தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – மே 2011
தேதியூர் V.J. ராமன்

ஏன்னா… நேத்திக்கு நம்ம தியாகுவுக்கு ஒரு ஜாதகம் வந்ததே அந்தக் கவரைப் பார்த்தேளா.

ஏன் நேத்திக்கே சொல்லலே… சற்றுக் கோபத்துடன் கேட்டார் கிருஷ்ணசாமி.

மூல நக்ஷத்ர பெண் ஜாதகம். மெல்ல சொல்லிக்கலாமேன்னு இருந்துட்டேன். எல்லாம் நம்ம தலைவிதி. வர ஜாதகம் எல்லாமே மூலம், ஆயில்யம்தான். அப்படிப்பட்ட ஜாதகம் தான் அமையணும்னு இவனுக்கு விதி இருக்கோ… என்னவோ…

ஏன்டி அலுத்துக்கறே… உன் பெண்ணும் ஆயில்ய நக்ஷத்ரம்தான் மறுந்துட்டியா…

ஒன்னை வெச்சுண்டு சிரமப்படறது போதாதா… இன்னும் ஒன்னும் வீட்டுக்கு வரணுமா.

சரி… சரி… யார் யாருக்கு என்ன அமையணுமோ அந்த பகவான் விதிச்சப்படிதான் நடக்கும்.

“என்ன கிருஷ்ணசாமி. விதி சதின்னு ஏதோ பேசிண்டு இருக்கே.. என்ன விஷயம்…” உள்ளே நுழைந்தார் ராமசாமி.

வரன் வந்துள்ள விஷயத்தைச் சொன்னார் கிருஷ்ணசாமி… விதியை மதியால் வெல்லலாம்னு சொல்றாளே… அப்படின்னா என்ன ராமசாமி.

இது விவரம் நம்ம ஜோஸ்யர் கிட்டேதான் கேட்கணும். வந்த ஜாதகத்தையும் பையன் ஜாதகத்தையும் எடுத்துண்டு வா…

வாங்கோ… வாங்கோ… வரவேற்றார் ஜோஸ்யர்.

நமஸ்காரம் ஜோஸ்யர்வாள். எனது பார்யாள் ரொம்ப நொந்துக்கறா. பையனுக்கு வர வரன் எல்லாம் நல்ல நக்ஷத்ரமா இல்லையேன்னு கவலை. ஆத்துலே ஒரு பெண் ஆயில்ய நக்ஷத்ரம். கல்யாணம் இன்னும் ஆகல. இப்போ பையனுக்கு வந்திருக்கிற ஜாதகம் மூல நக்ஷத்ரம். எல்லாம் தலைவிதின்னு நொந்துக்கறா.

பதற்றப்படாதேயும் கிருஷ்ணசாமி. உலகத்தில் பகல் இரவு முதல் எல்லா காரியங்களும் அந்த அந்த விதிக்கு உட்பட்டுதான் நடக்கிறது என்றாலும் அந்த விதியை நமக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ள நமது மதின்னு சொல்லி மனத்தைப் பக்குவப்படுத்திக்கொண்டால் விதி நமது மதியைக் கண்டு பயப்படத் துவங்கிவிடுமே. விதின்னா செயல்னு அர்த்தம். நாம் செய்யற ஒவ்வொரு செயலுக்கும் நாமேதான் காரணமா இருக்கோம். அதன் விளைவு சரியாக இருந்தாலும் சரி விபரீதமாக இருந்தாலும் சரி அதற்குண்டான பழியை விதியின்மீது போடுவது நமது மானுட ஜென்மத்துக்கு மட்டும் பழக்கமாகிப்போன ஒன்னு.

என்ன சொல்றேள்… விதிக்குக் காரணம் நாமேதான் என்று எப்படிச் சொல்லமுடியும்… கேட்டார் கிருஷ்ணசாமி.

உங்களுக்கு இன்று வயிற்றுவலி என்றால் நேற்றுச் சாப்பிடக் கூடாததை, சாப்பிடக் கூடாத இடத்தில் சாப்பிட்டுள்ளீர்கள் இல்லையா… சாப்பிடுவதற்கு முன்பு இது உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத ஒன்று என்று உங்கள் மனம் எச்சரிக்கை விடுத்தாலும் மீறிச் சாப்பிட்டுவிட்டு அவஸ்தைப்படுகிறீர்கள். வயிற்றுவலி வந்ததிற்கான பழியைப் பகவான் மீது போடலாமா கிரகங்கள்மீது போடலாமா அல்லது உங்கள்மீதே போட்டுக்கொள்ளலாமா சொல்லுங்கள்.

