தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – மார்ச் 2012
தேதியூர் V.J. ராமன்

“எல்லாம் உங்க ப்ரண்டுக்குத்தான்”

“என்ன ஆச்சு மாமி…”

“இவர் பிரண்டு அந்த உபன்யாஸகருக்குத் தான் புத்தி கெட்டுப்போய் கோயில் சுவற்றின் மீது விஸர்ஜனம் பண்ணினார்னா இவருக்கு எங்கே மாமா புத்திபோச்சு… சபாவிலே உபன்யாஸம் முடிந்ததும் அங்கேயே பாத்ரூம் போயிட்டு வந்திருக்காலாமோன்னோ… கண்ட கண்ட இடத்திலே போனதினாலே விளைவு யுரினரி இன்பெக்ஷன் வந்து ராத்திரிலேந்து ஜுரம்… டாக்டர்கிட்டே காட்ட கிளம்பிண்டு இருக்கார்.”

“வினாசகாலே விபரீத புத்தி.” ராமசாமி சொன்னார்.

“உரைக்கிறதான்னு பார்ப்போம்…” கோபத்தின் உச்சிக்கே போனார் மாமி.

“விடு கிருஷ்ணாசாமி. எல்லாம் சரியாய் போயிடும். கவலைப்படாதே டாக்டர் கொடுக்கற ஆண்டிபயாடிக் மாத்திரையைச் சாப்பிட்டா எல்லாம் சரியா போயிடும். நாளைக்கு வரேன்… ஜோஸ்யர்ட போய் ஏன் இப்படியெல்லாம் உங்களுக்கு நடக்கிறதுன்னு கேட்டுப் பார்கலாம்”.

மறுநாள் இருவரும் ஜோஸ்யராத்துக்கு கிளம்பினார்கள்.

“வாங்கோ, வாங்கோ…” வரவேற்றார் ஜோஸ்யர்

“என்ன கிருஷ்ணசாமி உடம்பு சரியில்லை போல இருக்கு…” கேட்டார் ஜோஸ்யர்.

“ஆமாம்.. நீங்க போனவாரம் வந்தபோது சொன்னேளே. செய்யக்கூடாததைச் செய்தால் உடன் பலன் கிடைச்சுடும்னு. அதான் தப்பை தப்புன்னு தெரிஞ்சே செஞ்சுண்டு இருக்கேன்.. அவஸ்தையும் படறேன்.” நடந்த சம்பவங்களை விவரித்தார் கிருஷ்ணசாமி.

“வினாசகாலே… விபரீத புத்தின்னு சொல்றாளே. அதுதானா இது.” கேட்டார் ராமசாமி

“வாஸ்தவம் தான் ராமசாமி. காலம் சில சமயங்களில் விபரீதமான புத்தியை ஏற்படுத்தி நம்மை தவறு செய்யவைத்து, அதற்கு உரிய தண்டனையைக் கொடுத்து அதன் மூலம் நம்மை உணர வைக்கிறது… சிலருக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்காமலும் போய்விடுகிறது. செய்த எந்த தவறுக்கும் தண்டனை இன்றி தப்ப இயலாது. தப்பை உணர்ந்தவனை தெய்வம் ஒரு முறை தண்டித்து விட்டு விடும். தப்பை தெரியாமல் செய்தால் அதைத் தவறு என்று சொல்லலாம். இந்தத் தவறுக்குத் தண்டனை கிடைத்ததும் பகவான் மன்னித்தும் விடுகிறார். தப்பை தப்பு என்று தெரிந்தே மேலும் மேலும் செய்பவனை தெய்வம் முழுமையாக தண்டித்து விடுகிறது.”

இராமாயணத்திலே ராமன் சிறுவயதில் அந்தப்புரத்தில் வந்த கூனியின் முதுகிலே உள்ள சதைக் கொழுப்பானது பந்துபோல மேலும் கீழும் அமுங்கி எழுவதை பார்த்ததும் விளையாட்டாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொள்கிறான். வில்லை எடுத்து கூனியின் முதுகின் மேல் உள்ள சதைக் கொழுப்பின்மீது அம்பை விடுகிறான். சதை மேலும் கீழும் அமுங்கி எழும்போது ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் ராமனுக்கு. ஒருமுறை பொறுத்துக் கொண்டாள் கூனி. மறுமுறை இது போன்று அம்பை எய்தியபோதுகூட குழந்தை தானே என்று விட்டுவிட்டாள். மூன்றாவது முறையாக ராமன் அம்பை எய்தும்போது ஒரு விபரீதத்தை இது ஏற்படுத்தபோகிறது என்பதை ராமன் உணரவில்லை. வெகுண்டு எழுந்த கூனிக்கு ராமன்மீது கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி அவனை கடைசியில் கானகத்துக்குச் செல்லும் அளவுக்கு செய்துவிட்டது. ராமனின் விபரீதமான சிந்தனை விளையாட்டாக நினைத்தது விபரீதமாக முடிந்தது போல்தான். நாம் எல்லோரும் எல்லாவற்றையும் விளையாட்டாக நினைத்து விபரீதங்களைத் தேடிக்கொள்கிறோம். இரண்டு முறைக்குமேல் ஒரு தவறைச் செய்ய பகவான் அனுமதிப்பதில்லை. உடனே தண்டனையைக் கொடுத்து விடுகிறான்.

