தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – நவம்பர் 2011
தேதியூர் V.J. ராமன்

ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வாக்கிங் போகக் கிளம்பினார்கள்.

“அதோ பார் கிருஷ்ணசாமி… அந்த ஸ்கூட்டர்ல போறது நம்ம தெரு பட்டாபி பெண் மாதிரி இல்லே… யாரோ ஒரு பையன் கூடப் போறாளே … பையனைப் பார்த்தா ப்ராமணப் பையன் மாதிரி இல்லையே…”

“நீ சொல்றது சரிதான் ராமசாமி… குடும்பமே ரெண்டுங் கெட்டான் குடும்பம்… தாயைப் போலத் தானே பெண்ணும் இருப்பாள்.”

“என்ன சொல்றே கிருஷ்ணசாமி.”

“போன வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டாபியை ஒரு விஷயமாகப் பார்க்கப் போயிருந்தேன். தலையிலே கையை வெச்சுண்டு சோகமா இருந்தான்.”

“என்ன பட்டாபி … சோகமா இருக்காப் போல இருக்கு…”

“அடுத்த வீட்டுக் கோணார் பையன் ஓடிப் போயிட்டான்.”

“சரி… அவன் ஓடிப்போனதற்கு நீயேன் வருத்தப்படறே” கேட்டேன்.

“என் பெண்ணை இழுத்துண்டு ஓடிப் போயிட்டான்… வருத்தப்படாம என்ன செய்யச் சொல்றேள்”

சித்த இருங்கோன்னு சொல்லிட்டு உள்ளே போய் பெண்டாட்டியிடம் மாமாவுக்குக் காபி கொடு. வராதவர் வந்திருக்கார்… என்று சொன்னான் பட்டாபி.

என்ன சொன்னா தெரியுமா அவன் பொண்டாட்டி… “வர போற கிழத்துக்கெல்லாம் காபி கொடுக்கறதுதான் என் வேலையா? உங்களுக்குப் பொங்கிப் போடறதே தண்டம். ஒத்தராத்துக்குப் போனா ஏதாவது வாங்கிண்டு போகணும்னு தோண வேண்டாம். வந்ததுதான் வந்ததே. ஒரு பால் பாக்கெட்டாவது வாங்கிண்டு வரப்பிடாதா. தெருவிலே போற வரவாளுக்கெல்லாம் காபி கொடுக்கச் சொல்றேளே. இங்கென்ன கஜானா நிரம்பி வழியறதா…” கத்தினாளே பார்க்கணும்.

“அப்புறம் …”

“அப்புறம் என்ன… விட்டா போதும்ணு கிளம்பிட்டேன். யாரோட சேர்க்கையும் அந்த குடும்பத்திலே சரியில்லே. இப்போ புரியறதா ஏன் அந்தப் பொண்ணு யாரோடயோ சுத்தறான்னு.”

“சரி, சரி… இது விஷயமா நாளைக்கு ஜோஸ்யரிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.”

மறுநாள் ஜோஸ்யராத்துக்கு வந்தார்கள் இருவரும்

உள்ளே இரண்டு பேர் பேசிண்டு இருப்பது புரிந்தது. எட்டிப்பார்த்தார் கிருஷ்ணசாமி.

அடடே… நேத்திக்கு நாம பார்த்த பட்டாபி பெண்ணும் அந்தப் பையனும் தானே ஏதோ பேசிண்டு இருக்கா. தூக்கிவாரிப் போட்டது கிருஷ்ணசாமிக்கு. அவர்கள் புறப்பட்டதும் உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.

“வாங்கோ… வாங்கோ… சேர்ந்தே இருக்கற வாளையும் சேர்ந்தே இருக்கக் கூடாதவர்களையும் நன்னா பார்க்கறது எனக்கே ஆச்சரியமா இருக்கு.”

“எங்களுக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு… இப்போ வந்துட்டுப் போனாளே அந்தப் பொண்ணு பட்டாபியோட பொண்ணு… இந்த ஜோடியைப் பத்திதான் நாங்களும் கேட்கலாம்னு வந்தோம்…”

“அப்படியா … இப்போதுதான் அட்வைஸ் பன்ணி அனுப்பிச்சேன். வீட்டைவிட்டு ஓடி வந்துட்டாளாம். இந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிண்டா நல்ல இருப்பேன்னான்னு கேட்க வந்தா. அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்காளாம்…”

“அப்போ… இன்னும் கல்யாணம் ஆகலையா”

“சேரக் கூடாத ஜோடி இது… சேர்ந்தால் கொஞ்சநாள்தான் தாம்பத்யம் நிலைக்கும். என்ன சொன்னாலும் கேட்கப் போறதில்லே.”

