தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today -செப்டெம்பர் 2010
தேதியூர் V.J. ராமன்

“என்ன ராமசாமி… இன்று நம்மூர் கோயிலிலே அங்கயர்கரசி உபன்யாசம்… போய்வரலாமா…”

“அதிசயமாயிருக்கே கிருஷ்ணசாமி… எங்கே கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு சொல்லுவே. நீயே கூப்பிடறேன்னா ஏதோ விஷயம் இருக்கு…” ராமசாமியும் புறப்பட்டார்.

“பொய்யான மெய்” இது தான் தலைப்பு கணீரென்ற குரலில் ஆரம்பித்தார் அங்கயர்கரசி.

“ஜனன காலம் தொட்டே இந்தப் பொய்யான மெய் (உடம்பு) எத்தனை பொய்களுக்குச் சொந்தக்காரன் ஆகிவிடுகின்றது தெரியுமா… ஆயிரம் பொய்யைச் சொல்லிக் கல்யாணத்தை நடத்து என்பதற்குப் பல்வேறு விதமாக விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் பொய்மை இல்லாத கல்யாணங்கள் எதுவும் எப்போதும் நடப்பதில்லை. கலியுகம் பிறந்ததிலிருந்தே இந்தப் பொய் இல்லாத இடமோ, சொல்லாதவர்களோ இல்லை என்றேதான் கூறவேண்டியுள்ளது. பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரே பொய்யா மார்க் ஷீட் தயாரித்து மாணவர்களையும் பெற்றோரையும் பல்கலைக் கழகங்களை ஏமாற்ற உதவுகின்றார் என்றால் எங்கே போகின்றது இந்த உலகம் என்றே புரியவில்லை. குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோம் என்ற காலம் மலையேறிவிட்டது. உலகம் இவர்களை எப்படி வரவேற்கின்றது என்ற நிலைதான் மனதுக்கு வேதனை தரும் விஷயமாக உள்ளது. சமீபத்தில் 1700 எம்.பி.ஏ. மாணவர்கள் பங்கேற்ற ஓர் ஆய்வில் 63 சதவிகிதத்தினர் பொய்யான தகவல்களைக் கொடுத்துதான் வேலை பெற்றுள்ளார்கள் என்றால் யார் ஏமாற்றுகிறார்கள் யார் ஏமாறுகிறார்கள் என்றே புரியவில்லை. பொய்யான உலகம்… பொய்யான வாழ்க்கை இப்படி அண்ட சராசரமே பொய் என்னும் மாயையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றது…”

“என்ன ராமசாமி… கொஞ்சம் போரடிக்கிறாப் போல இல்லை.” கிசுகிசுத்தார் கிருஷ்ணசாமி

“உண்மையைச் சொன்னால் உமக்குப் போரடிக்கத்தான் செய்யும்… பேசாமல் உபன்யாஸத்தைக் கேளும்.”

த்ரேதாயுகம் த்வாபரயுகம் என்று எல்லா யுகத்திலேயும் ‘பொய்’ தர்மம் இருக்கத்தான் செய்தது என்றாலும் அதை நமது புராணங்கள் உண்மையை மறைத்துச் சொல்லப்பட்டதாகவே வர்ணித்தன… பொய் என்பது ஒரு காரியம் நடப்பதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு காரியம் நடக்காமல் இருப்பதற்கும் அது உபயோகப்படுத்தப்படலாம்.

கதை ஒன்று சொல்கிறேன் என்று அங்கயர்கரசி ஆரம்பித்ததும் சுறுசுறுப்பானார் கிருஷ்ணசாமி.

“குருக்ஷேத்ரப் போர் நடந்துகொண்டு இருந்தது… துரோணாச்சாரியாரின் அம்பு மழைக்கு எவராலும் தாக்கு பிடிக்க இயலவில்லை. பாண்டவர் படையில் முக்கால் பலம் அழிந்துவிட்ட நிலை… துரோணர் ஒருவரே பாண்டவர்களுடைய படையில் பாதியைக் குறைத்துவிடுவார் என்ற கட்டம் தெரியவந்தது. கிருஷ்ணனுக்கு. இந்நிலை நீடித்தால் பாண்டவரின் தோல்வி உறுதி என்ற கட்டம். பொய் ப்ரயோகம் ஒன்றை உபயோகித்தால்தான் காரியம் நடக்கும் என்று தீர்மானித்தான் கிருஷ்ணன்.

பீமனை அழைத்தான்… பீமா நமது படைகளை “அசுவத்தாமன்” என்கிற கவுரவர்களுடைய யானை துவம்சம் செய்துகொண்டு இருக்கின்றது… உடன் அதன் தலையை உன் கதையால் அடித்துப் பிளந்துவிடு… என்று கட்டளை இட்டான். சொன்னதுதான் தாமதம்… நிறைவேற்றிக் காட்டினான் பீமன்.

