தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஜூலை 2011
தேதியூர் V.J. ராமன்

“வா… வா… ராமசாமி… பேரன் பாஸ் செஞ்சுட்டான். அதுதான் எல்லோருக்கும் மஹா சந்தோஷம்.”

“ப்ளஸ்டு எழுதி இருந்தானே.. அந்தப் பேரனா. என்ன மார்க் வாங்கிருக்கான்.”

“இல்லே… இல்லே… அந்தப் பேரன் இல்லை. மூன்றாவது பெண் வயத்துப் பேரன் யுகேஜியிலிருந்து ஃபஸ்ட் ஸ்டான்டர்ட் பாஸ் பண்ணிட்டான். அதே ஸ்கூலேயே அட்மிஷனும் கிடைச்சுடுத்து. அதுதான் எல்லோருக்கும் சந்தோஷம், ஆர்ப்பாட்டம் எல்லாம்.”

“யுகேஜி பாஸ் பண்ணினத்துக்கா இந்தக் கோலாகலம்.” ஆச்சர்யத்தில் மூழ்கினார் ராமசாமி.

“இந்தாருங்கோ மாமா ஸ்வீட். உங்காத்து மாமிக்கும் ஒரு பாக்கெட் எடுத்துக்குங்கோ.” நீட்டினார் கிருஷ்ணசாமியின் தர்ம பத்தினி.

“ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணசாமி. சாயந்திரம் ஜோஸ்யர் ஏதோ அர்ஜென்டா வரச்சொன்னாராம்… அதைச் சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்.”
தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஜூலை 2011
தேதியூர் V.J. ராமன்

இருவரும் ஜோஸ்யராத்துக்குள்ளே நுழையும்போதே உள்ளே நாலைந்து பேர் ஜோஸ்யருக்கு வாழ்த்துச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

“ஜோஸ்யராத்திலேயும் எதாவது விசேஷமா.” முணுமுணுத்துக்கொண்டே இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

“வாங்கோ… வாங்கோ…” அன்புடன் அழைத்தார் ஜோஸ்யர்.

“என்ன விஷயம் நம்மாத்திலே… கல்யாண நாளா… ரொம்ப சந்தோஷமா இருக்கேள் எல்லோரும்.” ஆரம்பித்தார் ராமசாமி.

“அதெல்லாம் ஒன்னுமில்லை ராமசாமி… போன வருஷம் எதேச்சியா அண்ணாமலை யுனிவர்ஸிடியில் விகி அஸ்ட்ராலஜி அப்ளை பண்ணி இருந்தேன். இரண்டு மாசம் முன்னாடி பரிக்ஷை எழுதினேன். பாஸ் பண்ணிட்டேன். இதை பெரிய விஷயமா எடுத்துண்டு எல்லோரும் வாழ்த்துச் சொல்லிண்டு இருக்கா. இந்த வயசுலே இதெல்லாம் தேவையான்னுகூட தோனறது.

“மாமா… ஸ்வீட் எடுத்துக்குங்கோ.” தட்டை நீட்டினார் ஜோஸ்யராத்து மாமி.

காலம்பற கிருஷ்ணசாமி ஆத்திலே பேரன் பாஸ் பண்ணின சந்தோஷம். இங்கே ஜோஸ்யராத்திலேயும் பாஸ் பண்ணினதிலே எல்லோருக்கும் சந்தோஷம். இந்த சந்தோஷத்துக்கு முக்கிய காரணம் என்ன என்று ஜோதிஷரீதியாகக் கேட்கலாமென்று தோணித்து கிருஷ்ணசாமிக்கு.

ஜோஸ்யர்வாள். இன்னிக்கு காலையிலேயிருந்து எங்கு பார்த்தாலும் சந்தோஷமயமா இருக்கு. இந்த சந்தோஷம் பற்றி கொஞ்சம் ஜோதிஷரீதியா சொல்றேளா.

“கேட்கறதுக்கு உங்களுக்கு சந்தோஷம்ன்னா சொல்றதுக்கு எனக்கும் சந்தோஷம்தான்.” ஆரம்பித்தார் ஜோஸ்யர்.

பொதுவா சந்தோஷம்ங்கறது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். நம் உடம்பிலே சூக்ஷமமாக இருக்கக்கூடிய ஆத்மா இந்த உடம்பின் மூலம் சந்தோஷங்களையும் துக்கங்களையும் அனுபவிப்பதற்கு நமது மனதுதான் தூண்டுகோலாக இருக்கிறது. காலையிலேந்து சந்தோஷமாகவே இருக்குன்னு சொன்னேளே. அதை உங்களுக்கு உணர்த்தியது உங்கள் மனசுதானே.. என்னமோ தெரியலே காலையிலேந்து மனசே சரியில்லை. உடம்பு அடிச்சுப் போட்டா மாதிரி இருக்குன்னு நீங்களே எத்தனையோ நாளைக்கு உணர்ந்தும் இருப்பேள். இதையும் உங்களுக்கு உணர்த்துவது உங்கள் மனசுதானே. இந்த மனசுக்கு அதிபதி மனஸ்காரகன் எனப்படும் சந்திரன். இந்தச் சந்திரன் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை ராசி என்கிறோம். இன்று உங்கள் மனம் மிகவும் சந்தோஷமாக இருக்குமென்றால் மனஸ்காரகன் சந்திரன் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் ராசியில் இருந்து இன்று இருக்கும் கிரக சஞ்சாரங்கள் உங்கள் மனத்தை சந்தோஷப்பட வைக்கின்றது என்று அர்த்தம். சந்திரன் மறைவிடம் அடைந்த நாட்களில் மனம் நிலையான முடிவை எடுக்க முடியாமலும் சந்தோஷத்தை அனுபவிக்க இயலாமலும் இருக்கும். சந்திரன் அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை சந்திராஷ்டம தினம் என்கிறோம். அஷ்டம ராசியில் மறைவிடம் அடையும் மனஸ்காரகன் சந்திரன் நன்மைகளைத் தர இயலாமலே இருப்பார். அன்று மேற்கொள்ளும் எந்தக் காரியங்களுமே நமக்கு மகிழ்ச்சியைத் தராது. ஒருவரை சந்தோஷப்படுத்திப் பார்க்கும் சந்தோஷமே மிக உன்னதமான சந்தோஷம் என்கிறது தர்ம சாஸ்திரங்கள். பகவானுமே மற்றவர்களை சந்தோஷப்படுத்துபவர்களையே பெரிதும் விரும்புகிறார். சந்தோஷம் என்பதே நான்தான்… என்னை நீங்கள் உணரத்தான் முடியும் என்கிறார் பகவான்.

