தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – அக்டோபர் 2011
தேதியூர் V.J. ராமன்

பகல் 12 மணி… கடிகாரம் 12 முறை அடித்த களைப்பில் மௌனமானது.

காலை முதலே மீனாஷியிடம் போட்ட தேவையில்லாத வாக்குவாதத்தால் கிருஷ்ணசாமியின் மனமும் ஓய்ந்தது. இனிமேல் பேச்சைக் குறைத்து மௌனமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் கிருஷ்ணசாமி. சாப்பிட்ட களைப்பில் ஈசி சேரில் அமர்ந்தவரின் கண்ணில் பட்டது இந்த வார சஞ்சிகை ஒன்று. கடைசிப்பக்கத்தில் வந்துள்ள கட்டுரையைப் படிக்கத் தொடங்கினார்.

டெலிபிரிண்டர் கருவியைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிஸன் தான் கண்டுபிடித்த கருவியைத் தயாரிக்கும் உரிமையை ஒரு நிறுவனத்துக்குத் தர விரும்பினார். அவருடைய மனைவி நீங்கள் 20 ஆயிரம் டாலருக்குக் குறையாமல் பெற்றால்தான் உங்கள் அரிய உழைப்புக்கு உரிய பலன் கிடைத்ததாக ஆகும் என்று கட்டளை போட்டார். ஆனால் அந்தக் தொகை மிக அதிகம் என்றே எடிஸன் நினைத்தார். சில நாட்கள் கழித்து அந்தக் கம்பெனி பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்டது. ஆனால் எடிஸன் அதிக தொகை எதிர்பார்த்து தயங்கினார் என்று நினைத்த அந்தக் கம்பெனியின் நிர்வாகி மிஸ்டர். எடிஸன், நாங்கள் ஒரு லக்ஷம் டாலர் உங்களுக்குத் தரலாம் என முடிவுசெய்துள்ளோம்… சம்மதமா… என்றார்.

இதைக் கேட்டதும் அதிர்ந்துபோனார் எடிஸன். இருபதாயிரம் டாலரே பெரிய தொகை என்று நினைத்த எடிஸனுக்கு மௌனம் தந்த பரிசுதான் ஒரு லக்ஷம் டாலர்.

மௌனமாக இருப்பதில் இவ்வளவு நன்மை இருக்கிறதா.. இனிமேல் பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தார் கிருஷ்ணசாமி.

மாலை வழக்கம்போல் ஜோஸ்யரைப் பார்க்கலாம் என்று கிளம்பினார் கிருஷ்ணசாமி. போகும் வழியில் ராமசாமியையும் கூப்பிட்டுக் கொண்டு போகலாம் என்று அவர் வீட்டுக்குள் நுழைந்தார். கதவைத் தட்டலாம் என்று எண்ணியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது… உள்ளே மாமி ராமசாமியைச் சரமாரியா சாடிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

காலம்பறயான கிருஷ்ணசாமியாம்… சாயந்தரமானா ஜோஸ்யராம்… குடும்பம்னு ஒன்று இருக்கேனு கொஞ்சமாவது எண்ணம் இருக்கா உங்களுக்கு… அப்படி என்ன வெட்டிப் பேச்சு வேண்டிருக்கு… நான் ஒருத்தி மாடா உழைச்சுண்டு இருக்கேன்… பேச்சு நீண்டுகொண்டே போனாலும் ஒரு வார்த்தைகூட ராமசாமியிடமிருந்து வந்ததா காதில் விழலே… ஒரு பத்து நிமிஷம் வெளியில் இருந்து லக்ஷார்ச்சனையைக் கேட்டுக்கொண்டு இருந்த கிருஷ்ணசாமி கதவைத் தட்டலாம் என்று எண்ணும்போது திடீரெனக் கதவைத் திறந்தார் ராமசாமி.

அடடே… கிருஷ்ணசாமியா! வாங்கோ… வந்து ரொம்ப நாழியாச்சா என்ன… யாரோ கதவைத் தட்டறாப்போல இருக்கேன்னுதான் கதவைத் திறந்தேன்.

நான் தட்டலாம்ன்னு நினைக்கும்போதே நீங்க திறந்துட்டேள். ஏதோ உள்ளே சத்தம் வலுவா கேட்டதேன்னு கொஞ்சம் வெளியே நின்னேன்.

ஹி..ஹி… உள்ளே டிவி பெரிசா ஓடிண்டு இருக்கு… அதான் ஒன்றுமே காதில் விழலே.. ஜோஸ்யராத்துக்குத்தானே. இருங்கோ நானும் வரேன்.

என்னமா சமாளிக்கிறார் ராமசாமி. மனைவி விஷயத்திலே ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கான்னு நினைச்சேனே. என் கணக்கு எப்போதுமே தப்பாவே இருக்கே. மனதுக்குள் சிரித்துக்கொண்டார் கிருஷ்ணசாமி.

பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள் இருவரும்.

என்ன ராமசாமி. ஆத்திலே ஏதாவது பிராப்ளமா. மாமி உங்களைச் சாடிண்டு இருந்தாளே.

தினம் தினம் நடக்கறதுதான் கிருஷ்ணசாமி. நான் மௌனமா கேட்டுண்டு இருப்பேன். அரைமணி நேரம் அவளே விடாமப் பேசி ஓஞ்சு போயிடுவா.

என்னால அப்படி இருக்க முடியலையே ராமசாமி. இன்னிக்குக் காலம்பறகூட எங்காத்திலேயும் சண்டைதான். அவ பேச. நான் பேச முக்கால் மணிநேரம்… எங்களுக்கு முடியாம நிறுத்தினாத்தான் உண்டு. எப்படி உன்னால் பொறுமையா மௌனமா இருக்க முடியறது.

ஜோஸ்யராத்து வந்தாச்சு. இதைப்பத்தி அப்புறம் பேசலாம்.

வாங்கோ. வாங்கோ. வரவேற்றார் ஜோஸ்யர்.

கொஞ்ச நாழி முன்னாடி வந்திருக்கப்படாதோ மாமா… வெள்ளிக்கிழமையாச்சேன்னு புடிகொழக்கட்டை பண்ணியிருந்தேன். இப்போதான் பாக்கி இருக்கிறதையெல்லாம் பக்கத்தாத்துக்கும் எதிர்தாத்துக்கும் கொடுத்துட்டு வந்தேன். ஜோஸ்யராத்து மாமி சொன்னாள்.

சொல்லும்போதே நாக்கில் ஜலம் ஊறி வற்றிப் போனது கிருஷ்ணசாமிக்கு. சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மௌனமா பேசாமல் இருப்பதைப் பார்த்த ஜோஸ்யர்,

என்ன மௌனமா இருக்கேள் இரண்டு பேரும். ஏதேனும் புது சமாச்சாரம் உண்டா.

இந்த மௌனத்தைப் பத்திதான் உங்கள்டே கேட்கலாம்னு வந்தோம். இரண்டு ஆத்திலும் நடந்த சமாச்சாரங்களை விவரித்த கிருஷ்ண சாமி கேட்டார் எப்படி மாமா ராமசாமியால் மட்டும் மௌனமா இருக்க முடியறது.

மௌனம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கிருஷ்ணசாமி.. ‘Silence is powerful’ என்று சும்மாவா சொன்னார்கள். ரகஸ்யங்களுக்குள்ளே மௌனமாகவே இருக்கிறேன் என்கிறான் கிருஷ்ணன் கீதையிலே.. பேசுவதைக் காட்டிலும் பேசாமல் இருப்பது நல்லது என்கிறது விதுரநீதி. மௌனம் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். பரிசுகளையும் பெற்றுக்கொடுக்கும்.

என்ன சொல்றேள் மாமா… புரியலையே… கேட்டார் கிருஷ்ணசாமி.

சண்டையோ சச்சரவோ.. ப்ரளயமே வந்தாலும் மௌனம் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்தால் உலகத்தையே வென்று விடலாம்… பிரத்யட்ச பரமேஸ்வரரின் அவதாரமான பரமாச்சார்யாள் இந்த மெட்ராஸ்தான் தனக்கு மௌனம் என்பதன் அர்த்தத்தை உணரவைத்தது என்கிறார். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா..

தெரியாதே..என்ன அப்படி நடந்தது.. வியப்புடன் கேட்டார்கள் இருவரும்.

அன்று பரமாச்சாரியாளின் பூஜையைப் பார்க்க சென்னையிலே ஏகப்பட்ட கூட்டம்… அங்கங்கே எல்லோரும் பேசிக்கொண்டும் கூக்குரல் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள். “SILENCE PLEASE” போர்டுகளை மாட்ட ஆரம்பித்தார்கள் மடத்து நிர்வாகிகள். இதைக் கவனித்த பரமாச்சார்யாள் அந்த போர்டுகளை அப்புறப்படுத்தச் சொன்னார். நிர்வாகிகளுக்கு ஒன்றும் புரியலே என் பரமாச்சார்யாள் அப்படிச் சொல்றார்ன்னு. கூட்டத்தைப் பார்த்துத் திடிரெனப் பேச ஆரம்பித்தார்.

