தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – பிப்பிரவரி 2012
தேதியூர் V.J. ராமன்
என்ன கிருஷ்ணசாமி… ‘உடம்பு தேவலையா…’ கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமசாமி..
‘தேவலாம் ராமசாமி… என்ன இருந்தாலும் இந்தப் பாழாப்போன மனசு எதைச் செய்யாதே என்று சொன்னாலும் அதைத்தான் செய்யத் தூண்டுகிறது. விஷயம் தெரியுமா! பட்டாபியோட பொண்ணு…’
‘பக்கத்தாத்து பையனோடு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிண்டாளே அந்தப் பொண்ணா…’
‘ஆமாம். அவளேதான்… நேற்று குரோம் பேட்டை ரயில்வே ஸ்டேஷன்ல…’
‘என்ன ஆச்சு…’ பதற்றத்துடன் கேட்டார் ராமசாமி.
‘காதில் மொபைல் ஹெட் போனை மாட்டிண்டு ரயில் வரதுகூட தெரியாம, பாட்டு கேட்டுண்டே ரயில்வே லயன்மேல நடந்து போயிருக்கா…’
‘அப்புறம்…’
‘அப்புறம் என்ன… பின்னால் வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போட்ட சப்தம், ப்ளாட்பாரத்திலேயிருந்து கத்தினவா சப்தம் எதுவுமே காதிலே விழுந்தாதானே… என்ன பாழாப்போன பாட்டு எப்பப் பார்த்தாலும் வேண்டியிருக்குன்னு புரியலே…’
‘என்ன ஆச்சுன்னு சொல்லாம. ஏதோ மெகாத் தொடர்ல வராமாறி சஸ்பென்ஸா சொல்லிண்டே போறளே…’
‘என்ன ஆச்சு… பரலோகம் போய் சேர்ந்துட்டா. போஸ்ட்மார்டம் அது இதுன்னு பாடியை வாங்க எக்கச்சக்கமா பணம் செலவழிச்சானாம் பட்டாபி’.
‘அடக் கண்ட்ராவியே… சேரக்கூடாத ஜாதகம்ன்னு ஜோஸ்யர் அன்னிக்கே சொன்னாரே. சேரக்கூடாதது, செய்யக் கூடாததையெல்லாம் செய்யவச்சு கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் கேட்க வைச்சுடுத்து பார்த்தாயா’ வருத்தப்பட்டார் ராமசாமி.
‘தப்பை தப்புன்னு தெரிஞ்சே செஞ்சா தண்டனை உடனே கிடைச்சுடறது. நேத்திக்கு ஆயில் அயிட்டங்களை சாப்பிடாதேன்னு டாக்டர் சொல்லியும் ரிஸப்ஷன்ல மஞ்சூரியனை சாப்பிட்டதன் விளைவை உடனே நான் அனுபவிச்சேன். ஜோஸ்யர் மாமா அந்த பொன்னுகிட்டே செய்யக் கூடாததைச் செய்யறேயேம்மா. உங்க அப்பனும் ப்ராமணனா இல்லாம, சாயந்திரம் 6 மணிக்கு மேலே தண்ணி போடறான். விபரீதம் நடக்கும்னு எச்சரித்தாரே.’
‘எல்லாம் தலை எழுத்து’ கிருஷ்ணசாமி ஆத்து மாமி சொன்னாள்.
‘தலை எழுத்து இல்லேடி. தலைமேலே மாட்டிண்டு நடக்கிற கொழுப்பு’.
‘உங்களுக்குன்னா ஒன்னு. மத்தவாளுக்குன்னா வேற. ஊருக்குத்தான் உபதேசம்’ கடிந்துகொண்டாள் மாமி.
‘சரி… சரி… கிருஷ்ணசாமி. சாயந்திரம் ஜோஸ்யர் மாமாவை பார்த்தால் ஏதாவது சொல்வார் கேட்கலாம்’ தன் வீட்டுக்கு கிளம்பினார் ராமசாமி.
‘வாங்கோ ரெட்டையர்வாள்…’ வரவேற்றார் ஜோஸ்யர்.
நடந்த விபரத்தை விவரித்த ராமசாமி. ‘தன் கடமையைச் செய்யறத்துக்கு டாக்டர்லேர்ந்து கடைநிலை ஊழியர் வரைக்கும் லஞ்சம் கொடுத்து பாடியை வாங்க பட்டாபி படாதபாடு பட்டுருக்கானாம். எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு தர்ம சாஸ்திரம் சொல்லறதோ அத்தனையும் நடைமுறையிலே எல்லோரும் செய்யறதை பார்க்கும் போது கலியுகத்திலே மனிதாபிமானமே செத்துப் போயிடுத்தோன்னு தோணறது.’ வருத்தப்பட்டுச் சொன்னார் ராமசாமி.
