அவசர விஷயமாக பெங்களூர் சென்று விட்டு லால்பாக் எக்ஸ்பிரஸில் திரும்பினார் கிருஷ்ணசாமி. சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் மாமி சொன்னாள் ‘பார்த்து இறங்குங்கோ… வயசு ஆயிடுத்து… தடுமாற்றமும் வந்துடுத்து…’

மாமியை முறைத்தவாறே இறங்கிய கிருஷ்ணசாமி சற்றுத் தடுமாறி ப்ளாட்பாரத்தில் விழப்போனவர் சமாளித்துக் கொண்டு எழுந்தார். கால் சுளுக்கிக் கொண்டுவிட்டது. மாமியைத் திட்டலாம் என நினைத்தவர் முன்னால் ஒரு பையன் வந்து நின்றான்.

“மாமா.. இந்த வீல்சேரில் ஏறிக்குங்கோ… நான் வெளியில் கொண்டு உங்களை விடறேன்…’’

தெய்வம்போல் அந்த பையன் வந்ததை நினைத்த கிருஷ்ணசாமி வீல்சேரில் ஏறிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்தார்.

“ரொம்ப நன்றியப்பா… இந்தா… இந்த ஐம்பது ரூபாயை வைச்சுக்கோ…’’

“மாமா… எனக்கு காசெல்லாம் வேண்டாம்… ப்ளஸ்டூ பரிட்சை எழுதறேன்… நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணணும்னு எனக்கு ஆசிர் வாதம் பண்ணுங்கோ… அது போதும் மாமா…’’

அதிர்ந்து போனார் கிருஷ்ணசாமி… இந்தக் காலத்திலே பணத்தை வேண்டாம்னு சொல்றானே… ஜோஸ்யர் மாமா பரோபகாரம் பற்றிச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணுவேப்பா… பகவான்கிட்டே… நானும் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்…’’

ஆட்டோ ஒன்றை பிடித்து வீட்டுக்குப் புறப்பட்டார் கிரிஷ்ணசாமி.

சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்தார்.

“வா ராமசாமி… வா… வா… உட்கார்…’’

“எங்கே திடீர்னு பெங்களூர் கிளம்பிட்டே கிருஷ்ணசாமி.”

“சொல்ல முடியாத விஷயம் திடீரெனப் போக வேண்டிய நிர்பந்தம்… அதான் போய் விட்டு உடனே திரும்பிட்டேன்…’’

“என்ன கிருஷ்ணசாமி… தாங்கி… தாங்கி நடக்கிறே… என்ன ஆச்சு…’’ கேட்டார் ராமசாமி.

சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்ததை விவரித்தார் கிருஷ்ணசாமி.

‘‘ஜோஸ்யராத்துக்குப் போகலாம்னு கிளம்பினேன். உனக்கு முடியலேன்னா… நாளைக்கு போய்கலாம்… உடம்பை பார்த்துக்கோ…’’

‘‘முடியலேன்னு சொல்றது பிரயோஜனம் இல்லே.. காலிலே அடிபட்டுதேன்னு வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறதுனாலே ஒரு பலனும் கிடைக்கப்போறது இல்லே. நடக்க முயற்சி செய்தால்தான் எனக்கும் நம்பிக்கை வரும்… வா… போகலாம்…’’

‘‘வாங்கோ… வாங்கோ…’’ வரவேற்றார் ஜோஸ்யர்.

சென்ட்ரல் ஸ்டேஷனில் தடுக்கி விழுந்ததிலிருந்து, பையன் உதவி செய்தது மற்றும் வீடு வந்து சேர்ந்தவரை நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தார் கிருஷ்ணசாமி.

“மாமா நீங்க சொன்ன மாதிரியே அந்த பையனின் பரோபகார சிந்தனை எனக்கு மனசிலேயே நின்னுண்டே இருக்கு…’’ அங்கலாய்த்தார் கிருஷ்ணசாமி.

“கிருஷ்ணசாமி நீர் தடுக்கி விழுந்ததும் பையன் உதவிக்கு வந்தானேன்னு அவனுடன் வீல்சேரில் வந்திருக்கக் கூடாது…’’

“என்ன சொல்றேள் மாமா… கால் சுளுக் கிண்டதும் ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியலை… அஸாத்ய வலி வேறு… ஆபத் பாந்தவன் மாதிரி அந்த பையன் உதவிக்கு வந்தான்… பிரதி உபகாரம் பார்க்காம உதவிய அவனுடைய தர்ம சிந்தனை எனக்கு ரொம்பவும் பிடிச்சு இருந்தது..”

