தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today -அக்டோபர் 2010
தேதியூர் V.J. ராமன்

கிருஷ்ணசாமி ஸ்வாரஸ்யமாக பேப்பரில் மூழ்கி இருந்தார்.

“என்ன கிருஷ்ணசாமி… நான் வந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன பேப்பரில் ஸ்வாரஸ்யம் இன்னிக்கு…”

“வா.. வா… ராமசாமி.. நீ சொன்ன மாதிரி ஸ்வாரஸ்யமான செய்தி ஒன்று படிச்சேன். அதுவும் எனக்குத் தெரிந்த குடும்பத்தைப் பற்றிய செய்திதான்.. 2004இல் நடந்த நிகழ்ச்சி இது. இப்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது…”

எனது நெருங்கிய நண்பர் குரோம்பேட்டையில் இருக்கிறார். அவருடைய பையன், மாட்டுப்பெண் இருவரும் மந்தைவெளிக்கு அவனுடைய நண்பன் ஒருவனுடைய பைக்கில் சென்றுள்ளார்கள். மந்தைவெளி அருகே வரும்போது ஒரு தெரு நாய் குறுக்கே புகுந்து விரட்ட நிலை தடுமாறி இருவரும் கீழே விழ, பின்னால் உட்கார்ந்திருந்த பெண்ணுக்குக் கால் ப்ராக்சர் ஆகி மூன்று மாதம் பெட்டில்… வேலைக்குப் போக முடியவில்லை. பையன் புத்திசாலித்தனமா கோர்ட்டில் ஒரு கேஸைப் போட்டு ரூ 5லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று முறையிட்டுள்ளான். கோர்ட்டிலே நேற்று ஆர்டர் போட்டுட்டா. அந்தப் பெண்ணுக்கு ஒன்னரை லக்ஷம் இன்ஸுரன்ஸ் கம்பெனி கொடுக்க வேண்டும் என்று.

இதில் வேடிக்கை என்னன்னா… பைக் அந்தப் பையனுடையதே இல்லை என்றாலும் கோர்ட்டிலே அந்தப் பையனுடைய வக்கீல் மிகவும் திறமையாக வாதாடி இருக்கான்… பைக்குக்கு உரிமையாளன் வேறு யாராகவோ இருந்தாலும் அந்த பைக்கினை ஓட்டிச் சென்ற போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. பைக் ப்ரபல மத்திய அரசுக்குச் சொந்தமான இன்ஸுரன்ஸ் கம்பெனியில் இன்ஸுர் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்ஸுரன்ஸ் கம்பெனிக்கு இதில் பெரும் பங்கு உள்ளது என்று வாதாடியதன் பலன் இன்று கிடைத்துள்ளது.

யாருடைய பைக்கில் யாரோ ஓட்டிச்செல்லப் பின்னால் உட்கார்ந்து இருந்த பெண்ணுக்கு அடித்தது யோகம். இந்த விஷயம் நடந்தபோது எனக்குத் தெரியும். என் நண்பன் மருத்துவ செலவுக்குச் செலவழித்தது ரூ. 30,000 தான். அந்தப் பெண் வேலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட நஷ்டம் என்று பார்த்தால் அது ஒரு 20,000 இருக்கும். ஆக ரூபாய் ஐம்பதாயிரம் செலவழித்ததற்கு ஒன்னரை லக்ஷம் ரூபாய் கிடைத்தது. கேட்டால் மன உளச்சல் அது இது என்று சொல்றான். என்ன யோகம் பார்த்தாயா. இதை யோகம் என்று சொல்றதா அல்லது அதிர்ஷ்டம் என்கிறதா என்ற நினைப்பில் மூழ்கி இருந்தேன்..

ரொம்ப ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கு. ஏதோ ஒரு விபரீதம் நடத்து அதன் மூலம் கிடைத்த யோகம் இது. அனேகமா இது விபரீத ராஜயோகமாக இருக்கலாம். என்றாலும் இதுபற்றி இன்றைய விவாதமாக ஜோஸ்யரிடம் வைத்துக்கொள்ளலாம். நாமும் இந்த யோகம் பற்றித் தெரிந்துகொண்டா மாதிரி இருக்கும்..

இருவரும் ஜோஸ்யரைப் பார்க்கப் புறப்பட்டார்கள்..

“வாங்கோ… வாங்கோ… இன்று என்ன புதுசா ஏதாவது ஸப்ஜெக்ட் கிடைத்துள்ளதா.” ஜோஸ்யர் வரவேற்றார்.

பத்திரிகைச் செய்தியைச் சொன்னார் கிருஷ்ணசாமி.

நீங்க நினைச்சது சரிதான் ராமசாமி… என்று ஆரம்பித்தார் ஜோஸ்யர். இது போன்ற பல நிகழ்ச்சிகளை உங்களுக்குச் சொல்றேன் கேளுங்கோ. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான விபரீத ராஜயோகங்கள்.

