தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – பிப்பிரவரி 2011
தேதியூர் V.J. ராமன்

ருஷ்ணசாமி என்றும் இல்லாதவாறு அன்று குதூகலத்துடன் காணப்பட்டார்.

என்ன கிருஷ்ணசாமி. ரொம்ப சந்தோஷமாக இருக்காப் போல இருக்கு.

ஆமாம் ராமசாமி . இன்று ஒரு நல்ல காரியம் செஞ்சேன்.

நீயா! நல்லகாரியமா! என்ன அப்படி செஞ்சே.

காலம்பற ஸோபாவிலே உட்கார்ந்து பேப்பர் படிச்சுண்டு இருந்தேன். எதித்தார்போல் சுவத்திலே ஒரு பல்லி. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு வண்ணத்துப்பூச்சி. நான் கொஞ்சம் பார்க்கலேன்னா அவ்வளவுதான். அந்த வண்ணத்துப்பூச்சியை அந்தப் பல்லி சாப்பிட்டிருக்கும். வண்ணத்துப் பூச்சியைக் காப்பாத்தணும்னு தோணுச்சு. ஓடிப்போய் அதை அந்த இடத்திலேந்து விரட்டிட்டேன். ஒரு உயிரைக் காப்பாத்தினேன் இன்னிக்கு என்கிற சந்தோஷம் மனசிலே ஓடின்டின்டு இருக்கு .

நீ செஞ்சது நியாயமா கிருஷ்ணசாமி .

என்ன நியாயமான்னு கேட்கறே. ஒரு உயிரைக் காப்பாத்தி இருக்கேன். இது பெரிய விஷயம்னு தோணலயா.

ஆமாம். நியாயம் இல்லைதான். அந்தப் பல்லியைப் பட்னி போட்டுவிட்டாயே. ஒரு ஜீவனுக்குக் கிடைக்க வேண்டிய உணவைத் தட்டிப் பறிப்பது உனக்கு நியாயம்ன்னு படறதா .

சற்றே குழப்பம் அடைந்தார் கிருஷ்ணசாமி.

இதெல்லாம் இயற்கையின் நியதி கிருஷ்ணசாமி . உனக்கு நியாயம்ன்னு படறது மத்தவர்களால் நியாயம் என்று ஒப்புக்கொள்ள முடியாமல்தான் இருக்கும்.

இப்போது மேலும் குழம்பினார் கிருஷ்ண சாமி . ஒரு ஜீவனுக்குக் கிடைக்க வேண்டிய உணவைத் தட்டிப்பறித்த பாபம் எனக்கு வந்துவிடுமோ. சற்றே பயந்தார் . எது நியாயம் எது அநியாயம் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லையே!

வா வா. இதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. நம்ம ஜோஸ்யரைக் கேட்கலாம் .

வாங்கோ . வாங்கோ. என்ன கிருஷ்ணசாமி முகம் வாடியிருக்கே. என்ன விஷயம் .

காலை நடந்த சம்பவம். சந்தோஷம் துக்கமாக மாறிய விஷயத்தைச் சொன்னார் கிருஷ்ணசாமி .

ராமசாமி சொன்னது சரிதான் கிருஷ்ணசாமி. மண்சட்டியைப் பத்திரப்படுத்தி வைக்கச் சொன்ன மகனின் கதை உனக்குத் தெரியுமா .

என்ன கதை அது. ஆர்வமுடன் கேட்டார் கிருஷ்ணசாமி

கிரஹஸ்தர் ஒருத்தர் தன் தகப்பனாரை மதிப்பதில்லை. மூலையில் ஒரு இக்கட்டான இடத்திலேயே உட்காரவைத்து மண்சட்டியில் உணவு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் அந்தத் தகப்பன் பரலோக ப்ராப்த்தி அடைந்தார். அவரை சம்ஸ்காரம் செய்யப் புறப்பட்டபோது அந்த மண்சட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் அந்த கிரஹஸ்தர்.

அப்போது அந்த கிரஹஸ்தரின் பையன் கேட்டான். அப்பா அந்த மண்சட்டியை எங்கே எடுத்துண்டு போறிங்க.

அது தாத்தாவோட சட்டிடா . அவருடனே புதைக்க எடுத்துண்டு போறேன் .

இல்லை அப்பா. அது எடுத்துண்டு போக வேண்டாம். ஏன்னா உங்களோட பிற்காலத்திலே உங்களுக்குச் சாப்பாடு போட இது போன்ற மண்சட்டி என்னால் வாங்க முடியாமல் போயிடும். இது நம்ம வீட்டிலேயே உங்களுடைய பிற்கால உபயோகத்திற்காக இருக்கட்டும்பா.