“இங்கேதான் நீங்கள் எல்லோருமே ஒன்றை நன்னா புரிஞ்சுக்கனும். அந்த பையனுடைய பரோபகார சிந்தனை ஒஸ்தி தான்.. இருந்தாலும் முயற்சியே செய்யாமல் மத்தவா ஆசிர்வாதம் மட்டும் பெற்று அவனால் பாஸ் பண்ணிவிட முடியாது. முயற்சியோடு கூடின அனுக்கிரகம்தான் பலன் தரும். பகவான் கிட்டே போய் இதைச் செஞ்சுக் கொடு, அந்த காரியம் எனக்கு நடக்கணும். உங்களைத்தான் நம்பி இருக்கேன்னு சொன்னதாலே மட்டும் பகவான் அனுக்கிரகம் பண்ணிவிட மாட்டார். உங்களுடைய முயற்சியே இல்லாம அவர் அனுக்கிரகத்தைப் பெற முடியாது. நீங்கள் விழுந்த உடனேயே என்னால் நடந்து வெளியே வர முடியும் என்று வைராக்யம், முயற்சி மேற்கொண்டு இருந்தால் உங்கள் முயற்சி பலித்தும் இருக்கும். ராமசாமி வந்து கூப்பிட்டதும் எப்படி உங்களால் நடந்து வர முடிந்தது? இந்த மன உறுதி, முயற்சி சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்திருந்தா இப்போது உங்களுக்கு முழுமையாகவே குணம் தெரிந்து இருக்கும்.

“அடியேனை பார்க்க சில நாள் முன்பு ஒருவர் வந்திருந்தார். மெரைன் இஞ்ஜினிய ரான அவருக்கு கப்பலில் ட்யூடி பார்த்துக் கொண்டிருந்த சமயம் திடீரென ஸ்ட்ரோக் வந்து இடது பக்கம் கை, கால் பாதிக்கப் பட்டன. டாக்டர் கைத்தடி ஊன்றிதான் நடக்க முடியும் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவருடைய விடாமுயற்சி, தன்னம்பிக்கை கைத்தடி இல்லாமல் தன்னால் நடக்க முடியும் என்ற மனோதைர்யம்… இப்போது அவர் எவருடைய உதவியும் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் தனியாகவே சென்று வருகிறார். கடவுளை மட்டும் அவர் நம்பிக் கொண்டு இருந்தால் காரியங்கள் நடக்குமா… மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்தான். கோயில் மற்றும் பொது இடங்களில் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு வளர வேண்டும். என்றாலும் அதற்கும் முயற்சி இல்லாமல் பலன் கிடைத்து விடாதே… பரோபகாரத்தில் இரண்டு பக்கமும் பலன் கிடைக்கிறது. செய்பவருக்கும் பலன். சேவையை அனுபவிப்பருக்கும் பலன். பலனை அனுபவிப்பவர் முயற்சி மேற்கொள்ளவில்லையே என்று நினைக்கத் தோன்றும். அவருக்கும் இதுபோன்ற முயற்சியில் தானும் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை இந்த பரோபகாரம் ஏற்படுத்திவிடும். முயற்சியுடன் கூடிய பரோபகாரங்களை மேற்கொண்டால் பலன் நமக்கு நாம் நினைப்பது போலவே சீக்கிரம் கிடைத்துவிடும். இந்த உண்மையை கிருஷ்ணசாமி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

“சென்ட்ரல் ஸ்டேஷனில் பையன் உங்களுக்கு உபகாரம் செய்ததினால்… நீங்கள் அவனுக்கு ஆசிர்வாதம் செய்ததினால் மட்டும் அவனால் பரிக்ஷையில் பாஸ் பண்ணிவிட முடியாது. படிக்கணும்… அவனுடைய முயற்சியை கைவிடக் கூடாது. பரோபகாரம் என்பது அவனுடைய முயற்சிக்கு உறுதுணை யாகச் செயல்படும். அவனுக்கு பிரதி உபகாரம் செய்ய நினைத்த உங்களுக்கு அவன் ஒரு பாடத்தைச் சொல்லிக்கொடுத்துள்ளான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’.

“என்ன… எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்துள்ளானா.. என்ன சொல்கிறீர்கள்.. புரியலையே…” கேட்டார் கிருஷ்ணசாமி.