நீங்கள் என்ன சொல்ல வாறேள் என்று புரியலையே… ராமசாமி குறுக்கிட்டார்.

நாம் செய்யும் காரியங்களுக்கு விதியின் மேல் பழிபோடுவது சரியில்லை. நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் உங்கள் மதியே காரணம். அதுவே விதியை வெல்லவும் செய்யும். நீர் கொண்டு வந்துள்ள இரண்டு ஜாதகங்களும் பொருத்தம் நன்றாகவே உள்ளது. இதைப்போய் உங்கள் பார்யாளிடம் சொன்னால் அவள் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ளப் போகிறாளா… நக்ஷ்திரத்தின் மேமே பழிபோடுவாள். உங்காத்திலும் ஆயில்ய நக்ஷ்திரத்தில் பெண் இருக்கிறாள் என்றால்கூட நமக்கு என்று நாட்டுப் பெண் வரும்போது மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இதற்கு விதியைக் காரணம் காட்டலாமா.

ஒரு விஷயத்தை நல்லதாக எடுத்துக்கொள்வதும் கெடுதலாக ஆக்கிக்கொள்வதும் நம் மதிதான். விதி இல்லை என்கிறீர்களா… கிருஷ்ணசாமி கேட்டார்.

படைத்த பரம்பிரம்மம் நீங்கள் புண்ணியங்களைச் செய்யவும் பாபங்களைச் செய்யவும் உங்கள் மதிக்கு பூர்ண சுதந்திரம் அளித்து நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்றே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார். இந்தப் பாப புண்ணியங்களையே நாம் விதி என்று கொண்டு அதற்குத் தக்கவாறு பலன்களைப் பெற்றுக் கொண்டும் வருகிறோம்.

இரண்டு துறவிகள் மலை உச்சியில் உள்ள தங்களது தலைமைப் பீடத்துக்குச் செல்லக் கிளம்பினார்கள். வழியில் ஒருவர் கால் உடைந்த நிலையில் இருப்பதை ஒரு துறவி பார்த்தார். கடுமையான குளிர். இந்நிலையில் இவரை விட்டுச் செல்வதை அந்தத் துறவி விரும்பவில்லை. இவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் நாம் இருப்பிடம் சேரமுடியாது. வா வா… போகலாம்… இங்கேயே இவர் இறக்க வேண்டும் என்பது இவரது விதி என்றார் மற்றவர். மனம் இறங்கிய துறவி அந்த முதியவருக்கு உதவவே விரும்பினார். இதைப் பார்த்த மற்ற துறவி விடுவிடு என நடையைக் கட்டினார். உதவி செய்ய நினைத்த துறவி அந்த முதியவரைத் தோளில் தாங்கியபடி நடக்க ஆரம்பித்தார். சில மைல் தூரம் சென்றபோது நடுவழியில் முதலில் சென்ற துறவி இறந்துகிடந்ததைப் பார்த்தார். முதியவரைத் தோளில் தாங்கிச் சென்ற துறவி இருப்பிடம் அடைந்தார்.

காரணம். முதலில் சென்றவர் குளிரில் நடுங்கி இறந்தார். மற்றவர் தன் தோளில் தாங்கியவரின் உடல் வெப்பத்தால் தன் உடம்புக்கும் வெப்பம் கிடைத்து, தனது இருப்பிடம் அடைந்தார். இருவருமே உயிர் பிழைத்தனர். இங்கே உதவ வேண்டும் என்ற புண்ணியச் செயலுக்கு மூலகாரணமே மனம்தான். விதிகூடப் புண்ணியச் செயலுக்குத்தான் துணைபோகும்.

ஆக மதியினால் விதியை வெல்ல முடியும் என்று சொல்கிறீர்களா… ராமசாமி கேட்டார்.

சந்தேகம் இல்லை… தலைவலி வருகிறது என்றால் அதற்கான அறிகுறிகள் முன்பே நமக்குத் தெரியத் தொடங்கிவிடுகிறது. உடன் மாத்திரையை எடுத்துக்கொள்வதும், எடுத்துக்கொள்ளாமல் அன்றைய நாள் முழுவதும் அவதிப்படுவதற்கும் உங்கள் மதிதானே காரணமாக இருக்கின்றது. மாத்திரையைச் சாப்பிட்டால் அரைமணியில் தலைவலி தீர்ந்துவிடும் என்று அதே மதிதான் சொல்கிறது. மாத்திரை சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடிக்கவைப்பது மதியா அல்லது விதியா.

