தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஜனவரி் 2012
தேதியூர் V.J. ராமன்

புத்தாண்டு கொண்டாட்டங்களை உற்சாகத்துடன் கொண்டாடி இரவு நன்றாகத் தூங்கிய கிருஷ்ணசாமியை டெலிபோன் மணி அடித்து எழுப்பியது.

உற்சாகத்துடன் எழுந்த கிருஷ்ணசாமி ‘ஹலோ யார் பேசறது…’ அடுத்த சில நொடிகளில் கிருஷ்ணசாமியின் முகம் சோகமாக மாறியது.

ஏன்னா… என்ன ஆச்சு… முகமே சரியில்லையே… யாராவது ஏதாவது சொன்னாளா… மாமி கேட்டாள்.

ஒன்னுமில்லேம்மா… மனசு சரியில்லே… அவ்வளவுதான்.

நேற்றைக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தேளே. என்ன ஆச்சு இன்னிக்கு. சரி… சரி… காப்பியை சாப்பிட்டு பேப்பரை படியுங்கோ.. எல்லாம் சரியாயிடும்…

மாமி சொன்னபடி கேட்க ஆயத்தமானார் கிருஷ்ணசாமி… மனசு என்னமோ ராமசாமியை பார்க்கனும் போல் தோணியது.

கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவைத் திறந்தார் கிருஷ்ணசாமி.

வா வா… ராமசாமி… நூறு ஆயுசு உனக்கு… இப்பதான் உன்னைப்பத்தி நினைச்சேன்..

“என்ன கிருஷ்ணசாமி போன வருஷத்துக் காலண்டரைக் கொடுத்து ஏமாத்திட்டியே.. அந்த பாரிஸ் கார்னர் கடைக்காரன் உன்னை நல்லா ஏமாத்தி இருக்கான்.. நீயும் ஏமாந்து எங்களையும் ஏமாற வைச்சுட்டியே”.

“வாஸ்தவம்தான் ராமசாமி. காலம் கார்தாலேயே ஒருத்தர் போன் பண்ணி திட்டாத குறையா பேசினார். அப்போதிலேந்தே மனசு சரியில்லை. உன்னைப் போல பத்து பேருக்கு கொடுத்திருக்கேன். எல்லோருமே காலம்பற பாத்துட்டு என்னை திட்ட ஆரம்பிச்சிருக்கலாம். அதான் மனசே சரியில்லே எழுந்ததிலிருந்து…”

“விடு கிருஷ்ணசாமி.. உனக்கு எல்லாருக்கும் கொடுக்கனும்கிற நல்ல மனசு இருக்கு.. இருந்தாலும் உனக்கு மனசு அப்பஅப்ப சரியா வேலை செய்யமாட்டேங்கிறது. மத்யானம் ஜோஸ்யாரத்துக்குப் போகலாம். மனசுக்கு ஆறுதலா ஏதாவது சொல்வார். சாப்பிட்டு விட்டு ரெடியா இரு… போகலாம்.”

“வாங்கோ… வாங்கோ…” புத்தாண்டு எல்லாம் நல்லா கொண்டாடினேளா.. வரவேற்றார் ஜோஸ்யர்.

“கிருஷ்ணசாமி… காலைலேந்தே மனசு சரியில்லேன்னு வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அதான் உங்களிடம் வந்தோம். நேத்திக்கு ஒன்னாம் தேதி முழுக்க ரொம்ப சந்தோஷமா இருந்தார்… இன்னிக்கு காலம்பற இரண்டு மூன்று போன்கால் வந்ததும் முகம் சுத்தமா மாறிப்போச்சு.. இதைப்பத்திதான் தெரிஞ்சுண்டு போகலாம்னு வந்தோம்”. நடந்த விவரத்தை கேட்ட ஜோஸ்யர்

“இது தானா சமாச்சாரம். நல்ல மனசுதான் உங்களுக்கு கிருஷ்ணசாமி. அது ஏன் மாறி மாறி செயல்படறது தெரியுமா… மனம் ஒரு குரங்குன்னு சொல்றாளே… அதனாலயா…” கேட்டார் ராமசாமி.