போன வருஷம் அரக்கோணம் அருகே பள்ளிக்கூடம் ஒன்றில் பத்தாம் வகுப்பு பரிக்ஷையின் போது ஸ்டேட் ஸிலபஸ் கணக்கு கேள்வித் தாளுக்குப் பதிலாக மெட்ரிகுலேசன் கேள்வித்தாள் மாற்றிக் கொடுத்துள்ளார்கள். மாணவர்கள் சற்றுக் குழம்பியபடி பரிக்ஷை எழுதியுள்ளார்கள். என்றாலும் கேள்வித் தாள் மாறிய விஷயம் பரிக்ஷை முடியும் சமயத்தில்தான் தெரியவந்துள்ளது. உடனே விவரம் கல்வித் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் அரசு, அந்தப் பள்ளி மாணவர்கள் எல்லோருக்குமே அந்த பரிக்ஷையில் நூற்றுக்கு நூறு மார்க் போட உத்திரவிட்டது. இதில் என்ன ஸ்வாரஸ்யம்னா. நன்றாகவே படிக்கும் மாணவருக்கும் நூறு மார்க். சுமாராகப் படிக்கும் மாணவருக்கும் கேள்வித்தாள் மாறிய விபரீதத்தில் நூறு மார்க் கிடைத்ததே. இதுவும் விபரீத ராஜயோகம்தான்.

இதுபோன்ற சம்பவங்கள் பேப்பரில் நிறைய வந்துள்ளதே. அப்போதெல்லாம் இதுபற்றி நமக்குப் புரியவில்லை. என்றார் ராமசாமி.

உண்மைதான்… ஜோதிஷத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தெரிந்தவர்களுக்குத்தானே இதன் வினோதங்கள் புரியும்.

மும்பையில் சமீபத்தில் நடந்த சம்பவம். ஒரு ஐந்து ரூபாய் நாணயம் ஒருவரது உயிரைக் காப்பாற்றி உள்ளது. என்ன ஆச்சர்யமாக இருக்கா. ஷெட்டி என்பவன் ஒரு வீடியோ பார்லரில் இருந்தபோது அவனுடைய விரோதிகள் அவனைத் துப்பாக்கியால் சுட எப்போதுமே மணிபர்ஸை சட்டைப் பையில் வைக்கும் வழக்கும் உள்ள அவனது பர்ஸில் உள்ள ஐந்து ரூபாய் நாணயத்தின் மீது பட்ட புல்லட் அவனது உயிரை ஆபத்து இல்லாமல் காப்பாற்றியது. ஒரு ஐந்து ரூபாய் நாணயம் ஒருவரது உயிரைக் காப்பாற்றியது என்றால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஒரு விபரீதத்திலும் ஒரு நன்மை உயிர் பிழைக்க உதவியது என்றால் இதுவும் ஒரு வகை விபரீத ராஜயோகம்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது நாட்டை ஆளும் அரசியல் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் தன் ஊருக்குச் செல்லும்போது அவருடைய எதிரிகளால் அரிவாளால் தாக்கப்பட்டார்… அவர் கழகத்தில் போட்டிருந்த பெரிய ராமர் டாலர் மீது விழுந்த அரிவாள் வெட்டு அவரது உயிரைப் பறிக்காமல் காப்பாற்றியது. இது சில வருடங்களுக்கு முன் வெளிவந்த உண்மைச் செய்தி… ஒரு ராமர் டாலர் உயிரைக் காப்பாற்றியதும் ஒருவகை விபரீத ராஜயோகமே.

கனவு காணுங்கள் என்று சொன்னாரே அப்துல் கலாம்… கனவு ஒருவரது வாழ்க்கையை திசைதிருப்பியது என்றால் நம்புவீர்களா… ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பர்ரோ என்பவர் நிறைய தொழில்கள் செய்து நொடித்துப் போனார். ஒரு நாள் கலக்கத்துடன் படுத்திருந்த அவன் கனவில் ஒரு மானிடக் குரங்கு வினோதங்களைச் செய்வது போன்று காட்சிகள் தெரிந்தன… விளைவு அதை வைத்தே பல கதைகளை எழுதத் தொடங்கினான்… இதுவே தான் டார்ஜான் கதைகள் என்று ப்ரபலமாக வெளிவரத் தொடங்கிப் பின்பு திரைப்படமாக வெளி வந்து பர்ரோவுக்குக் கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொடுத்தது. கனவு என்று அவர் சும்மா இருந்திருந்தால் கோடிச்வரனாக ஆகி இருக்க முடியாது… ஏதோ ஒன்றின் விளைவு… திடீர் தன போகத்தைக் கொடுக்கின்றது என்றால் அதுவே விபரீத ராஜயோகம் எனப்படும்.

