கிருஷ்ணசாமி… கிருஷ்ணசாமி… யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தார் கிருஷ்ணசாமி,

‘அடடே.. நம்ம குப்புசாமி.. வா வா.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து வாங்கோ மாமி… இன்னும் இரண்டு பேர் வந்திருக்காளே இவாளெல்லாம் உங்க ப்ரண்ட்ஸா…’ வரவேற்றார் கிருஷ்ணசாமி..

‘உட்காருங்கோ… இதோ வந்துட்டேன்’ சொலிக்கொண்டே சமயல் கட்டுக்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி.

‘அடியே… யார் வந்திருக்கா பார்த்தியா…’

‘உங்க பிரண்ட் கருப்பு குப்புசாமி தானே… பார்த்தேன்… பார்த்தேன்…’ சொன்னாள் மாமி

‘அவாத்து மாமியும் வந்திருக்கா.. மத்தவாளெல்லாம் குப்புசாமிக்கு வேண்டிய வாளாம்.. எல்லோருக்கும் காப்பி போட்டு எடுத்துண்டு வா…’ சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தார் கிருஷ்ணசாமி…

‘என்ன குப்புசாமி எப்படி இருக்கே.. என்ன திடீர் விஜயம்.. வரப்போறேன்னு ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லக்கூடாதா…’

‘உங்காத்துக்கு எதிரே உள்ள ப்ளாட்லே ஈஸ்வரன்னு ஒருத்தர் இருக்காரோன்னோ.. அவருடைய பெண் ஜாதகம் என் பையனுக்கு வந்தது.. பெண் எப்படி இருப்பாள் என்று பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்…’ சொன்னார் குப்புசாமி

‘பையன் வரலியா…’ கேட்டார் கிருஷ்ணசாமி

‘ஹி..ஹி.. பையனுக்கு ஆபிஸிலே நிறைய வேலை.. எங்களை போய் பார்த்துட்டு வரச் சொன்னான்..

‘என்னப்பா இது.. எனக்கு என்னமோ நீ பண்றது சரின்னு தோனல. பையனுக் குத்தானே பெண்ணைப் பிடிக்கணும்.. நீங்க பார்த்து உங்களுக்கு பிடிக்கலேன்னு வைச்சுக்கலாம்.. அவனுக்கு நேராப் பர்க்கும் போது பிடிச்சுப்போகலாமே.. நீங்க பண்றது தப்புன்னு தோணறது குப்புசாமி…’

‘என்னமோப்பா.. சொல்லிப்பார்த்துட்டேன்.. எங்களை போய் பார்த்துட்டு போட்டோவை வாங்கிண்டு வரச் சொன்னான்.. நீயும் இங்கேதானே இருக்கெ.. முதல்லே உன்னைப் பார்த்து விஜாரிச்சுட்டு போகலாம்னு வந்தோம்.

‘ரொம்ப நல்ல பொண்ணுப்பா.. இந்த சம்பந்தத்தை நல்லபடியா முடிச்சுக்கோ.. இந்த காலத்திலே பெண் கிடைக்கறதே

பெரிய பாடா இருக்கு…’ சொன்னார் கிருஷ்ணசாமி

‘சரிப்பா.. ரொம்ப சந்தோஷம் உங்களை எல்லாம் பார்த்ததிலே…’ காபியை சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார் குப்புசாமி தம்பதியர்.

இரண்டு நாள் கழித்து போன் அடித்ததும் எடுத்துப் பேசினார் கிருஷ்ணசாமியாத்து மாமி.

‘ஹலோ.. நான்தான் குப்புசாமி சம்ஸாரம் பேசறேன்.. உங்காத்து எதிராத்து பெண் பார்த்தோமோன்னோ.. உங்க மாமா கூட அழகா இருப்பான்னு சொன்னாரே.. பெண் பார்த்தோம்.. ஒரே கருப்பு.. எங்காத்து பையனும் கொஞ்சம் மாநிறம்தான்.. கருப்புக்கு கருப்பே வாண்டாம்னு சொல்லிட்டார் எங்க ஆத்துக்காரர். இதை நாசுக்கா அவாளிடம் சொல்லிடறேளா..’