‘இதுதானா விஷயம். கலியுகம் பிறந்ததன் நோக்கமே தர்மத்தை மக்கள் தொலைத்து, செய்யக் கூடாததையெல்லாம் செய்ய வைச்சு, அதர்மம் தழைத்து, இந்த யுகம் பூர்ணத்துவம் பெற வேண்டும் என்பதுதானே. மறுபடி கிருதயுகம் என்று மறுபடியும் யுகதர்மம் தழைக்க ஆரம்பிக்கும். பட்டாபி பெண் அதிகம் படிக்காதவள். அடுத்தாத்து கோனார் பையனுடன் ஓடியது, ஹெட்போனை மாட்டிண்டு ரயில்வே ட்ராக்கில் நடந்தது எல்லாமே அவளது அறியாமை என்றுகூட சொல்லலாம். IAS படிச்ச பொண்ணை அவளோட கூடப் படித்த இன்னொரு பையன் லவ் பண்ணி IPS போஸ்ட் கிடைச்சதும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா 50 லட்சம் வரதட்சனை, 100 பவுன் நகை, கார் எல்லாம் தந்தால்தான் முடியும்ன்னு, அவளிடம் எல்லா சுகங்களையும் கண்டுவிட்டு சொல்லியிருக்கான். இந்த செய்தி நேற்றைய பிரபல தமிழ் தினசிரியிலே வந்திருக்கு.
ஒரு பொண்ணை ஏமாத்தறது தவறு, வரதட்சனை வாங்கறது தவறு என்று தெரிந்தும் அந்தப் பையன் அப்படி நடந்துருக்கான்னா இந்தப் பொன்ணு படிச்சிருந்தும் என்ன பிரயோஜனம். தினம் பேப்பர்லே, காதலித்து ஏமாற்றும் பையன்கள் பற்றிய செய்தி வராத நாளே இல்லை. அப்படியிருந்தும் செய்யக் கூடாதத் தவறைப் பெண்கள் செய்துகொண்டு தானே இருக்கிறார்கள். தன் பெற்றோர் தங்கள் வாழ்க்கைத் துணையை நல்லபடியாக அமைத்துக்கொடுப்பார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா. தமிழ்நாட்டில்தான் காதலித்து ஏமாற்றும் ஆண்கள் அதிகம். அதிலும் ஏமாற்றப்படும் ப்ராமணப் பெண்களே அதிகம் என்கிறது சமீபத்திய பத்திரிக்கை செய்தி. தெரிந்தே செய்யும் தவறுகளுக்குப் பரிகாரம் எதுவும் சொல்லமுடியாது. இங்கு “குப்பையைக் கொட்டாதீர்கள்” என்று போர்டு வைத்தால், அங்குதானே குப்பையைக் கொட்டுகிறார்கள். எச்சில் துப்பாதீர்கள் என்று எழுதப்பட்ட சுவற்றின் மீதுதான் அதிகம் துப்புகிறார்கள். இப்பேர்பட்டவர்களை ஜோதிஷ ரீதியான பரிகாரங்களினால் திருத்துதல் என்பது நடவாத காரியம். படிப்பினைகளால்தான் இவர்கள் தன்னை உணர்ந்துகொள்ள இயலும். செய்யக்கூடாத காரியங்களைத் தெரிஞ்சேதான் எல்லோரும் செய்கிறார்கள். அன்னா ஹசாரே போன்று நூறு அன்னா ஹசாரே வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இதுதான் கலியுக தர்மம்.
“அப்படிப் பார்த்தால் ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோருமே செய்யக்கூடாத ஒன்றை வாழ்க்கையில் செய்துதானே இருப்போம்” சொன்னார் ராமசாமி.
“வாஸ்தவம் தான். என்றாலும் தன் தவற்றை உணர்ந்து திருத்திக்கொள்பவர்களாகவே பெரும்பாலானோர் இருக்கின்றார்கள். இவர்களைத் தெய்வம் நிச்சயம் மன்னித்துவிடும். செய்யக்கூடாததை தெரிந்து செய்துகொண்டே இருப்பவர்களைத் தெய்வம் தக்கத் தருணத்தில் தண்டித்து விடுகின்றது”.
“எந்த கிரகங்கள், ஜாதக ரீதியாக இப்படி செய்யக்கூடாததை செய்ய வைக்கின்றது” கேட்டார் கிருஷ்ணசாமி.
“சூரியன், சனிஸ்வரன், செவ்வாய் சேர்ந்தோ தனித்தோ லக்னம், 5, 7ம் இடங்களில் வரப்பெற்றவர்கள், ராகு, கேது இவர்கள் லக்னம், 7ம் இடத்தில் வரப்பெற்றவர்கள், 8ம் இடத்தில் செவ்வாய், ராகு, கேது, சனிஸ்வரனுடன் சேர்ந்து லக்ன ரீதியாகவோ சந்திர லக்ன ரீதியாகவோ வரப்பெற்றவர்கள் நிச்சயம் வாழ்நாளில் செய்யக்கூடாத ஒன்றைச் செய்தவர்களாக இருப்பார்கள். மேற்சொன்ன இடங்களைக் குரு பகவான் பார்வை பெற்றுயிருப்பவர்கள் தன் தவறுகளை உணர்ந்தவராகவும் இருப்பார்கள்.
“என்ன ஸ்வாமிகளே புரிந்ததா. ஆமாம்… சாயந்திரம் எங்கோ உபன்யாஸம் கேட்கப் போறேன்னு நேற்று சொன்னீர்களே. போகலயா.”