பிரபல தமிழ் தினசரியில் இந்த வருடம் ஜனவரி 27 தேதி அன்று வந்த செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள்…

ஊட்டியில் இந்த வருடம் நடந்த குடியரசு தினத்தில் பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீரசாகசம் புரிந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபில் தலைகுப்புற விழுந்து உயிர் இழந்தார் என்பதே அந்த செய்தி. முதலில் 5 மாணவர்களைப் படுக்க வைத்து, தாண்டி பல்டி அடித்தார். பின்பு மாணவர் எண்ணிக்கையை 11ஆக உயர்த்தி பல்டி அடித்தார். அடுத்து சாகசம் என்ற பெயரில் 13 மாணவர்களை படுக்க வைத்து பல்டி அடித்து தாண்ட வேண்டும் என்ற விபரீதமான எண்ணம் அவரைத் தண்டிக்க போகிறது என்பதை உணராமல், ‘பல பேர் வேண்டாம்’ என்று தடுத்தும் தாண்டி பல்டி அடிக்கும் முயற்சியை மேற்கொண்டார். விளைவு… நிலை தடுமாறி தலைகுப்புற நிலையில் விழுந்தார். அவரால் பின்பு எழுந்திருக்கவே முடியவில்லை.

“அப்புறம்…” ஆவலுடன் கேட்டார் கிருஷ்ணசாமி.

“அப்புறம் என்ன… விபரீத புத்தி வினையில் முடிந்தது. விளையாட்டே வினையானது. உயிர் பிரிந்துவிட்டது. வந்திருந்த அனைத்து கூட்டத்தினரும் கதிகலங்கிப் போனார்கள். அந்த இடம், சந்தோஷப்பட வேண்டிய நாளில் சோகத்தில் மூழ்கியது. பார்த்தீர்களா… விபரீதமான எண்ணங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட தடவை வரும் போது பகவான் எச்சரிக்கை விடுவார். எவர் மூலமாவது அந்த விபரீதத்தை உணர்த்தவும் செய்வார். எவரையும் லக்ஷியம் செய்யாமல் தவறான முடிவுகளைத் தன்னிச்சையாக எடுப்பவர்கள் விபரீத விளைவுகளைத்தான் சந்திக்க வேண்டிவரும் என்பதையும் மற்றவர்களுக்கும் உணர்த்தி விடுவார்.

“கிருஷ்ணசாமி செய்யும் இது மாதிரியான செயல்களுக்கும் தண்டனை நிச்சயம் கிடைக்குமா…” கிண்டலாக கேட்டார் ராமசாமி..

சனிஸ்வரனின் அர்தாஷ்டம் சனி, அஷ்டமச் சனி மற்றும் 71/2 சனியின் கால கட்டத்தில்தான் இது போன்ற விபரீதமான எண்ணங்கள் ஒருவருக்கு வரும். தனக்கு எல்லாம் தெரியும் என்று மமதையுடன் செயல்படுபவர்களே இதில் அதிகம் மாட்டிக்கொள்பவர்கள். லக்னம் 5, 7, 9, 10ல் சூரியன், சனி, செவ்வாய், ராகு வரப்பெற்றவர்கள், 8ல் செவ்வாய் வரப் பெற்றவர்கள், லக்னம், 4, 5, 7, 9, 10ல் குருபகவான் வரப்பெற்றவர்கள் விபரீதமான எண்ணங்களினால் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றை இழந்தவர்களாக இருப்பதை நாம் காணலாம். மூன்றாம் இடத்தில் குரு பகவான் வரப்பெற்றவர்களுக்கும் மூன்றாம் இடத்தில் கோச்சார ரீதியாக குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்திலும் விபரீதமான புத்தி ஏற்படும். பாபகிரகங்கள் இருக்கும் மேல் சொன்ன இடங்களை குரு பகவான் பார்க்க விபரீதங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். மேற்சொன்ன அனைவருமே அனுபவங்களின் மூலம் பாடங்களைக் கற்றுக்கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

“கிருஷ்ணசாமி உமக்கு 71/2 சனி ஆரம்பித்துள்ளது. எச்சரிக்கை எல்லாவற்றிலும் தேவை. என்ன.. .” எச்சரித்து அனுப்பினார் ஜோஸ்யர்.

நன்றி கூறிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்

கிருஷ்ணசாமி தன் வீட்டு வாசலில் சொறிநாய் ஒன்று தூங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார். அது பாட்டுக்குச் தூங்கிக்கொண்டு இருக்கட்டும் என்ற எண்ணம் கிருஷ்ணசாமிக்கு வரவில்லை.

“சனியனே… என் வீடுதான் உனக்கு படுக்க இடம் கிடைச்சுதா.” அருகில் இருந்த கல்லை எடுத்து நாய்மீது ஓங்கி அடித்தார்.

மிரண்டு போன நாய் கிருஷ்ணசாமியின்மீது எகிறி பாய்ந்து குதறியது.

அப்புறம் என்ன என்று கேட்காதீர்கள். வினாச காலம் என்று சனியைச் சொல்லுவதா… விபரீத புத்தி என்று கிருஷ்ணசாமியை கோபிப்பதா… ராமன் செய்த தவறுக்கு 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய நேர்ந்தது. மனம் உடைந்த தசரதனுக்கு பரலோகப் பிராப்த்தி கிடைத்தது…

கிருஷ்ணசாமிக்கோ 14 நாள் தொப்புளைச் சுற்றி ஊசி போட்டுக்கொண்டு வீட்டுக்குள் காராகிரஹ வாசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது… கடித்த நாய்க்கும் பரலோகப் பிராப்த்தி கிடைத்தது…


Contact Astrologer