கிருஷ்ணசாமி மாமிக்குக் கோபம் வந்தது.. ‘ஏன்னா உங்க்க ப்ரண்ட் பண்ணின கூத்தை கேட்டேளா.. எதிராளாத்து பெண் கருப்பாம்.. சம்பந்தம் பிடிக்கலையாம்.. இவரும் இவர் பெண்டாட்டியும் என்ன பட்டு சேப்பாவா இருக்கா.. தொட்டா ஈஷிக்கற கருப்பு.. இந்த லக்ஷணத்திலெ அந்தப் பெண்ணைப் பற்றி குறை சொல்றாளே..’

‘இப்படித்தான்டி பல பெற்றோர் தன் பையன்களுக்கும் பெண்களுக்கும் பரம் சத்ருவா நடந்துக்கறா.. பையனை அழைச்சுண்டு வந்து பெண் பார்க்காம இவா எதுக்கு வந்து பெண்ணை பார்கறா? எப்படி அந்தப் பையனுக்குக் கல்யாணம் நடக்கும்…’ புலம்பினார் கிருஷ்ணசாமி.

மாலை ராமசாமியுடன் ஜோஸ்யரைப் பார்க்கக் கிளம்பினார் கிருஷ்ணசாமி..வரவேற்றார் ஜோஸ்யர்.. என்ன கிருஷ்ணசாமி முகத்திலே கொஞ்சம் சோகம் தென்படறதே…

‘அது ஒன்னும் இல்லே மாமா..’ குப்புசாமி பெண் பார்த்த படலத்தை விவரித்தார் கிருஷ்ணசாமி.. ‘ஏன் மாமா.. இவா எல்லாம் இப்படி இருக்கா…’

‘வாஸ்தவம்தான் கிருஷ்ணசாமி… நிறத்தை வைத்து எடைபோடக் கூடாதுதான்.. எதுவுமே பார்க்கிற பார்வையிலேதான் இருக்கு. உங்களுக்கு அந்த பெண் அழகா தோணறா.. நல்ல குடும்பத்து பெண்ணுன்னு எனக்கும் தெரியும்.. புறத்தோற்றத்தை வைத்து மயங்கற குப்புசாமி உங்காத்து மாமி சொல்லறாப்போல என்ன சிவப்பு தோல் போத்தியவளா.. அவா ரெண்டு பேருமே கருப்புதான்..’

‘பையனும் அமாவாசை கருப்புதான்… என் பையனுக்கு சிவப்பு பெண்தான் மேட்ச் ஆவாள்னு சொன்னாராம் குப்புசாமி…’ சொன்னார் கிருஷ்ணசாமி.

‘எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாமே தவறாகத்தான் தெரியும் கிருஷ்ணசாமி. உங்க பிரண்ட் குப்புசாமியோட குடும்பத்தார் அனைவருமே கருப்புதானே.. மறுபடியும் ஒரு கருப்பான பெண்ணை குடும்பத்துக்குள் ஏன் அழைக்கணும்னு

உங்க பிரண்ட் யோஜித்து இருக்கலாம் இல்லையா…’

‘அந்த பெண்ணை ரொம்ப கருப்புன்னு சொல்ல முடியாது மாமா.. மாநிறமா இருந்தாலும் மிகவும் கெட்டிக்கார பொண்ணு… கொடுத்து வைக்கலே அந்த பையனுக்கு…’ பொரிந்து தள்ளினார் கிருஷ்ணசாமி

‘உங்க பிரண்டுகூட சரின்னு சொல்லி இருந்தாலும் அவரோட கூட வந்தவாளெல்லாம் ஏதாவது ஏடாகூடமா சொல்லி பிரண்டோட மனசை மாத்தி இருக்கலாம் இல்லையா’

‘என்ன சொல்றேள் மாமா.. நீங்கள்… ‘ கேட்டார் ராமசாமி.