“இங்கேயிருந்து அங்கேதான் நாங்க இருவரும் போகப் போறோம். கோமல் பாலகிருஷ்ணன் உபன்யாஸம். கிருஷ்ண சமாஜத்திலே நம்ம கிருஷ்ணசாமியோட நெருங்கிய உறவுக்காரர்.”
விடை பெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.
வழக்கம் போல் முதல் வரிசையிலே போய் இருவரும் அமர்ந்தார்கள். உபன்யாஸகர் “சொல்வதும் செய்வதும்” என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார்.
“ராவணன் செய்யக்கூடாததைச் செய்தான். கடைசியில் மடிந்தான். துரியோதனன், வாலி, கம்ஸன், ஹிரன்யன் போன்ற பலரும் செய்யக் கூடாதச் செயல்களைச் செய்தவர்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” உபன்யாசம் போய்கொண்டு இருந்தது.
செய்யக்கூடாததைச் செய்யக்கூடாது என்று சொல்லும் காவியங்களையும், புராணங்களையும் கேட்டு இனிமேலாவது நாம் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை இங்கே செய்யாதே என்று ஒருவர் சுட்டிக்காட்டும்போது அதைச் செய்தால் என்ன என்றுதான் பலருக்கும் மனம் தூண்டுகிறது. இப்படி மனக்கட்டுப்பாட்டை இழக்கும் எவரையும் மனிதராகவே சொல்ல இயலாது. சொல்வது நன்றாகவும் செய்வது ஒன்றாகவுமே தான் பலரும் நடந்து கொள்கிறார்கள்.
“என்ன கிருஷ்ணசாமி… நாம காலம்பர பேசின அதே சப்ஜெக்டை உபன்யாஸகர் பிச்சு உதறறாரே…” முனுமுனுத்தார் ராமசாமி
செய்யக்கூடாததை செய்யாதே என்று தன் அனுபவங்கள் மூலம் பலரும் சொல்வதும், இவர்கள் சொல்வதை நாம் ஏன் செய்யக் கூடாது என்று சிலர் நினைப்பதற்கும் அவரவர் மனமே காரணம். மனதை தனது கட்டுப் பாட்டுக்குள் வைப்பவனையே மனிதன் என்று சொல்லலாம். சொல்வதை செய்பவறாகவும், செய்வதை மற்றவர்கள் புகழ்ச்சியாகச் சொல்பவர்களாகவும் எல்லோரும் இருக்க வேண்டும்…
உபன்யாஸம் முடிந்தது. கிருஷ்ணசாமியும் ராமசாமியும் மேடைக்கு சென்று உபன்யாஸகரை வாழ்த்தினார்கள்..
“வாங்கோ என் காரிலேயே உங்கள் இருவரையும் உங்க ஆத்திலேயே இறக்கி விட்டுடறேன். எப்போதுமே சொன்னதைச் செய்பவன்தான் இந்த பாலகிருஷ்ணன். ஹி… ஹி…” சற்றே வழிந்தார் உபன்யாஸகர்.
இருவரும் காரில் ஏறிக் கொண்டதும் “அப்பா ட்ரைவர். கொஞ்சம் இருட்டான இடத்திலே காரை நிறுத்து. டாய்லெட் போகனும். இரண்டு மணி நேரமா அவஸ்தை அடக்கமுடியலே” உபன்யாஸகர் சொன்னார்.
ட்ரைவர் ஒரு இருட்டான இடத்தில் காரை நிறுத்தினான்.
“ராமசாமி… வரேளா” கேட்டார் கிருஷ்ணசாமி.
“இல்லை கிருஷ்ணசாமி. நீங்க இருவரும் போயிட்டு வாங்கோ. சபாவிலேயே போயிட்டு வந்திருக்கலாமே…” நினைத்து கொண்டார் ராமசாமி.
உடல் அவஸ்தையை பெரிய காம்பவுண்ட் மேலே தணித்துக்கொண்ட இருவரும் காரில் வந்து ஏறினார்கள்.
“ம்… ட்ரைவர் கிளம்பலாம்.”
ஹெட்லைட்டை போட்டார் ட்ரைவர். ஆஞ்சனேயர் கோவில் காம்பவுண்ட் மேலே எழுதிய வாசகம் பளிச்சென்று தெரிந்தது இப்போது.
“இங்கே எவரும் சிறுநீர் கழிக்கக்கூடாது”
“என்ன பாலகிருஷ்ண மாமா… உங்க ஜாதகத்திலே சனி 5ம் இடத்திலே இருக்காரா”
“ஆமாம். ராமசாமி… எப்படித் தெரியும் உங்களுக்கு” ஆச்சிரியப்பட்டார் உபன்யாஸகர்
“உங்கள் ஜாதகம்தான் ஆஞ்சனேயர் கோவில் காம்பவுண்ட் மேலே பளிச்சென தெரிகிறதே… சொல்வதை செய்பவர் நீங்கள் என்று…” முனுமுனுத்துக்கொண்டார் ராமசாமி.
No Comment