தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – டிசம்பர் 2011
தேதியூர் V.J. ராமன்
வீட்டுக்குள் சிக்னல் கிடைக்காததால் பையன் வாங்கிக் கொடுத்த புதிய மொபைல் போனை எடுத்துக்கொண்டு வாசலுக்குச் சென்றார் கிருஷ்ணசாமி.
“யாரு… சந்தானமா… நான்தான் கிருஷ்ணசாமி பேசறேன். வர வெள்ளிக்கிழமை ஆத்லே ஒரு பங்ஷன். 60 பேர் சாப்பிடுவா. மெனு லிஸ்ட்டோட செத்த வரமுடியுமா.” தெருக்கோடி வரை கேட்கும்படி உரத்த குரலில் பேசிவிட்டு உள்ளே நுழைந்தார்.
பத்து நிமிஷம் சென்றதும் காலிங் பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்தார் கிருஷ்ணசாமி.
“சார்… கிருஷ்ணசாமிங்கறது…”
“நான்தான்”.
கேட்டரிங்… என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே
“ஓ சந்தானம் அனுப்பிச்சாரா…” முந்திக் கொண்டு கேட்டார் கிருஷ்ணசாமி.
“ஆமாம்… ஆமாம். சார்”.
“மெனுலிஸ்ட் கொடுத்தனுப்பினாரா”.
“இல்லையே”.
“இருங்கோ… இப்பவே போன் பண்ணி கேட்கிறேன்” என்று தனது பொபைலில் இரண்டு மூன்று தடவை போன் பண்ணினான் வந்தவன்.
“சார் சிக்னல் இல்லை. உங்க மொபைலில் ட்ரை பண்ணட்டுமா”.
“ஓ… பேஷா. வெளியே போய் பேசினால்தான் சிக்னல் கிடைக்கும். போய் பேசுங்கோ”.
லேன் லயனில் போன் வரவே மொபைல் போனை வந்த ஆளிடம் கொடுத்துவிட்டு வந்த போன் காலை அட்டெண்ட் பண்ணினார். பேச்சு ஸ்வாரயத்தில் மெய் மறந்துபோன கிருஷ்ணசாமி மறுபடி காலிங் பெல் சப்தம் கேட்கவே லயனை கட் பண்ணினார். கதவைத் திறந்த கிருஷ்ணசாமி.
“வாங்கோ… வாங்கோ சந்தானம். இப்போதானே உங்க அஸிஸ்டெண்ட் வந்தான்”.
“அஸிஸ்டெண்டா… நான் யாரையும் அனுப்பலயே”.
“அவன் மொபைல் வேலை செய்யலேன்னு என்னோட புதிய மொபைலை வாங்கிண்டு வெளியே போய் பேசறேன்னு சொன்னானே…” பதறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார் கிருஷ்ணசாமி.
“அந்த ஆசாமியைக் காணலயே… ஐயோ. பதினைந்தாயிரம் கொடுத்து வாங்கினேன்னு சொன்னானே பையன். ஏமாற்றிவிட்டு கொண்டுபோயிட்டானே. படுபாவி…”
“வெளியே போய் கத்தி பேசிண்டு இருந்தேளா…” சந்தானம் கேட்டார்.
“ஆமாம்… உங்களுக்குத்தான் போன் பண்ணினேன். வாய்ஸ் கிளியரா இல்லேன்னு வெளியே வாசலில் நின்னு பேசினேன்”.
“ரோட்டிலே போற யாரோ உங்க பேச்சைக் கவனிச்சுண்டு வந்து தட்டிண்டு போய்ட்டான்”.
“இப்படி ஏமாந்து போயிட்டேனே. இப்படியெல்லாம் ஏமாத்தரவங்க இருக்காங்களே”.
“என்ன மாமா… வந்தவன்கிட்டே என் விஸிட்டிங்கார்டு மற்றும் முழுவிபரம் விசாரிக்காம போனை தூக்கிக் கொடுத்தது உங்க தப்புதானே”.
“ஏமாறுகிறவர்கள் எங்கெல்லாம் இருக்காங்கன்னு மூக்கு வேர்க்க நிறைய பேர் அலைஞ்சுண்டு இருக்காங்க மாமா… நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்”.
சந்தானத்திடம் பேசி அனுப்பிவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு வருத்தத்தில் ஆழ்ந்தார் கிருஷ்ணசாமி.
மறுபடியும் கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவைத் திறந்தார். “வா வா… ராமசாமி” வாட்டத்துடன் வரவேற்றார் கிருஷ்ணசாமி.
“என்ன கிருஷ்ணசாமி… என்ன ஆச்சு உனக்கு”. நடந்த விபரத்தைச் சொன்னார் கிருஷ்ணசாமி
“இப்போ உன் கவலை எல்லாம் போகணும்னா நம்ம ஜோஸ்யராத்துக்குப் போனாத்தான் முடியும்.. வா போகலாம்”.