“சரியாச் சொன்னேள் ராமசாமி… சிலசமயம் எல்லோருக்குமே இந்த மனசு ரெட்டை வேஷம் போடும். குரங்கை பழக்கினால் அது நாம சொல்றபடியெல்லாம் செய்யும். அதே போல இந்த மனத்தை சரியான முடிவு எடுக்கும்படி பழக்கினால் அது நிச்சியம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் படி வேலை செய்யும்.”

பொதுவா நாம் எல்லோருமே நமக்கு எப்போதுமே நல்லதேதான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம் இல்லையா… நல்லது நடக்காத போது அதற்குப் பழியை பகவான் சோதிக்கின்றார் என்று அவர் பேர்லேயும், கிரக நிலை சரியில்லை என்று கிரகங்கள் மீதும், என் தலைவிதி என்று விதியின் பேர்லேயும் எனக்கு நேரம் சரியில்லை என்று காலத்தின் மீதும் பழியைப் போடறோம் இல்லையா… ஆனால், உண்மையிலேயே நல்லது நடக்காமல் இருக்கிறதுக்கு காரணம் யார் என்றால் உங்கள் மனசுதான் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும். இப்போ.. கிருஷ்ணசாமி உங்களுக்கு வயிற்று வலி என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு காரணம் நேற்று நீங்கள் சாப்பிடக்கூடாத ஒரு இடத்தில் சாப்பிடக்கூடாத ஒன்றை சாப்பிட்டுள்ளீர்கள் இல்லையா.. ரோடு ஓரத்தில் உள்ள ஒரு கையேந்தி பவனில் சுகாதாரம் இல்லாத இடம் என்று தெரிந்தும் எல்லோரும் சாப்பிடறாளேன்னு சாப்பிட்டேன். வயிற்றுவலி வந்துவிட்டது என்கிறீர்கள். எத்தனையோ தடவை வெளியூர் நெடுந்தூர பயணம் போகும் போது அந்த பஸ்காரன் அவனுக்கு எந்த ரோடுஓர ஹோட்டலில் சாப்பாடு இலவசமாக கொடுக்கிறானோ அந்த ஹோட்டலில் சாப்பிட்டேன். அந்த மாதிரி ஹோட்டல்கள் சுகாதாரம் இல்லாதவை என்று தெரிந்தும் சாப்பிட்டேன் வயிற்றுவலி வந்துடுத்துன்னு சொல்றேள். இந்த மாதிரி ஹோட்டல் வாசலில் வாழைப்பழம், ப்ரட், பிஸ்கெட், ஸாண்ட்விச் போன்ற நல்ல பொருள் கிடைத்தாலும் அதை விடுத்து உள்ளே போய் புளிச்ச மாவு பேப்பர் ரோஸ்ட் சாப்பிடத்தான் உங்கள் மனசு தூண்டுகிறது. இந்த மாதிரி ஹோட்டல்களை பார்க்கும் போது நம் மனசுக்கே தெரிகின்றது இது நல்ல ஹோட்டல் இல்லை என்று. எல்லோரும் சாப்பிடறாளே என்று அதே மனசே உங்களை சாப்பிடவும் சொல்கிறது. இதே மனசுக்கு வெளியிலே சாப்பிடக்கூடிய சுகாதாரமான நல்ல பொருட்கள் உள்ளன என்றும் தெரிகிறது. இந்த மனசு தவறான முடிவு எடுத்து சாப்பிட்டதன் எதிரொலிதான் உங்கள் வயிற்று வலி. இந்த மனசின் அதிபதிதான் சந்திரன். இந்த சந்திரன் இருக்க கூடிய இடம் உங்கள் ஜாதகத்திலே ராசி என்கிறோம். லக்னம் என்பது உங்களது பிறந்த நேரத்தைச் சொல்கிறது. பிறந்த நேரத்தில் உள்ள கிரக நிலை உங்களது லக்ன குண்டலியின் மூலம் ஒவ்வொரு கால கட்டத்திலும் உங்கள் வாழ்நாளில் நடக்கப் போவதை அவ்வப்போது தெளிவுபடுத்துகிறது. பிறந்து தற்காலம் உங்களுக்கு 62 வயது ஆகிவிட்டதே. இன்றைக்கு உங்கள் மனசு சந்தோஷப்படுகிறது அல்லது வருத்தப்படுகிறது என்றால் அதை உணரக்கூடிய உங்களது மனசுக்கு அதிபதியான சந்திரன் இருக்கக் கூடிய ராசியில் இருந்து கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அவைதான் முடிவு செய்கின்றன. இதைத்தான் இன்றைய ராசி பலன் என்கிறோம்.