“ஆமாம் கிருஷ்ணசாமி… என்னைப் போலவே மற்றவர்களையும் தெய்வத்தையும் நம்பிக்கொண்டே இருக்காதீர்கள் என்பதுதான் அவன் சொல்லித் தரும் பாடம். முடியும் என்ற மன உறுதியை ஏற்படுத்திக்கொண்டு முயற்சி செய்து நடக்க எத்தனித்து இருந்தால் நிச்சயம் உங்களால் சென்ட்ரல் ஸ்டேஷன் ப்ளாட்பாரம் முழுவதும் நடந்து வெளியே வந்திருக்க முடியும்.. ஐயோ… அடிபட்டு விட்டதே. நடக்க முடியாதே… என்ற மனோ பாவம் மற்றும் ஒருவர் உதவி செய்ய வருகிறார் அவரது உதவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அற்ப அபிலாஷை உங்களது முயற்சிக்கு தடை போட்டுவிட்டது. நான் உங்களிடம் பணம் எதிர்பார்க்கவில்லை. ஆசீர்வாதத்தைதான் எதிர்பார்க்கிறேன் என்று அந்தப் பையன் சொன்னது மற்றவர்களது உதவியை என்றுமே எப்போதுமே எதிர்பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள் என்று சொல்வ தாகவும் எடுத்துக்கொள்ளலாமே. மற்றவர் களுக்கு உதவுவதாக நினைத்து நீங்கள் உங்களது மனோ தைரியத்தை இழக்கிறீர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது நியதி. ஆனால் முன்பின் தெரியாதவர்களுக்கு உதவக் கூடாது என்பதும் நியதிதான். ஏன் என்றால் அந்த உபகாரம் உங்களுக்கு அபகாரமாகவும் ஆகிவிடலாம். புரியலையா… பெரிய இழப்பையும் தந்துவிடலாம்..

சந்திர லக்னத்து 3, 6, 8, 12ஆம் இடங் களில் சந்திரன் வரப்பெற்றவர்கள் மற்றவர் களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவே இருந்தாலும் தன்னம் பிக்கை இழந்தவர்களாகவும், மற்றவர்கள் நமக்கும் உதவி செய்வார்களா என்ற எதிர் பார்ப்பு உடையவராகவும் இருப்பார்கள். லக்னம் 5, 7, 10ஆம் இடத்தில் சனீஸ்வரன் வரப்பெற்ற வர்கள் மற்றவர்களையே அதிகம் நம்புபவர் களாகவும், முயற்சியே மேற்கொள்ளாமல் மற்றவர்களது தயவையே அதிகம் நாடுபவர் களாகவும் இருப்பார்கள்.

விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள் இருவரும். மறுநாள் காலை தன் சைக்கிளில் பேங்க்குக்குப் புறப்பட்டார் கிருஷ்ணசாமி. . பேங்கிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அதை தான் கொண்டு வந்த மஞ்சள் பையில் போட்டு முன்பக்கத்தில் சைக்கிளில் மாட்டிக் கொண்டு புறப்பட்டார். முன்னால் சைக்கிளில் சென்றுகொண் டிருந்த ஒருவரின் பையிலிருந்து சில ரூபாய் நோட்டுகள் ரோடில் விழுந்துகொண்டு இருப்பதைப் பார்த்தார் கிருஷ்ணசாமி. .

‘‘சார்… சார்… உங்கள் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்கள் விழுந்துகொண்டே இருக்கே. . பார்க்காமல் போறேளே…’’ கத்தினார் கிருஷ்ணசாமி.

‘‘அடடா… சார்… கொஞ்சம் நீங்களும் ஹெல்ப் பண்ணுங்களேன் நோட்டுக்களை எடுத்துக் கொடுங்களேன்…’’ உதவி கோரினார் அந்த ஆசாமி. .

தன் சைக்கிளை சட்டென நிறுத்திவிட்டு நோட்டுக்களைப் பொறுக்கத் துவங்கினார் கிருஷ்ணசாமி… முடிந்தவரை நோட்டுக்களை எடுத்த கிருஷ்ணசாமி நிமிர்ந்து அந்த ஆசாமியைத் தேடினார்… அந்த ஆசாமியும் இல்லை… தன் சைக்கிளும் இல்லை… கையில் உள்ள நோட்டுக்களைப் பார்த்தார். எல்லாமே குழந்தைகள் விளையாடும் டம்மி நோட்டுக்கள்.. திகைத்துப்போய் வாய் பேச முடியாமல் மௌனமானார்.

முன் பின் தெரியாதவர்களுக்கு உபகாரம் செய்யாதீர்கள் என்று ஜோஸ்யர் மாமா சொன்னது நினைவுக்கு வந்தது.’’


Contact Astrologer