“வாங்கோ ஸ்வாமிகளே… வாங்கோ” வரவேற்றார் ஜோஸ்யர்.
தான் ஏமார்ந்த விஷயத்தை விவரித்தார் கிருஷ்ணசாமி. “எல்லா விஷயத்திலேயும் கோட்டை விட்டுடறேனே…”
“ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் கிருஷ்ணசாமி. சொல்லப் போனால் ஏமாற்றுபவர்களுக்கு பேச்சு சாமர்த்தியம் அதிகம் இருக்கும். பேச்சு சாமர்த்தியம் உள்ள அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்லிவிடமுடியாது. பேச்சு சாதுர்யம் உள்ளவர்களுக்கு எதிராளியுடைய பலவீனம் என்ன என்பது எளிதில் புரிந்துவிடும். அதை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு தனது பேச்சு சாமர்த்தியத்தால் மற்றவர்களைச் சுலபமாக ஏமாற்றிவிடுவார்கள். இன்றைக்கு இண்டர்நெட், மெபைல் போன் மூலமா உங்களுக்கு பத்து லக்ஷம் டாலர் விழுந்திருக்குன்னு எத்தனை Email, SMS வர்றது. ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற இணையதளங்களில் இளம் பெண்களின் போட்டோக்களினால் வசீகரிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் ஏராளம். நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவர்கள் யாவருமே 60 வயதுக்கு மேற்பட்ட குமரிகள் என்று புரியும். சபல புத்தி உள்ளவர்கள் ஆசைக்கு ஆட்பட்டு ஏமாற்றப்படுகின்றார்கள்”.
“மும்பை ஹைகோர்ட் பெண் நீதிபதி ஒருவர் ரயிலில் ஓசி பயணம் மேற்கொள்வதையே வழக்கமாகக்கொண்டுள்ளார். சமீபத்தில் பிடிபட்ட அவரைப் பற்றி ரயில்வே நிர்வாகம் புகார் கொடுக்க, ஹைகோர்ட் அவருக்கு கட்டாய ஓய்வு அளித்தது. மேல் முறையிட்டார் அந்த பெண் நீதிபதி. கட்டாய ஓய்வு கொடுத்தது சரிதான் என்று சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு அளித்தது. எத்தனை நாள் ஏமாற்றமுடியும் என்பதற்குக் காலம் அவருக்குத் தக்க பதில் தந்தது”.
“பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை எமாற்றும், ஏமாறும் சம்பவங்கள் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன”.
மளிகை வியாபாரியும் நகை வியாபாரியும் அடுத்தடுத்து கடை வைத்திருந்தார்கள். மளிகைக் கடைகாரருக்கு தங்க நகைகள்மீது சபலம். எப்படியாவது நாமும் இவரைப் போல் பெரும் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. ஒருநாள் நகைக் கடைக்காரர் வெளியூர் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. மளிகைக் கடைக்காரரிடம் தன் கடையைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஊருக்கு சென்றார். இதைச் சாக்காக வைத்து நகைக் கடையில் உள்ள அனைத்து நகைகளையும் தன் வசப்படுத்திக்கொண்டார் மளிகைக் கடைக்காரர். திரும்பி வந்த நகைக் கடைக்காரர் கடை காலியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மளிகைக் கடைக்காரரை கேட்டதற்கு நகைகளை எலி தின்றிருக்கும் என்று வாய் கூசாமல் சொன்னார்.
பஞ்சாயத்துக்குப் போனார் நகைக் கடைக்காரர். பஞ்சாயத்தும் மளிகைக் கடைக்காரர் சொன்னது சரியே என்று தீர்ப்பளித்தது. அதிர்ந்து போனார் நகைக் கடைக்காரர்.
கொஞ்சநாள் கழித்து நகைக் கடைக்காரர் காசிக்குச் செல்லப் புறப்பட்டார். மளிகைக் கடைக்காரரையும் யாத்திரைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். விடவில்லை நகைக் கடைக்காரர். உங்கள் ஐந்து வயது பையனையாவது அனுப்பி வையுங்களேன் என்றார்.
சரி அழைத்துச் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார் மளிகைக் கடைக்காரர்.
பத்து நாட்கள் கழித்துத் திரும்பினார் நகைக் கடைக்காரர். பையன்கூட வரவில்லையே என்று பதற்றம் அடைந்த மளிகை கடைக்காரர் ‘எங்கே என் பையன்’ எனக் கேட்டார்.
நகைக் கடைக்காரர் சொன்னார் ‘உங்க பையனை காகம் ஒன்று தூக்கிக்கொண்டு போய்விட்டது…’
கலக்கம் அடைந்த மளிகைக் கடைக்காரர் பஞ்சாயத்துக்குப் போனார்.