மனசுக்கு அதிபதியான சந்திரனுக்கு மதி என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. மதிகெட்டு சாப்பிட்டேன். எனது மனைவி நண்பர்கள் உறவினர்கள் இது போன்ற ஹோட்டல்கள் நல்லவை அல்ல என்று புத்திமதி சொன்னார்கள் என்றெல்லாம் சொல்றோமே எந்த மதிக்கு அதிபதிதான் சந்திரன். புத்திக்கு அதிபதி சூரியன். இந்த இரண்டு கிரகங்கள் நம் கண் கூடாகத் தெரியும் கிரகங்கள். கண் கூடாகத் தெரியும் தெய்வங்கள் என்றும் சொல்லலாம். தினந்தோறும் நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் இந்த இரண்டு கிரகங்களிலும் (தெய்வங்களும்) பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதோடு இல்லாமல் நமக்கு வழிகாட்டிக் கொண்டும் இருக்கின்றன.

மனசுக்காரகனான சந்திரன் நம் மனசுக்குப் புரியும்படி இது சரியான ஹோட்டல் இல்லை என்று உணரச் செய்கிறான். புத்திக்கு அதிபதியான சூரியன் மற்றவர்கள் புத்திமதி கூறுவதன் மூலம் இதை உணரவைக்கிறான். இருவரும் சேர்ந்து நல்லது இருப்பதையும் காட்டிக் கொடுக்கின்றார்கள். என்றாலும் இவை அனைத்தையும் விடுத்து நாமாகவே தவறான முடிவு எடுத்து, எல்லோரும் சாப்பிடுகின்றார்களே என்று சாப்பிடக் கூடாத இடத்தில் சாப்பிடக் கூடாததைச் சாப்பிட்டு வயிற்று வலிக்கு உள்ளாகிறோம் இல்லையா…

“ஆக மனசு ரெட்டை வேஷம் போடறதுன்னு சொல்றேளா…” கேட்டார் கிருஷ்ணசாமி.

ஆமாம்.. மனசை சரியான முடிவு எடுக்கப் பழகினால் நமக்கு என்றுமே பிரச்சனைகள் வரவே வராது. நமக்கு ஒரு பிரச்சனை வருகின்றது என்றால் அதற்கு மூல காரணம் நாமாகவேதான் இருப்போம். வருஷ கடைசியிலே அடுத்த வருட தினசரி காலண்டரை ரொம்ப சீப்பா விற்கிறான் ஒருத்தன் என்று பார்க்கும் போதே ஏதோ தில்லுமுல்லு நடக்கிறது என்று உங்கள் மனசுக்கு தெரியாமல் இல்லை. அதுவே எல்லோரும் வாங்குகிறார்களே என்று நாமும் வாங்கலாம் என்று செயல்படவும் செய்கிறது. தவறு எங்கோ நடக்கிறது என்பதை நம்மனம் முன்பே சுட்டி காட்டாமல் இல்லை மற்றவர் மூலமாகவும் சுட்டிக்காட்டுகின்றது. என்றாலும் நமது மனமே தவறான முடிவுகளை எடுத்து விட்டு அதற்கு காரணத்தை பகவான் மீது போடவும் கிரகங்கள் சோதிக்கின்றது, விதி அல்லது காலம் நேரம் என்னை அப்படி செய்ய வைத்தது என்று நம்பவும் வைக்கிறது.