தருமனும் கிருஷ்ணனும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஒரு நாள் துரியோதனும் இவர்களுடன் சேர்ந்துகொண்டான். எதிரே ஒரு கசாப்புக் கடைக்காரன் இறைச்சி விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்தான் தருமன்… ’இப்படி ஒரு பாபச் செயலை செய்கிறானே.. இவனுக்கு நல்ல கதி கிடைக்குமா..’ என்று எண்ணினான் தருமன். சிறிது தூரம் கடந்து அந்த இறைச்சிக் கடையை நெருங்கியபோது அந்தக் கடைக் காரன் சில இறைச்சித் துண்டுகளையும் எலும்புகளையும் மேல் கூரையிலும் நடு ரோட்டிலும் வீசினான். சில காகங்களும் பருந்துகளும் வந்து அவற்றைக் கொத்திச் சென்றன. ரோட்டில் எரிந்த எலும்புத் துண்டுகளை அருகில் உள்ள நாய்கள் கவ்விச் சென்றன. தருமன் நினைத்தான் ‘அடாடா.. அந்த கசாப்புக் கடைக்காரனைத் தவறாகப் புரிந்துகொண்டேனே.. ஆடுகளை வெட்டி விற்பது அவன் தொழில். ஆனாலும் அவனுக் குள்ளும் தரும சிந்தனை இருக்கே.. இது எனக்கு புலப்படலையே.. எனக்கு இப்படி ஒரு விபரீதமான் எண்ணம் ஏன் வந்தது என்பதைத் தெரிந்துக்கொள்ள விரும்பினான் தருமன்.

உடன் இருந்த கிருஷ்ணன் சொன்னான் ‘உன் கூட இன்று வந்திருப்பது துரியோ தனன்… அவனுடைய புத்தி உன்னுள் புகுந்துவிட்டது..’

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நல்ல சிந்தனை உடையவராக இருந்தால் நாம் பார்க்கும் பார்வையில் தவறு வந்து இருக்காது என்பதை உணர்ந்தான் தருமன். கிருஷ்ணன் தருமனையும் துரியோதனையும் அழைத்து நீங்கள் இருவரும் பூலோகம் சென்று வாருங்கள்.. தருமா நீ ஒரு கெட்டவனையும் துரியோதனா நீ ஒரு நல்லவனையும் பூலோகத்தில் இருந்து அழைத்து வர வேண்டும் என்று ஆணை இட்டான். இருவரும் பூலோகம் சென்று திரும்பினார்கள். தருமன் சொன்னான் ‘கிருஷ்ணா என் கண்ணுக்கு ஒரு கெட்டவன்கூட பூலோகத்தில் தென்பட வில்லையே.. பார்க்கும் இடம் எல்லாம் எத்தனை நல்லவர்கள்.. துரியோதன சொன்னான் ‘என் கண்ணுக்கு ஒரு நல்லவன் கூடத் தென்படலே.. எல்லோருமே அயோக்யர் களாகவேதான் இருக்கிறார்கள்…’

பார்த்தீர்களா.. நாம் எப்படி ஒன்றைப் பார்க்கிறோமோ அதுதான் நமது மனதை பாதிக்கும்.. நல்லது கெட்டது எல்லாமே நமது பார்வையைப் பொருத்தே அமையும்.’

‘குப்புசாமியின் பார்வை சரியில்லை என்கிறிர்களா..’ கேட்டார் ராமசாமி.

‘அப்படி இல்லை ராமசாமி.. அவர் குடும் பத்தில் உள்ள அனைவருமே கருப்பு என்கிற போது ஒரு மாற்றம் தேவை என்ற எண்ணம் அவர் பார்த்த பார்வையின்போது வந்ததில் தவறு இல்லை.. என்பதே என் கருத்து..’