பஞ்சாயத்தில் ‘நகைகளை எலி தின்றது உண்மையானால் பையனை காகம் தூக்கிச் சென்றதும் சரிதானே…’ என்று தீர்ப்பு சொன்னார்கள்.
தன் தவறை உணர்ந்தார் மளிகைக் கடைக்காரர். நகைக் கடைக்காரருக்கு நகை திரும்ப கிடைத்தது. மகன் திரும்ப கிடைத்தான் மளிகைக் கடைக்காரருக்கு.
இதிலிருந்து என்ன புரிகிறது…
ஏமாற்றுக்காரர்களும் ஒரு நாள் ஏமாறுபவர்களாகவே இருப்பார்கள். லக்னத்திலோ 3, 7ம் இடத்திலோ சுக்ரன், ராகு இருப்பவர்கள் சபலத்தால் ஏமாறுபவர்களாக இருப்பார்கள். 7ம் இடத்தில் சூரியன், செவ்வாய், ராகு இருப்பவர்கள் மற்றவர்களை ஏமாற்ற நினைப்பவர்களாகவும் தானும் ஏமாறுபவர்களாகவும் இருப்பார்கள். 8ம் இடத்தில் செவ்வாய் உள்ள பெண்கள் எல்லோருமே ஏமாற்றப்படுபவர்களாகவே இருக்கின்றார்கள். 5,7ம் இடங்களில் கேது பகவான் வரப்பெற்றவர்கள் எவரிடமும் பேச்சில் ஏமாறமாட்டார்கள். இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சனிஸ்வரன் வரப் பெற்றவர்கள் சாதுர்யமாகப் பேசி மற்றவர்களை ஏமாற்றும் குணமுடையராக இருப்பார்கள். 3, 6, 8, 12ம் இடங்களில் சந்திரன் வரப்பெற்றவர்கள் அனுபவப்பட்டாலும் ஏமார்ந்துகொண்டேதான் இருப்பார்கள்.
கிருஷ்ணசாமிக்கு இப்போது கொஞ்சம் துக்கம் மறைந்து போனது.
இருவரும் வீடு திரும்பினார்கள்.
புது வருஷம் பிறக்கப் போகிறதே… பாரீஸ் கார்னர் சென்று சாமான்களைக் குறைந்த விலையில் வாங்கி வரலாம் என்று புறப்பட்டார் கிருஷ்ணசாமி.
அங்கே ரோடு ஓரத்தில் புதுவருட தினசரி காலண்டர்களைக் குவித்து வைத்திருந்தார்கள். காலண்டர் பத்து ரூபாய்.. பத்து காலண்டர்கள் வாங்கினால் இரண்டு காலண்டர்கள் இலவசம். கூவிக்கொண்டிருந்தான் ஒருத்தன்.
கிருஷ்ணசாமிக்குச் சபலம் தட்டியது. பத்து ரூபாய்க்கு தினசரி காலண்டரா. ரொம்ப சீப்பா இருக்கே… என்றாலும் இவை 2012ம் ஆண்டு காலண்டர்தானா என்று சரி பார்த்தார். முதல் தேதி 1-1-2012 என்று போட்டு இருந்ததைப் பார்த்து மனதுக்குள் சந்தோஷித்துக்கொண்டார். இந்த வருடம் ராமசாமி, ஜோஸ்யர் மாமா என்று எல்லோருக்கும் காம்ப்ளிமெண்ட் கொடுத்து அசத்த வேண்டும் என்ற நிணைப்போடு நூறு ரூபாய் கொடுத்து 12 காலண்டர்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.
மறுநாளே காலண்டர்களைக் கொடுத்து அசத்தினார் கிருஷ்ணசாமி.
இரண்டாம் தேதி அன்று தானே எல்லோருக்கும் புதுக் காலண்டரின் மவுசு என்ன எனப் புரியப் போகிறது. முதல் தேதி மட்டும்தான் 2012 வருடத்தியது என்றும். விற்காத 2011 வருட காலண்டர் கேக்குகளில் முதல் தேதியை மட்டும் மாற்றி ஒட்டி விற்கும் கும்பலின் ரகஸியம் இரண்டாம் தேதி கிருஷ்ணசாமிக்கும் புரியும்..
ஏமாற்றுபவர்களுக்கும் வருட முதல் தேதி அன்று ஏமாற்றக்கூடாது என்ற தர்மம் இருக்கிறது போலும்.. எத்தனை காலம் ஆனாலும் எத்தனை அனுபவப்பட்டாலும் கிருஷ்ணசாமி போன்ற சபல புத்தி உடையவர்கள் ஏமார்ந்துகொண்டேதான் இருப்பார்கள்.
No Comment