
தேதியூர் V.J. ராமன்

என்ன கிருஷ்ணசாமி. . . ஏதோ தீவிரமா யோஜிக்கறாப் போல இருக்கு.

வா. . வா. . ராமசாமி. . இப்போ ஒருத்தன் சைக்கிள்லே வந்தான். . . உங்காத்துக்கு நாலாம் தள்ளி உள்ள பட்டாபியைப் பற்றி தெரியுமான்னு கேட்டான். தெரியும்ன்னு சொன்னேன்.

அப்புறம் . . .

அப்புறம் என்ன. அவர் எப்படிப்பட்டவர்ன்னு தெரியுமான்னு கேட்டான். . . தெரியாதுன்னு சொன்னேன்.

அதற்கு அவன் என்ன சொன்னான்

என்ன சார். அவரைப் பற்றித் தெரியும்னு சொல்றேள். ஆனால் அவரைப் பற்றி எதுவும் தெரியாதுன்னுவேற சொல்றேளே. . . உங்களுக்குப் பக்கத்தில் உள்ளவாளைப் பற்றி நன்னா தெரிஞ்சு வைச்சுக்கவேணாம்மான்னு கேட்டுட்டு எனக்கு ஆன கதி உங்களுக்கு ஆகக் கூடாதுன்னுவேற சொல்லிட்டுப் போறான்.

அப்புறம். . .

சார். . . சார். என்ன கதி ஆச்சுன்னு சொல்லிட்டுப் போங்கோளேன். கேட்கறதுக்குள்ளே விர்னு போயிட்டான். மண்டை குழம்பிண்டு இருக்கு. என்ன விபரீதம் அவனுக்கு நடந்தது என்று தெரிந்துகொள்ள முடியாமலே போய்விட்டதே.

இது ஒரு சினிமாவிலே வர ஜோக் மாதிரி இருக்கே. . . ராமசாமி கிண்டலடித்தார்.

விளையாடாதே ராமசாமி. நான் குழம்பிண்டு இருக்கேன் நீர் ஏதோ ஜோக்கடிக்கிறீர்.

சரி. . . சரி. வாரும். . . ஜோஸ்யர்கிட்டே போனால்தான் நமக்கும் இதுபற்றிப் புரிஞ்சுக்க முடியும் .

வாங்கோ. வாங்கோ. ரெட்டையர்வாள். எப்படி சௌக்யம் எல்லாம். . . விஜாரித்தார் ஜோஸ்யர்.

காலையில் நடந்த குழப்பத்தைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ணசாமி.

தெரிந்தவர் எல்லோருமே புரிந்தவர்கள் இல்லை. புரிந்தவர்கள் எல்லோருமே அறிந்தவர்களானதும் இல்லை.

என்ன வோய் . நீர் மேலும் குழப்பிறீரே.

நாம எல்லோருமே எதையும் தெரிந்ததாக நினைத்துக்கொண்டுதான் எல்லா காரியங்களையும் செஞ்சுண்டுவரோம். சொல்லப் போனால் நம்மில் பலபேர் எதற்காக இப்படிச் செய்யறோம் என்பதைப் புரிஞ்சுக்காமலேயே முட்டாள் தனமாகவேதான் எல்லாக் காரியங்களையும் செஞ்சுண்டு வரா. . .

போன மாசம் திருவாரூர் தியாகேசனைத் தரிசிக்க அனுக்கிரகம் கிடைத்தது. பிரகாரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன்.

ஒருத்தர் கனமுடையா பிரகார சுவரின் மேலே ஏறி எதையோ சொருகிக்கொண்டு இருந்தார். கிட்டே போய்ப் பார்த்தபோது சுவரின் இடுக்கிலே நிறைய ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய், ஐம்பது பைசா காசுகள் சொருகப்பட்டு இருந்தன. இவர் பங்குக்கு ஒரு ரூபாய் நாணயத்தை அந்த இடுக்கில் சிரமப்பட்டுச் சொருக்கிக்கொண்டு இருந்தார்.

ஐயா. . . எதற்காகச் சிரமப்பட்டு அந்த இடுக்கிலே ஒரு ரூபாயைச் சொருகிக்கொண்டு இருக்கேள் என்று கேட்டேன்.

எல்லோரும் சொருகியுள்ளார்கள். நானும் சொருகி வைக்கிறேன். ஏன் எதற்கு என்ற காரணம் எல்லாம் எனக்குத் தெரியாது.