“இதெல்லாம் ஜோதிடரீதியாச் சொல்ல முடியுமா…”

“காக்காயும் காக்காயும் நட்பு கொள்ளலாம். காக்காயும் கழுகும் நட்புகொண்டால் என்ன ஆகும்” புதிர் போட்டார் ஜோஸ்யர்.

“இது என்ன காக்கா கழுகு கதை… கேள்விப்பட்டதே இல்லையே…” கேட்டார் கிருஷ்ணசாமி

காக்கா ஒன்று சோகமாக இருந்ததைப் பார்த்த குருவி ஒன்று ஏன் சோகமா இருக்கேன்னு கேட்டது. நான் கூடு கட்டியுள்ள மரத்திலே தினம் ஒரு கழுகு வந்து பயமுறுத்துகிறது என்று சொன்னது காக்கா. ‘கவலைப்படாதே நான் வந்து கழுகிடம் பேசறேன்… நீ இருக்கும் இடம் போகலாம் வா’ என்று ஆறுதல் சொன்னது குருவி. கழுகு அங்கு இருப்பதைப் பார்த்த குருவி அதன் அருகில் சென்று சமாதானம்செய்தது. சம்மதம் தெரிவித்த கழுகு காக்காயிடம் ‘நான் இனி எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன். இனி நாம் நண்பர்கள்…’ என்றது. சில நாட்கள் சென்றன. காக்காயிடம் பரிவுடன் சொன்னது கழுகு ‘அந்தக் குருவி உனக்கு நண்பன்தானே. எனக்குக் குருவி முட்டை என்றால் ரொம்பப் பிடிக்கும்… நீ குருவி இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு வந்தால் நாம் இருவரும் சேர்ந்தே குருவி முட்டைகளைச் சாப்பிடலாம்’ என ஆசை வார்த்தை சொன்னது. எதிரி நண்பனாகக் கிடைத்த சந்தோஷத்தில் குருவியின் இருப்பிடம் நாடிச் சென்றது காக்கா. தூரத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவியைப் பார்த்த காக்கா அதன் அருகே சென்று குசலம் விசாரித்தது. ‘என் வீட்டுக்கு உன்னை அழைத்துச் சென்றேனே அன்று.. அதுபோல் இன்று என்னை உன் வீட்டுக்கு அழைத்து போயேன்…’ என்றது. ‘சரி வா’ என்று அழைத்துப் போய் தன் வீட்டைக் காட்டியது குருவி. மகா சந்தோஷத்தில் தன் கூடு திரும்பிய காக்கா, கழுகிடம் சொன்னது ‘குருவியின் வீட்டைப் பார்த்துகொண்டு வந்துவிட்டேன்… நிறைய முட்டைகள் உள்ளன. நாளைக்கு நமக்கு நல்ல வேட்டைதான்…’ மறுநாள் கழுகும் காக்காவும் குருவியின் இருப்பிடம் சென்று பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. குருவிக்குத் தெரியாதா.. காக்கையுடன் நட்புகொண்டால் என்ன ஆகும் என்று… இரவோடு இரவாகக் கூட்டைக் கலைத்து கொண்டு வேறு இடம் சென்றுவிட்டது.

“அப்புறம்…” ஸ்வாரஸ்யத்துடன் கேட்டார்கள் இருவரும்

“அப்புறம் என்ன… கோபம்கொண்ட கழுகு ‘பொய் வார்த்தைகள் கூறி என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்…’ என்று காக்காவை ரண களப்படுத்திவிட்டுச் சென்றது. இதிலிருந்து என்ன தெரிகிறது.. கூடாதவர்களுடன் சேர்ந்தால் எப்போதுமே நிம்மதி இழக்கத்தான் வேண்டிவரும்.

“இந்த ஜோடி என்னவாகும் என்று கேட்டால் காக்கா கழுகு கதை சொல்றேளே…”

இன்னும் புரியலையா கிருஷ்ணசாமி… “அந்தப் பையன் வஞ்சகமான எண்ணத்துடன் அவளை அனுபவிப்பதில்தான் குறியா இருக்கான். கல்யாணம்பண்ணி சுகத்தை அனுபவித்துவிட்டுப் பின்னால் அவளைக் கழட்டி விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் பழகறான் என்கிறது அவளுக்குப் புரியலே. காக்கா கழுகு நட்பு போலத்தான் இவர்கள் நட்பும். சிறிது காலம்தான் நீடிக்கும்… கழுகின் நோக்கமே குருவியின் முட்டைகள் இருக்கும் இடம் தெரிந்ததும் காக்காவைக் கழட்டிவிடுவதுதான்.