ஜோதிஷரீதியாக மதியைச் சந்திரன் என்கிறோம்… விதியை வெல்பவனும் சந்திரனே… பூர்வபுண்ய ஸ்தானம் மற்றும் பாக்யஸ்தானம் எனப்படும் 5, 9ஆம் இடங்கள் உங்களது பூர்வ கர்ம பாப புண்ணியங்களைக் கூறும் இடம். இந்த இடங்களில் மற்றும் கேந்திரங்கள் எனப்படும் 1, 4, 7, 10ஆம் இடங்களில் குரு, சுக்ரன், புதன், சந்திரன் வரப்பெற்றவர்கள் விதியை வெல்லும் திறன் வாய்ந்தவர்களாகவேதான் இருக்கிறார்கள். மறைவிடங்களான 3, 6, 8, 12ஆம் இடங்களில் சந்திரன் எனப்படும் மனஸ்காரகன் வரப் பெற்றவர்கள் விதியின் பிடியில் மாட்டிக்கொண்டு மீள வழிதேடி அலைபவர்களாகவும் இருக்கின்றார்கள். மேற்சொன்ன அனைத்து இடங்களையும் குருபகவான் பார்த்தாலோ, குருபகவானும் சந்திரனும் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் மதி ஒளி கிடைத்து விதியை வென்றவர்களாகவும் இருப்பார்கள்.

நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்… கேட்டார் கிருஷ்ணசாமி.

நீர் என்னிடம் ஜோதிடப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பதை விதி என்று நினைத்தாலும் சரி அல்லது மதி சொன்னது என்று கொண்டாலும் சரி இந்த ஜாதகங்களைச் சேர்ப்பது உத்தமம் என்று எனது மதி சொல்கிறது. இவர்கள் சேரவேண்டும் என்பது விதியாகவும் இருக்கலாம். உங்கள் பையனிடம் எனது கருத்தைச் சொல்லுங்கள். அவனது மதி அதை முடிவுசெய்யட்டும்.

குழம்பிய மனத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் கிருஷ்ணசாமி.

“தியாகு… உனக்கு ஒரு வரன் வந்திருக்கு. மூலநக்ஷத்திரப் பெண். நீ என்ன சொல்லறே. ஜோஸ்யர் மாமா பொருத்தம் நன்னா இருக்குன்னு சொல்றார்.”

பெண் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தான் தியாகு. தன் செல்போனை எடுத்துப் பெண் தகப்பனாருக்கு போன் செய்தான்.

“சார்… நான் சென்னையிலிருந்து பேசறேன். உங்க பெண் மூலநக்ஷத்திர ஜாதகம் வந்தது. நான்தான் மாப்பிள்ளைப் பையனே பேசறேன். பிடெக் படிச்சு நல்ல உத்யோகத்தில் இருக்கேன். ஜாதகப் பொருத்தம் நன்னா இருக்குன்னு எங்க ஜோஸ்யர் சொல்றார்.”

“ரொம்ப மகிழ்ச்சி சார்… நூறு ஜாதகத்துக்கு மேலே பார்த்துட்டேன். எல்லோருமே மூலநக்ஷத்திரம் வேண்டாம்ன்னு சொல்றா. உங்களுக்குப் பெரிய மனசு சார்.”

“பெரிய மனசு இருக்கட்டும் சார். உங்களுக்கும் ஒரு பையன் கல்யாணத்துக்கு இருக்கானே. பிஇ படிச்சுட்டு நல்ல வேலையில் இருக்கறதா ஜாதகக் குறிப்பிலே போட்டிருக்கேளே…”

“ஆமாம். உண்மைதான். பெண் கல்யாணத்தை முடிச்சுட்டு பார்க்கலாம்ன்னு இருக்கேன்.”

“ஒரு கண்டிஷன் மாமா… எனக்கு ஒரு தங்கை இருக்கா. ஆயில்ய நக்ஷத்திரம். நல்ல படிப்பு, நல்ல வேலை. உங்க பையனுக்கு என் தங்கையைக் கல்யாணம் பண்ணின்டா, உங்க… மூலநக்ஷத்திரப் பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். இரண்டு கல்யாணத்தையும் ஒன்னாகவே வச்சுக்கலாம்.”

“எங்களுக்கும் ஆட்சேபனையே இல்லை.”

தனது புத்திக்கு இப்படிக் கேட்கவேண்டும் என்று தோணலையே. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். மகிழ்ச்சியில் திளைத்தார் கிருஷ்ணசாமி. மதி விதியை வெல்லும் என்பது இதுதானா. யோஜிக்கத் தொடங்கினார் கிருஷ்ணசாமி.


Contact Astrologer