கிருஷ்ணன் இப்போது தருமன் பக்கம் திரும்பினான். “தருமா… அஸ்வத்தாமன் இறந்தான் என்று உரக்கக் கூறும்…” என்று ஆக்ஞை பிறப்பித்தான்… பொய் ஒன்றைச் சொல்வதா என்று தயக்கம் காட்டினான் தருமன். அஸ்வத்தாமன் துரோணரின் புத்திரன் ஆயிற்றே எப்படி ஒரு பொய்யைச் சொல்வது… தடுமாற்றம் அடைந்த தருமனைப் பார்த்து கிருஷ்ணன் சொன்னான். “அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது என்றுதானே சொல்லப்போகின்றீர்கள்… இதில் என்ன தயக்கம்… உரக்கக் கூறும்” மறுபடியும் ஆணையிட்டான்.

“கிருஷ்ணனின் பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று முடிவு கட்டியவராய் உண்மையை மறைத்து எப்படிச் சொல்வது என்று சற்று யோஜித்தார்… ‘அஸ்வத்தாமா ஹதம்…’ என்று கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘குஞ்சரஹ:’ என்று உரக்கக் கூறினான். அதே சமயம் சங்கநாதத்தை வேகமாக முழங்கினான் கிருஷ்ணன்… ‘அஸ்வத்தாமன் ஹதம்’ என்ற வார்த்தைகள் மட்டுமே துரோணரின் காதில் விழுந்தன. தருமன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என்று துரோணர் புரிந்துகொண்டார். நிலைகுலைந்து போனார்… போர் திசை மாறிப்போனது. கிருஷ்ணன் ஒரு பொய்யை எப்படி உண்மை போன்று அழகாக மறைத்துச் சொல்லச் சொன்னான் பார்த்தீர்களா… உண்மையில் பார்த்தால் கிருஷ்ணனும் பொய் சொல்லச் சொல்லவில்லை… தருமனும் பொய் சொல்லவில்லை… நல்ல காரியம் ஒன்று நடக்க உண்மை மறைத்துச் சொல்லப்பட்டது… ஒரு காரியம் நடக்காமல் இருப்பதற்கும் பொய் உதவுகின்றது என்பதை நாளை பார்ப்போம்” என்று எழுந்துவிட்டார் அங்கயர்கரசி.

என்ன இப்படி ஸஸ்பென்ஸ் வைத்துவிட்டுப் போய்விட்டாரே என்று குழம்பினார் கிருஷ்ணசாமி.

இருவரும் வீடு திரும்பும் வழியில் எதிரே ஜோதிடரைப் பார்க்கும்படி நேர்ந்தது. ஆஹா… இவரைக் கேட்கலாமே… யார் யார் பொய் சொல்வார்கள் என்று கேட்டுவிடலாம் என அவசரப்பட்டார் கிருஷ்ணசாமி.

உபன்யாஸம் கேட்ட விவரம் மற்றும் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விபரம் இவற்றைத் தெரிவித்தார்கள்.

“பொதுவாகப் பொய் சொல்லாதவர்கள் எவருமே உலகத்தில் இல்லை என்றே கூறலாம். ஐந்து வயதுவரை முன்னால் நடக்கும் அனைத்து பொய் பித்தலாட்டங்களையும் பிறந்த ஜீவன் உற்று நோக்கும்போதே ‘பொய்’ அதன் அடித்தளத்தில் வேரூன்ற ஆரம்பித்துவிடுகின்றது. ‘பொய் சொல்லக்கூடாது பாப்பா’… என்று ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும்போதே ‘பொய்’ என்பதன் அனுபவம் அந்தக் குழந்தைக்குப் புரிய ஆரம்பித்துவிடுகின்றது. ஹரிச்சந்திரன்… தருமன் போன்றவர்கள் கதைகள் எல்லாம் எந்தக் குழந்தைகள் மனதிலும் எந்தக் காலகட்டத்திலும் கலியுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. மாறாக அதிகம் பொய் பேசாமல் இருக்க இவை உதவலாம். சத்யசந்தனாக இருக்க இந்த உலகம் அனுமதிப்பதும் இல்லையே… ஆக எல்லா கிரகங்களும் ‘பொய்’க்கு உடந்தையாக இருந்தாலும் முக்கியமாக சனிச்சவரன் இதற்கான பங்கை ஏற்றுக் கொள்கின்றார் என்று சொல்லலாம். இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சனிச்வரன் வரப்பெற்றவர்கள் அதிகமாகப் பொய் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள் என்றாலும் லக்னம் 4, 7, 11ஆம் இடங்களில் சனிச்வரன் வரப்பெற்றவர்களும் பொய் பேசுவதை விரும்புகின்றார்கள். இதேபோல் சந்தேகப்படும் குணத்தை வளர்க்கும் கேது பகவானும் ‘பொய்’ பேச ஒத்துழைக்கிறார். லக்னம் 5, 7ஆம் இடங்களில் கேது பகவான் வரப்பெற்றவர்களும் ‘பொய்’யை அதிகம் நேசிக்கிறார்கள். அவசியத்துக்குப் பொய் சொன்னால் தவறில்லை என்கின்றது தர்ம சாஸ்திரம். ஒரு பொய் சொல்வதினால் ஒரு நன்மை நடக்கிறது என்றால் பொய் தாராளமாகச் சொல்லலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஏமாற்றுபவனுக்குப் பொய் பேச்சு சாமர்த்தியம் நிச்சயம் இருக்கும்… என்றாலும் பொய் பேசுபவனுக்குப் பெரும்பாலும் ஞாபக சக்தி இருப்பது இல்லை… பேச்சு சாமர்த்தியம் உள்ள எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் இல்லை… ஞாபக சக்தி உள்ளவர்கள் எல்லோருமே பொய் சொல்லுகிறவர்களும் இல்லை. பொய் பேசும் எல்லோருமே தன்னைச் சாமர்த்தியசாலிகளாகவே பாவித்துக்கொள்வார்கள். அந்த சாமர்த்தியம் அவர்களுக்கு இழப்பைத் தருகின்றதே ஒழிய, உயர்வை என்றுமே தருவதில்லை. பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது என்று சொல்கிறோம் இல்லையா.