“இதை அந்தப் பெண்ணுக்குப் புரிய வைச்சேளா…” ஆதங்கத்துடன் கேட்டார் ராமசாமி.

“புரியவைக்காமல் இருப்பேனா… என்ன… அவளுடைய அப்பா பட்டாபியும் லவ் மேரேஜ். அவாளுக்குள்ளே ஒத்துப் போகலை என்பதைத் தினம் தினம் அந்தப் பெண்ணும் பார்த்து கொண்டுதானே இருக்கா… இதைச் சொன்னாப் புரிஞ்சுகிற வயது அந்தப் பெண்ணுக்கு இப்போது இல்லை. அந்த பகவான்தான் காப்பாத்தனும். ‘தோஷ சாம்யாத் தம்பதி பாக்யவான்’னு சொல்றது ஜோதிட சாஸ்திரம். ஜோதிஷரீதியாக ஒற்றுமை என்பது இருவர் ஜாதகரீதியாகவும் இல்லை. அனுபவம்தான் இவர்களுக்குப் படிப்பினையைக் கற்றுத் தரும்; தரனும்…”

“நமது குலத்திலேயே நிறையப் பையன்கள் இருக்கும்போது வேறு குலத்துப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எப்படி இப்படிப்பட்ட பெண்களுக்குத் தோணறது…” கேட்டார் கிருஷ்ணசாமி.

ஜாதகரீதியாக சுக்ரன் என்கிறவன் களத்திரகாரகன் திருமணத்தைப் பற்றிக் கூறும் மற்றும் வாழ்க்கைத் துணையை நிர்ணயிக்கும் சுக்ரன் நீச்சத்துவம் வாய்ந்த சனீஸ்வரனுடன் சேர்ந்தால் தன்னைவிடக் கீழ்ப்பட்டவர்களுடன் சேர்க்கை ஏற்படுத்தும் என்கிறது ஜோதிஷ சாஸ்திரம். 7ஆம் இடமான களத்திரஸ்தானம் மற்றும் 8ஆம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய் தனித்தும், சுக்ரன், ராகு, சனீஸ்வரனுடன் சேர்ந்து இருந்தால் பெரும்பாலும் தன்னைவிடக் கீழ்ப்பட்டவர்களையே இருபாலரும் விரும்புவார்கள். லக்னம், 3, 5, 7ஆம் இடங்களில் சனியும் சுக்ரனும் சேர்ந்து இருப்பவர்கள் தன் இளமைக் காலம் முதலே கீழ்த்தரமான நட்பு உடையவர்களாக இருப்பார்கள். இதற்குப் பெற்றோர்தான் முழுப்பொறுப்பு என்றும் சொல்லலாம். ஆரம்பகாலம் முதலே நல்ல பழக்கங்களையும் குலவழக்கங்களையும் குடும்பப் பாரம்பரியத்தையும் குழந்தை முதலே சொல்லிப் புரியவைத்தால் இது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பே இருக்காது. பட்டாபி குழந்தைகளைப் பெற்றானே ஒழிய, எந்த அக்கறையும் ஆரம்ப காலம் முதல் எடுத்துக்கொள்ளவேயில்லையே. அவனது நண்பர்களைப் பாருங்கள். சாயந்திரம் 6 மணியானா தெருக்கோடியில் உள்ள டாஸ்மாக் கடையிலே இவனையும் சேர்த்துப் பார்க்கலாம். அவன் பெண்டாட்டி எதற்கும் கட்டுப்படாதவள். தாயைப் போலத்தானே பெண்ணும் இருப்பாள். பொதுவா இது போன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் எவருடைய அறிவுரைகளையோ ஆலோசனைகளையோ என்றுமே மதிக்கமாட்டார்கள். நல்ல புத்திமதி சொல்லி இருக்கேன். நல்ல வழிகாட்ட நல்ல புத்தியைக் கொடுக்க அந்தப் பெண்ணுக்கு நான் வணங்கும் ஈஸ்வரிதான் அனுக்ரஹிக்க வேண்டும்…”


Contact Astrologer