அந்த கிரஹஸதர் தன் தந்தைக்கு உணவு அளித்த விதம் நியாயம் என்று தோன்றினால் அதேபோன்ற எண்ணம் பையனுக்கும் தோன்றுவதில் நியாயம் இல்லை என்று கூறிவிட முடியுமா. இது போன்ற சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் நடந்துகொண்டும் தான் இருக்கின்றது.

கிருத யுகம் த்ரேதா யுகத்தில் தர்மமும் நியாயமும் மட்டுமே இருந்தது. அதர்மம் அநியாயம் பற்றி அப்போது வாழ்ந்தவர்களுக்குத் தெரியவே இல்லை. த்வாபர யுகத்தில் தர்மம் அதர்மம் என்றால் என்னவென்று புரிய வேண்டிய நிலை வரத் தொடங்கியது. கலியுகத்தில் தர்மம் நியாயம் அப்படி என்றால் என்னவென்று கேட்கும் நிலையே உள்ளது.

என்ன சொல்றேள். ஒன்றும் புரியல்லேயே. ராமசாமி குழம்பினார்.

வடநாட்டில் ஏழைகள் நிறைந்த ஒரு கிராமம். கயர்லாஞ்சி என்று பெயர். இங்குள்ள ஏழை தலித் குலத்தைச் சேர்ந்த சிலர் கூலி உயர்வு கேட்டு உயர் ஜாதிக்காரர்களிடம் போராட்டம் செய்துள்ளார்கள். அதில் ஒருத்தனைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள் அந்த மிராசு தார்கள்.

அடிபட்ட அந்த ஏழை தலித்துக்கு ஊர்காரன் ஒருத்தன் மனிதாபிமானத்துடன் அடைக்கலம் கொடுத்து மருத்துவ உதவி செய்து இருக்கின்றான். இந்த விஷயம் அந்த மிராசுதார்களுக்கு தெரிய வந்தது. அவ்வளவுதான். அடைக்கலம் கொடுத்தவன் வீட்டை நாசப்படுத்தி அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள் உட்பட அனைவரையும் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளார்கள். நான்கு தலித் ஏழைக் குடும்பத்தில் உள்ளவர்களும் இதேபோல் மிராசுகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

இந்த விஷயம் கோர்ட்டுக்கு வந்து கீழ்கோர்ட்டில் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து கொலையாளிகளைக் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்துத் தண்டனையை ரத்துசெய்து அனைவரையும் விடுதலை செய்துள்ளது. பாரதத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் உயர்ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மிராசுதார்கள் செய்தது மிகவும் கொடுமையான வெறிச் செயல் என்று ஆர்ப்பாட்டம் செய்தும் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு இது வன்முறையே அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது என்றால் கலியுகத்தில் நியாயம் எங்கே இருக்கின்றது என்றே புரியவில்லை. ஆக கீழ் நீதிமன்றத்தில் இந்த மாபாதகச் செயலைச் செய்த கொடியவர்களுக்குக் கொடுத்த மரண தண்டனை சரி என்று நியாயப்படுத்தியதை உயர் நீதிமன்றம் தண்டனையே தேவையில்லை என்று நியாயப்படுத்துகிறது. இதில் யாருடைய தீர்ப்பு நியாயமானது என்று உங்களால் சொல்ல முடியுமா.

இதேபோலத்தான் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் கொஞ்சநாள் உலகமே விக்கித்துப் போனது. ஆனால் இன்று அந்த உயிர்களை மாய்த்தவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதாடுகிறது ஒரு கூட்டம். உயிரைப் போக்கலாம் தவறில்லை. உயிரைப் போக்கியவர்களது உயிரைப் போக்குதல் தவறு என்கிறது ஒரு சமுதாயம். இது நியாயமா அல்லது அநியாயமா என்று உங்களால் பாகுபடுத்த முடிகிறதா.

கலியுகத்தில் உங்களுக்கு நியாயம் என்று தோன்றது மற்றவர்களுக்கு அநியாயமாக இருக்கும்படி செய்திருப்பது அந்தப் பரப் பிரம்மத்தின் லீலைதான். எனவே கிருஷ்ண சாமி நீர் செய்த விஷயம் உங்களுக்கு நியாயமாகப் பட்டாலும் ராமசாமிக்கு அது நியாயம் என்று தோன்றவில்லை. என்றாலும் மேலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் பரப்பிரம்மம் அநியாயத்தைச் செய்பவர்களையும் அநியாயமாகத் தீர்ப்பு சொல்பவர்களையும் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க உதவி செய்பவர்களையும் தண்டிக்காமல் விடாது என்று வேண்டுமானால் நம்பலாம். நம் மனதை அப்படித்தான் நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கிருஷ்ணசாமி. நீங்கள் அடுத்துக் கேட்க இருக்கும் கேள்விக்கு நானே பதிலைச் சொல்லிடறேன்.