ஏன் அந்த போர்டுகளைக் கழற்றச் சொன்னேன் தெரியுமோ. இப்போதுதான் நமக்கு ஒரு பாடம் படித்து பாஸ் பண்ற சந்தர்ப்பம் வந்திருக்கு. இத்தனை சப்தம் கூச்சல்களுக்கு மத்தியிலே அதையெல்லாம் கவனிக்காமல் நாம் பூஜை பண்ண முடியுமா என்ற டெஸ்ட் வந்திருக்கு. இதை நழுவவிடக் கூடாது என்று நினைத்துதான் அந்த போர்டுகளை எடுக்கச் சொன்னேன். ஈஸ்வரன் அனுக்கிரகத்தால் இப்போதெல்லாம் நான்பாட்டுக்கு எத்தனை சப்தம் இருந்தாலும் பூஜை பண்ணிக்கொண்டு இருக்கப் பழகிவிட்டேன். எனக்கு சௌகர்யமா பூஜை பண்றபோது நீங்கள் பேசாமல் இருக்கும்படி பண்ண வேண்டும் என்பது எனது உத்தேசம் இல்லை. உங்களுக்கு அதன் பிரயோசனம் தெரிய வேண்டும் என்றுதான் நினைச்சேன். இத்தனை நாள் உங்கள் இஷ்டப்படி பாடி, பேசி பஜனை எல்லாம் செய்தாகிவிட்டபடியால் இப்போது பூஜையின் போது மௌனமா, மானஸீகமா பிரார்த்தனை பண்ணிக்கொள்ளச் செய்வதில் நியாயம் இருக்கிறது என்று தோன்றிற்று. சும்மா இருக்கும்போது கிடைக்கும் சுகத்தின் அருமை உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என்ற ஆசையிலே சொன்னேன்… பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட கூட்டம் கப்சிப் என்று ஆனது.

என்ன சப்தம் போட்டாலும் கேட்டாலும் மௌனத்தை கடைப்பிடிக்கப் பழக வேண்டும் என்று பரமாச்சார்யாள் சொன்னதைத்தான் ராமசாமியும் செஞ்சுருக்கார். இல்லையா ராமசாமி.

ஆமாம் என்பது போல மௌனமாகவே தலையை ஆட்டினார் ராமசாமி.

மௌனமா காரியத்தைச் சாதிச்சுக்கறவாளைப் பற்றி ஜோதிஷ ரீதியா தெரிஞ்சுக்க முடியுமா?

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், 3, 7, 11ஆம் இடங்களில் சனிச்வரன் இருக்கறவா மௌனமா எல்லாக் காரியங்களையும் சாதிச்சிக்கிறவா. இவா தனிமையை அதிகம் விரும்புபவர்களாகவும், என்ன நினைத்துக் காரியங்களைச் செய்கிறார்கள் என்று மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

என்ன புரிஞ்சுதா கிருஷ்ணசாமி.

மௌனமா புன்னகை பூத்த இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்.

மறுநாள் காலை

ஏன்னா… இன்னிக்குச் சனிக்கிழமை… ராத்திரிக்குப் பலகாரம்தான். என்ன பண்ணட்டும்.

நீ எதைச் செஞ்சாலும் சாப்பிடறேன்.

ஏதோ வம்பில் மாட்டத்தான் இவள் இப்படியெல்லாம் பேசறா என்பதைப் புரிந்து கொண்ட கிருஷ்ணசாமி, ஜோஸ்யர் சொன்ன மாதிரி மௌனத்தைக் கடைப் பிடிப்பதுதான் உத்தமம் என்பதைப் புரிந்துகொண்டார்.

ஏன்னா… நான் சொல்லின்டே இருக்கேன்… என்ன டிபன் வேணும்னு கேட்டா பேசாம இருந்தா என்ன அர்த்தம்… கேட்டா கேட்ட கேள்விக்குக் பதில் சொல்றது இல்லே. அடுத்தவா கேட்டா உடனே பதில் சொல்றேள்.. நான் கேட்டா மட்டும் ஏடாகூடமா பேசறேள்.. என்னைக் கண்டாலே உங்களுக்கு இப்போ தெல்லாம் பிடிக்கிறது இல்லே.. வயசு ஆயிடுத்துன்னாலே மதிப்பு குறைச்சல்தான்.

இது ஏதுடா வம்பா போச்சே.. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிண்டு இருக்கே.. கிருஷ்ணசாமி எதுவும் பேசாமல் மௌனமானார்.

மாமி பேசிக்கொண்டே போனார்… அரைமணிக்குமேல் வாயடைத்து மௌனம் காத்தார் கிருஷ்ணசாமி.

மாலை 7 மணி… ஏன்னா… நீங்க ரொம்ப நாளா கேட்டுண்டு இருந்த புடிக் கொழுக்கட்டை பண்ணியிருக்கேன்… சாப்பிடுங்கோ..

ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் கிருஷ்ணசாமி…

நேற்று ஜோஸ்யராத்து மாமி சொன்னபோதே நாக்கில் ஜலம் ஊறிச்சே… மௌனத்துக்குக் கிடைச்ச பரிசாகவே இதை நினைச்சார் கிருஷ்ணசாமி…


Contact Astrologer