முதன்முதலா வந்த ஒரு பிரஹஸ்பதி ப்ரஹாரத்தில் கிடந்த ஒரு ரூபாயை உண்டியலில் கொண்டுபோட அலுப்புபட்டுக்கொண்டு சுவரின் இடுக்கில் சொருகிவைக்க இதே போன்ற பல சோம்பேறிகளும் தொடர்ந்துச் செய்யும் இதுபோன்ற முட்டாள் தனமான காரியத்தைப் பற்றி என்ன சொல்வது. குருக்களின் தட்டில் போட்டால் அவரது ஜீவிதத்துக்கு இது உதவும். கோயில் உண்டியலில் போட்டால் கோயில் வளர்ச்சிப் பணிக்கு இது உதவும். சுவற்றின் இடுக்கில் சொருகி வைப்பதனால் யாருக்கு என்ன பலன் என்று யோஜித்துப் பாருங்கள். . . இதையெல்லாம் நமது ஜனங்கள் தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா? புரியாத புதிராக தானே இருக்கிறது.

இதேபோலத்தான் ரயிலில் பயணம் செய்யும் போதுநதி தீரங்களை கடக்கும்போது நாணயங்களை வீசி எறிவது. சமுத்திரங்களில் நாணயங்களைப் போடுவது எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட சம்பிரதாயம் என்று புரியவில்லை. முட்டாள் தனமா தோணலே. வீசி எறியும் நாணயங்களை அதே ரயிலில் வரும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்தால் ஒரு ஜீவனுக்கு உணவு அளித்த புண்ணியம் கிடைக்குமே. இதை விடுத்துச் சமுத்திரத்திலோ நதியிலோ நாணயங்களைப் போட வேண்டும் என்று யார் இவர்களுக்குப் போதித்தார்கள். தெரிந்தே செய்யும் முட்டாள் தனம் என்றுதானே நினைக்க வேண்டியுள்ளது.

தெரிந்துதான் செய்கிறார்களா. தெரிந்தது போல் சொன்னவர்கள் பேச்சைக் கேட்டு செய்கிறார்களா. புரியவில்லை. எதையும் புரிந்துகொண்டு செய்ய விரும்பாதவர்களாகவே எத்தனையோ பேர் இன்னும் தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்படாத இதுபோன்ற முட்டாள் தனமான காரியங்களைச் செய்துகொண்டுதானே இருக்கின்றார்கள் . . .

எத்தனையோ விஷயங்கள் பற்றி இன்னும் தெரிந்துகொள்ளாமலேதான் நாம் இருக்கோம். அந்தப் பரம்பொருள் யார். இத்தனை ஜீவராசிகளை உலகில் ஏன் படைத்தார். ஏன் எல்லாவற்றையும் இரண்டு இரண்டாகவே படைத்தார். கடவுள் மட்டும் ஒருவர்தான் என்கிறோமே. படைப்பின் தத்துவம் என்ன. நம்மில் யார் கடவுளிடம் நெருக்கத்தில் இருக்கின்றோம். அவரிடம் நெருங்க நாம் என்ன செய்ய வேண்டும். இப்படி எத்தனையோ விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் என்றுமே விரும்புவது இல்லை. தெரிந்துகொள்ளத் தேவையில்லாத விஷயங்கள் குறித்து மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்கிறோம். கிருஷ்ணசாமி. நீங்களும் இப்போது அப்படிப்பட்ட சமாச்சாரம் குறித்து தான் மனத்தைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றீர்கள். பேரறிஞராகவோ மூதரிஞராகவோ நீங்கள் ஆகத் தேவையில்லை. உங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டவராக முயற்சி செய்யுங்கள்.

ஜோதிஷரீதியாக எவருடைய ஜாதகத்தில் லக்னத்தில், 3, 5, 7, 9ஆம் இடங்களில் குரு பகவான் வரப்பெற்றவர்கள் எல்லோருமே தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உடையவர்கள். தெரிந்துகொள்ள வேண்டாத விஷயங்களைப் பற்றி மண்டையைக் குழப்பிக் கொள்பவராகவும் இருப்பார்கள். லக்னம் மற்றும் 5ஆம் இடத்தில் சனிச்வரன் வரப்பெற்றவர்கள் எல்லாம் தெரிந்தும் புரியாதவர்கள் போல் மற்றவர்களிடம் நடந்துகொள்வார்கள். லக்னம் 7ஆம் இடத்தில் கேது பகவான், 3ஆம் இடத்தில் குருபகவான் வரப்பெற்றவர்கள் எதையுமே தெரிந்துகொள்ள விரும்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

என்ன கிருஷ்ணசாமி. உமக்கும் உமது பாரியாளுக்கும் தெரியாததுன்னு ஏதாவது உண்டா. வேண்டாத ஒன்றுக்கு மூளையைக் கசக்கி கொள்ளாதீர்.