ஜோதிட ரீதியாக ஒரு யோகத்தைக் கொடுக்கும் கிரகம் விபரீதமான (மறைவிடம்) இடத்தில் ஒருவனது ஜாதகத்தில் அமர்ந்து அந்த விபரீதமான இடத்தின் அதிபதிபான கிரகம் வேறு ஒரு விபரீத இடத்தில் (மறைவிடம்) அமரும்போது இந்த விபரீத ராஜயோகம் சித்திக்கின்றது… பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த யோகத்துக்கு அதிபதியான புதன் (வித்யாகாரகள்) விபரீத இடங்களான 3, 6, 12ஆம் இடங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து அந்த இடத்தின் அதிபதிபான கிரகம் மற்றைய மறைவிடங்களில் அமர்ந்தால் விபரீத ராஜயோகம் சித்திக்கும். தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வித்யா காரகன் புதன் விபரீதமான (மறைவிடங்களான) இடங்களான 3, 6, 12ஆம் இடங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து அந்த இடத்தின் அதிபதியான கிரகம் மற்றைய மறைவிடங்களில் அமர்ந்து இருந்தால் விபரீத ராஜயோமாக மாறிப் பலனைத் தரும். பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைத்தது இது போன்ற ராஜயோகம். இதேபோல்தான் ஆயுள் சாரகன் சனிச்வரன் அல்லது ஸ்தானாதிபதி (8க்குடைய அதிபதி) 12ஆம் இடம் அமர்ந்து (மோக்ஷ ஸ்தானம்) அந்த 12ஆம் இடத்தின் அதிபதி 8ஆம் இடம் (ஆயுள் ஸ்தானம்) அமர்ந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்க, யோகமாகச் சித்திக்கும் ஐந்து ரூபாய் நாணயம், ராமர் டாலர் காப்பாற்றியது இது போன்ற விபரீத ராஜயோகத்தால்தான்… ஒருவரது ஜாதகத்தில் தனகாரகன் குருபகவான் 8ஆம் இடம் அமர்ந்து அந்த 8ஆம் இடத்தின் அதிபதி 12ஆம் இடமான வரவுஸ்தானம் அடைந்தால் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்… ஆனால் இது போன்ற யோகம் யாருக்கு எப்போது சித்திக்கும் என்று துல்லியமாகக் கூற இயலாது… நிச்சயம் வாழ்நாளில் ஒரு நாள் இது பலன் தருவது.

நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் ராமசாமியும் கிருஷ்ணசாமியும்..

வரும் வழியில் ஒரு நபர் இடைமறித்தார்.. ஸார் உங்களில் யார் கிருஷ்ணசாமி.

என்ன விஷயம் சொல்லுங்கள்… பின்பு எங்களில் யார் கிருஷ்ணசாமி என்று சொல்றோம்.

சார்… நான் மருங்கூரில் இருந்து வரேன்… அங்கே கிருஷ்ணசாமியின் சொந்தக்காரர் குருசாமி என்பவர் பள்ளிக்கூட வாத்யாராக வேலை செய்தார். 55 வயது ஆறது. கல்யாணம் பண்ணிக்கலே. திடீரெனக் காலமாயிட்டார்.

கிருஷ்ணசாமிக்கு உடம்பெல்லாம் பதறியது… தனக்கு ஏதேனும் பாதகம் ஆகிவிடுமோ. வாங்கிய கடனுக்குத் தன் பேரைச் சொல்லிவிட்டுப் போய் சேர்ந்துட்டானா. என்றெல்லாம் கற்பனைகள் ஓட… எங்களில் யாருமே கிருஷ்ணசாமி இல்லை. நீங்கள் போகலாம் என்றார் கடுகடுப்புடன்..

சார்… நான் வந்த விஷயத்தை முழுமையாகக் கேட்காமல் பயப்படுகின்றீர்களே… சாகறதுக்கு முன்னால் தனக்குச் சேர வேண்டிய அனைத்து ப்ராவிடன் பண்ட், கிராஜுவிடி, இன்ஸுரன்ஸ், லீவு தொகை எல்லாத்துக்குமே கிருஷ்ணசாமி தான் வாரிசு என்று எழுதிவைத்துவிட்டுப் போய் இருக்கான். கிட்டத்தட்ட ரூ 10 லட்சம் அரசாங்கத்திடம் இருந்து வரும்… உங்களில் கிருஷ்ணசாமி இல்லை என்றால் நான் நடையைக் கட்டுகிறேன்…

சார்… சார்… மன்னிக்கணும்.. நான்தான் கிருஷ்ணசாமி… ஏதோ ஒரு பயத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன்… ஹி… ஹி என்று வழிந்தார் கிருஷ்ணசாமி.

பார்த்தீரா… இதுதான் நிஜமான விபரீத ராஜயோகம்… நீர் அதிகம் பார்த்தே இல்லாத தூரத்துச் சொந்தக்காரன் உங்கள்மீது வைத்துள்ள அபிமானத்தைப் பார்த்தீரா. உமது ஜாதகத்தில் எட்டாம் இடம் உள்ள குரு பகவான் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்.. பெண்ணோட கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தணும். ராமசாமி வாழ்த்திவிட்டு நடையைக் கட்டினார்.

விபரீத ராஜயோகம் வேகமாக வேலை செய்யத் துவங்கியது… வந்தவருடன் வேகமாகக் கிளம்பினார் கிருஷ்ணசாமி வீட்டுக்கே விவரம் சொல்லாமல்…


Contact Astrologer