லக்னம் 4, 5, 7, 9, 10ம் இடங்களில் ஜாதகத்தில் குரு பகவான் வரப்பெற்றவர்கள், 5ம் இடத்தில் சனிச்வரன், கேது பகவான் வரப்பெற்றவர்கள், 7ம் இடத்தில் சூரியன், செவ்வாய், ராகு பகவான் வரப்பெற்றவர்கள், மனஸ்காரகனான சந்திரன் உச்சம், நீச்சம் அடைந்தவர்களுக்கு மனம் எப்போதுமே எஜமானனாகவும் பரம சத்ருவாகவும் வேலை செய்யும். இவர்களால் சரியான முடிவுகளை தங்கள் பொருட்டு எடுக்க முடியாமலேதான் இருக்கும்.

என்ன… மனசுக்கு புரிந்ததா கிருஷ்ணசாமி. சாயந்திரம் ஏதாவது வேலை இருக்கா உங்களுக்கு. எங்க ரிலேஷன் ஒருத்தரோடு கல்யாண ரிஸப்ஷன் போகனும்…

அப்போ… எல்லா உறவினர்களையும் பார்த்த சந்தோஷத்தில், உற்சாகத்தில் இருப்பீர்கள் இல்லையா…

ஆமாம்.. என்று சொல்லிய படியே இருவரும் வீடு திரும்பினார்கள்.

மறுநாள் காலை டெலிபோன் மணி ஒலித்ததும் கிருஷ்ணசாமியின் மனைவி போனை எடுத்தாள்.

“நான் ராமசாமி பேசறேன்… மாமா இருக்காரா…”

“மாமா… ஆஸ்பத்திரி போய் இருக்கார்…”

“என்ன ஆச்சு… நேற்று நன்னா இருந்தாரே…”

“அதையேன் கேட்கறேள்… நேற்று சாயந்திரம் ரிஸப்ஷன்ல பள பளன்னு மஞ்சூரியன் போட்டிருந்தான்னு வளைச்சுண்டு நிறைய சாப்பிட்டார்.. ஒரு மாதத்துக்கு ஆயில் அயிட்டம் எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லி இருக்கார். நானும் எவ்வளவோ தடுத்தும், சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியும் கேட்கலே. பரிசாரகன் சொன்னானாம் ஒரு நாளைக்கு சாப்பிட்டா ஒன்னும் ஆயிடாதுன்னு. அவன் சொன்னதை வேத வாக்கா எடுத்துண்டு சாப்பிட்டதன் பலன் ராத்திரி முழுக்க வயித்துவலி டிஸன்ட்ரி. டாக்டரை பார்க்க போயிருக்கார்.”

“இந்த வயதிலே ஆயில் அயிட்டங்களை அதிகம் சாப்பிடக்கூடாதுன்னு கிருஷ்ணசாமியின் மனதுக்கு தெரியாதா என்ன… மாமி வேறு தடுத்தும் அறிவுரை சொல்லியும் கேட்க தோனலயே அவருக்கு… எக்கேடு கெட்டு போனால் என்ன என்று பரிசாரகன் சொல்லும் வாக்கையே அவர் மனம் கேட்கிறது என்றால் கிருஷ்ணசாமி போன்றவர்களை அந்த பரம்பொருளான பகவானாலும் காப்பாற்ற முடியாதுன்னுதான் தோணறது…”

“மனம் ஒரு குரங்குன்னு தான் சொன்னதை நினைத்துப் பார்த்தார் ராமசாமி.”

அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.


Contact Astrologer