அகத்துக்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி.

ஏன்னா . . . ஒரு விஷயம் தெரியுமா . எதிராளாத்து அம்புஜம் புக்காத்துக்கு தன் பொண்ணைக் கொண்டுவிட திருச்சி போனாளோன்னோ. அங்கே ஹார்ட் அட்டாக்கிலே போயிட்டாளாம்.

அப்படியா. . . பெண் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சுட்டு போனாளே மகராசி.

அது இல்லேன்னா. உங்களுக்குத் தெரியாம ஒரு காரியம் செஞ்சுட்டேன். கோவிச்சுக்கக் கூடாது.

தெரிஞ்சு செஞ்சாக்கூட என்னால கோவிச்சுக்க முடியுமா என்ன. சொல்லு. . . கேட்கறேன்.

போன மாசம் அம்புஜம் பெண் கல்யாணத்தின் போது என்னிடம் வந்து ரூ. 10,000 அர்ஜன்டா வேணும். உங்காத்துகாரருக்குத் தெரியாமக் கொடேன். ரூ. 1,000 சேர்த்து ரூ. 11,000 அடுத்த மாசமே தந்துடறேன்னு சொன்னா. நீங்க கொடுத்த பணத்திலே சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை, சபலப்பட்டுக் கொடுத்துட்டேன். இப்போ அந்தப் பணம் போச்சேன்னு மனசு அடிச்சுகறது . . .

இதானே. கவலையை விடு. சர்வசாதாரணமாக கிருஷ்ணசாமி சொன்னதும் சற்றே அதிர்ந்துபோனாள் மாமி.

என்னன்னா. . . இவ்வளவு பெரிய பணம் நஷ்டம் ஆயிடுத்து. உங்களுக்குத் தெரியாமக் கொடுத்தது எவ்வளவு தப்புன்னு இப்போ எனக்குப் புரியறது.

அதான் சொன்னேனே. நமக்கு நஷ்டம் இல்லேடி. . லாபம்தான்.

என்னன்னா சொல்றேள். புரியலையே. . .

எங்கிட்டேயும் அம்புஜம் மாமி பெண் கல்யாணத்துக்காக ஒரு ரெட்டவடம் சங்கிலியைக் கொடுத்துத் தெரிஞ்சவாளிடம் அடகுவைத்து ரூ. 10,000 வாங்கித் தரச் சொன்னா. 4 பவுன் சங்கிலி. எங்காத்து மாமாவுக்குத் தெரியாமல் தரேன் மாமா. கொஞ்சம் உதவி செய்யுங்கோன்னு சொன்னா. நம்மகிட்டதான் பணம் இருக்கே. நாமே அடகாக வைச்சுண்டு பணம் கொடுக்கலாமேன்னு தோணிச்சு. ரூ. 10,000 உனக்குத் தெரியாமல் அம்புஜத்துக்குக் கொடுத்தேன். அவாத்து மாமாவுக்கு இது விஷயம் எப்போதுமே இனி தெரியப்போவதும் இல்லையே. உனக்குத் தாண்டி இனி யோகம். இன்றைய பவுன் விக்கற விலையிலே யாருக்கு லாபம்னு சொல்லு.

விக்கித்துப் போனாள் மாமி. கிருஷ்ணசாமி தெரியாமல் செஞ்சாலும் அவரது பார்யாள் புரியாமல் செஞ்சாலும் அம்புஜம் அறியாமல் செஞ்சாலும் அந்தப் பகவானுக்குத் தெரியாமல் போகாதே. அம்புஜம் கொடுத்தது பவுன் சங்கிலியே இல்லைங்கறது. உண்மை என்றோ ஒரு நாள் புரியப் போகிறது. புரிய வேண்டிய அவசியம் இல்லாமல் போனாலும் போகலாம். எனக்கு ஆன கதி உங்களுக்கு ஆகக் கூடாதுன்னு காலையில் வந்தவன் கிருஷ்ணசாமியிடம் சொல்லிட்டுப் போனது என்ன கதி என்று இதைப் படிக்கும் வாசகர்களுக்குப் புரியாமல் போகாது என நினைக்கிறேன்.


Contact Astrologer