‘ஒரு சிவப்பு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சா மட்டும் குப்புசாமி பிள்ளைக்கு சிவப்பா குழந்தை பிறந்துடுமா..’ கேட்டார் கிருஷ்ணசாமி.

‘பாத்தியா கிருஷ்ணசாமி.. இந்த கவலையை நீர் ஏன் பட வேண்டும்… நீர் பார்க்கும் பார்வை வேறு… குப்புசாமியின் பார்வைக்கு அர்த்தம் வேறு என்றுதான் சென்னேன்…’

லக்னத்தில் 5, 7, 10ஆம் இடங்களில் சனிஸ்வரன் வரப்பெற்றவர்கள் அனைவருமே தவறான கண்ணோட்டத்தில் தான் எதையும் பார்ப்பார்கள்… தவறாகத்தான் எதையுமே முடிவும் செய்வார்கள்.. மந்தன் எனப்படும் சனிஸ்வரன் அவர்களை சரியான முடிவுகளை எடுக்க விடமாட்டான். இவர்களது தவறான கற்பனைகள் கடைசியில் விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கும். மூன்றாம் இடமான மனசு ஸ்தானத்தில் குருபகவான், சந்திரன் மற்றும் கேது பகவான் வரப்பெற்ற வர்களும் தவறான முடிவுகளை எடுப் பவராகவே இருப்பார்கள்.

‘மாமா.. நீங்கள் எவரையும் விட்டுக் கொடுக்காமல் பேசறேளே.. எதையும் நேர்மறையாகவே சிந்திக்கும் உங்களது பார்வைக்கும் விசேஷம் உள்ளது..’’ விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள் கிருஷ்ணசாமியும் ராமசாமியும்.

மறுநாள் காலை ஜன்னல் ஓரம் நின்று கொண்டு அடுத்த வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தார் கிருஷ்ணசாமி..

‘என்ன அடுத்தாத்தையே பார்த்துண்டு இருக்கேளே.. என்ன அங்கே ஸ்பெஷலாத் தெரியறது…’ கேட்டாள் மாமி.

‘நீயும் பாரேன்.. அடுத்தாத்து மாமி தோச்சு உலர்த்தி இருக்கிற பேண்ட் சட்டை எல்லாமே எப்படி அழுக்கா இருக்கு பாரு… செய்யற காரியத்தை ஒழுங்கா செய்ய வேண்டாமா…’

மாமியும் பார்த்துவிட்டு விடு விடு என்று வீட்டுக்கு வெளியே வந்து ஜன்னல் பக்கம் நின்றார்.

‘எதுக்குடி இப்போ போய் வெளியே போய் நிக்கறே…’ கத்தினார் கிருஷ்ணசாமி..

‘அப்படியே அங்கேயே கொஞ்சம் நாழி நில்லுங்கோ’’ சொல்லிக்கொண்டே ஜன்னல் கண்ணாடிகளை நன்கு துடைத்தார்.’. அழுக்கெல்லாம் போய் ஜன்னல் கண்ணாடிகள் பளபளத்தன.

‘ஏன்னா.. இப்போ பாருங்கோ அடுத்தாத்து மாமி தோச்சு போட்ட பேண்ட் சட்டையெல்லாம் வெளுப்பா போச்சான்னு பாருங்கோ..’

‘ஆமாண்டி.. என்னடி இது மாயம்.. கொஞ்ச நாழி முன்னாடி பார்த்த அழுக்கு சட்டை எப்படி வெளுப்பா போச்சு…’

‘அழுக்கு உங்க பார்வையிலேயும் கண்ணாடியிலேயும்தான்.. கண்ணாடியிலே அழுக்கு போயிடுத்து இப்போ.. ஆனா உங்கள் பார்வையில் உள்ள அழுக்கு போகுமான்னு தெரியலே..’ இழுத்தாள் மாமி..

தனக்கு 5ஆம் இடத்தில் சனி இருப்பதை மறுபடியும் நினைத்துப் பார்த்தார் கிருஷ்ணசாமி..


Contact Astrologer