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில், 3, 5, 7, 9ஆம் இடங்களில் குரு பகவான் வரப் பெற்றவர்கள், லக்னம் 7ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் அஷ்டமஸ்தானத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் தான் சொல்வது, செய்வது எல்லாமே சரி என்று நியாயப்படுத்துபவர்களாகவே என்றும் இருப்பார்கள். இவர்களுக்குப் பொதுவாக மற்றவர்களுடைய உபதேசம், அறிவுரைகள், ஆலோசனைகள் கொஞ்சமும் பிடிக்காது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடும் குணம் மற்றும் தான் செய்வது என்றுமே சரி என்று நியாயப்படுத்தும் சுபாவம் இருக்கும்.

விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

எதிராளாத்து சாஸ்திரிகள் பெண் கோடி யாத்தில் உள்ள லயன்மேன் சுப்ரமணியுடன் ஓடிப் போனது, ரேஷன் கடையில் வாங்கிய சாமான்கள் எடை குறைந்திருப்பது, பஸ்ஸில் கண்டக்டர் பாக்கி 50 பைசாவைத் திருப்பித் தராமல் இருப்பது, பிராமணர்கள் நமக் கேன் வம்பு என்று எல்லா விஷயத்திலும் ஒதுங்கிப் போவது எல்லாமே கிருஷ்ணசாமிக்கு இப்போது நியாயமாகவே பட்டது.

மறுநாள் காலை தெருவே அல்லோலகலப்பட்டது. கிருஷ்ணசாமி யாத்து பக்கத்து ஆத்து வாசலில் ஒரே கூட்டம். ராமசாமி பரந்து விழுந்துகொண்டு கிருஷ்ணசாமி கிரகத்தில் நுழைந்தார்.

என்ன கிருஷ்ணசாமி. தெருவே அல்லோலகலப்பட்டுக்கொண்டு இருக்கு. உங்க பக்கத்தாத்தில் திருட்டு போய் உள்ளது. பரப்பிரம்மம் மாதிரி உட்கார்ந்துண்டு இருக்கே.

தெரியும் . . . திருடவந்ததும் தெரியும் . . . திருடிக்கொண்டு போனதும் தெரியும்.

என்ன கிருஷ்ணசாமி சொல்லறே . தெரிந்தும் ஏன் போலீஸுக்குத் தகவல் கொடுக்கலே அல்லது எங்களுக்கு எல்லாம் போன் போட்டுக் கூப்பிட்டு இருக்கலாமே .

ராமசாமி. போனமாசம் நான் கோயம்புத்தூர் போனது தெரியும் இல்லையா. பக்கத்தாத்து கோபாலனை இரண்டு நாளைக்குக் கொஞ்சம் ஆத்தைப் பார்த்துக்கோன்னு சொன்னேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா. இதெல்லாம் என்னோட வேலையில்லை . . . வேணும்னா போலீஸ் ஸ்டேஷன்லே சொல்லிட்டுப் போன்னு ஏளனமா சொன்னான் . . .

அதனாலே . . .

அதான் . . . அவனும் போலீஸ்லே போய் புகார் கொடுக்கட்டுமேன்னு இருந்துட்டேன். நீதான் சொல்லி இருக்கியே. திருடன் வயத்துலே நான் ஏன் அடிக்கணும். அவனுக் குக் கிடைக்க வேண்டியது கிடைக்கட்டுமே . . . அன்று கோபாலன் செஞ்சது நியாயம்னா இன்று நான் செஞ்சதும் நியாயம்தான் . . . நியாயப்படுத்தினார் கிருஷ்ணசாமி.

தலையில் அடித்துக்கொண்டார் ராமசாமி. ‘இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்று திருவள்ளுவர் சொன்னார். ஆயிரம் வள்ளுவர்கள் வந்தாலும் இதுபோன்ற ஆத்மாக்களைத் திருத்தவே முடியாது. திருந்தக்கூடாது என்பதும் கலியுக நியாயம் போல் உள்ளது. மூன்றாம் இடத்தில் குரு பகவான் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்வதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லை என்று ஜோஸ்யர் சொன்னாரே . . . அவர் சொன்னதில் உள்ள நியாயம் இப்போது தான் எனக்கே புரிகிறது . . . முணுமுணுத்துக் கொண்டே நடையைக் கட்டினார் ராமசாமி . . .


Contact Astrologer