ஒரு பலே பேர்வழி… உடம்பு முழுக்கப் பொய்… யாரை எப்படி ஏமாற்றுவது என்பதே 24 மணிநேர சிந்தனை. கடவுளை நோக்கித் தியானம் செய்தான். கடவுளும் ப்ரத்யக்ஷமானார்… ‘என்னப்பா வேண்டும் உனக்கு, கேள் தருகிறேன்’ என்றார். இவரை எப்படியாவது மடக்கி ஏமாற்றி நமக்குப் பெரிய அளவில் சொத்துச் சுகங்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது அவனுக்கு.

‘கடவுளே… பத்து கோடி பொற்காசுகள் உங்களைப் பொருத்த அளவில் எப்படி?’

கடவுள் சிரித்துக்கொண்டே ‘அது எனக்கு ஒரு பைசா மாதிரி.’

‘அடேயப்பா… அப்படியானால் ஒரு கோடி வருஷம் என்பது உங்களுக்கு?…’

‘ஒரு வினாடி மாதிரி’ என்றார் கடவுள்.

புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைத்துக்கொண்டு ‘ஒரு பைசா மட்டும் எனக்கு அனுக்கிரகம் பண்ணுங்கள்…’

‘அதற்கென்ன. ஒரு நொடி காத்திரு. தருகிறேன்…’ என்று சொல்லி மறைந்துவிட்டார்.

சாமர்த்தியமாகக் கேட்டதாக நினைத்த இவனுக்கு ஏற்பட்ட கதிதான் பொய் பேசுபவர்களுக்கு கிடைக்கும்.

பொய் பேசுபவனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை, அவன் உண்மையைப் பேசும்போது யாரும் நம்புவதே இல்லை…

ஏதோ புரிந்ததுபோல இருவரும் வீடு திரும்பினர்.

கிருஷ்ணசாமி வீட்டில் நுழையும்போது டெலிபோன் மணி அடித்துக்கொண்டே இருந்தது.

பேரனைப் பார்த்து, “எனக்குத்தாண்டா போன்… தாத்தா ஆத்திலே இல்லைன்னு சொல்லுடா…” என்று கூறிக்கொண்டே ரூமுக்குச் சென்றார்.

“தாத்தா ஆத்திலே இல்லைன்னு சொல்லச் சொன்னா…” என்று கூறி இணைப்பைத் துண்டித்தான் பேரன்.

மறுநாள் காலை கிருஷ்ணசாமி நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். “என்ன கிருஷ்ணசாமி… நேற்று போன் பண்ணினேன். ஆத்தில் இல்லேன்னு பேரன் சொன்னானே. நல்ல வாய்ப்பை விட்டுட்டியே… மூன் டிவியிலிருந்து வந்திருந்தார்கள். வயதான தம்பதி ஒருத்தரைப் பேட்டி எடுத்துப் பரிசு கொடுக்கலாம். யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்… என்று கேட்டார்கள். உன் ஞாபகம் வந்தது. போன் போட்டேன் வீட்டில் நீ இல்லாததால் ராமசாமிக்கு அடித்தது யோகம்… பத்தாயிரம் ரூபாய் சன்மானம் கொடுத்தார்கள்.”

ஒரு காரியம் நடக்காமல் இருப்பதற்கும் பொய் உதவும் என்று அங்கயர்கரசி சொன்னாளே… வாக்கு ஸ்தானத்தில் உள்ள சனி, என்னை பொய் சொல்லச் சொல்லி வரவேண்டிய அதிர்ஷ்டத்தை கெடுத்துவிட்டதே…

‘பொய் சொல்லக்கூடாது தாத்தா’… என்று மாற்றி, படித்துக்கொண்டிருந்தான் பேரன்.


Contact Astrologer