ஒரு அரசனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள்மீது வெறுப்பும் இளையவள்மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தான். ஒரு நாள் அரசனும் அவைப்புலவரும் உலாவரச் சென்றார்கள். திடீரென மேகம் சூழ்ந்தது.. அரசன் மேகத்தைக்காட்டி இது எது போல் உள்ளது என்றான். அரசே இது உங்கள் மூத்த மனைவியின் முகம் போல் உள்ளது என்றான் புலவன். சந்தோஷத்தில் சிரித்தான் அரசன். திடீரென இடி இடித்தது. இது எது போல் உள்ளது என்றான் அரசன். இந்த இடி உங்கள் சிரிப்பைப் போல் உள்ளது என்றான் புலவன். அப்போது மின்னல் மின்னியது. இது எதுபோல் உள்ளது. அரசன் கேட்டான். அரசே இது உங்கள் இளம் மனைவியின் புன்னகை போல் உள்ளது என்றான் புலவன். அரசனுக்கு எது சந்தோஷத்தைத் தரும் என்று அறிந்து அதைச் சொல்லி அவனை சந்தோஷப்பட வைத்தாலும் சந்தோஷப்பட்டான் புலவன்.. மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக நாம் நடந்துகொண்டால் நமக்குள் சந்தோஷம் என்றுமே ஸ்திரமாகக் குடிகொண்டுவிடும். நம் சந்தோஷத்தைப் பல பேர் கெடுக்க முயன்றாலும் உங்கள் மனம் சந்தோஷத்தை நாடும் விதத்தில் செயல்பட்டால் நிச்சயம் சந்தோஷம் உங்கள் வயப்பட்டுவிடும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. உங்கள் மனம் அதற்கு எப்படிச் செயல்படுகின்றது என்பதே முக்கியம். தினம் எழுந்திருக்கும்போதே இன்றைய தினம் முழுவதும் நான் சந்தோஷமாகவே இருப்பேன் என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் மனம் உங்களை அன்றைய தினம் முழுவதும் சந்தோஷத்தை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். இதேபோல் வாழ்நாள் முழுவதும் நான் சந்தோஷமாகவே இருப்பேன் என்று சொல்லிப்பழக ஆரம்பியுங்கள். அப்புறம் என்ன. வாழ்நாள் அனைத்தையுமே உங்களை உங்கள் மனம் சந்தோஷப்படுத்திக்கொண்டே இருக்கும். இந்த மனம் உங்கள் உடம்பை சந்தோஷப்படுத்தவில்லை. உங்கள் உடம்பில் இருக்கும் ஆத்மாவைச் சந்தோஷப்படுத்தவில்லை. உங்கள் உடம்பில் இருக்கும் ஆத்மாவை சந்தோஷப்படுத்துகின்றது. ஆத்மா சந்தோஷப்பட்டால் பகவானும் சந்தோஷப்படுகின்றார்.

ஜாதகரீதியாக 3ஆம் இடம் மனதைப்பற்றிச் சொல்லும் இடம். மனஸ்காரகன் என்பவன் சந்திரன். சந்திரன் நீச்சம் அடைந்த விருச்சிக ராசியில் பிறந்த அனைவருமே மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சந்தோஷமும் பரவசமும் அடைபவர்களாகவே இருப்பார்கள். இதைப்போல் 3, 6, 8, 12ஆம் இடங்களில் சந்திரன் வரப்பெற்றவர்கள் தயாள குணமும் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பாங்கால் மற்றவர்களைத் திருப்திபடுத்தி சந்தோஷத்தை அடைபவர்களாக இருப்பார்கள். கேந்திரங்களில் (1, 4, 7, 10) குரு பகவான் மற்றும் சுக்ரன் வரப்பெற்றவர்கள் வாழ்நாளில் பெரும் பகுதியைச் சந்தோஷமாகவே கழிப்பவர்களாக இருப்பார்கள்.

எதையும் நேர்மறையாகவே சிந்திக்கும் உங்கள் பேச்சைக் கேட்கக் கேட்க ஆனந்தமாகத்தான் இருக்கு… சொல்லிக் கொண்டே விடைபெற்றார்கள் இருவரும்.

மறுநாள் மாலை ராமசாமியைப் பார்க்கலாம் என்று கிளம்பினார் கிருஷ்ணசாமி.

“என்ன சார்… ரொம்ப டல்லா இருக்கா மாதிரி தெரியறதே.” போகிற போக்கில் கேட்டுவிட்டுப் போனார் பக்கத்து வீட்டு கோபால்ஸ்வாமி.

“என்ன கிருஷ்ணசாமி. உடம்பு சரியில்லையா என்ன… முகம் வாடி இருக்கே.” அடுத்து பார்த்த குப்புசாமி கேட்டுக்கொண்டே போனார்.

கொஞ்சம் நொந்துப்போன கிருஷ்ணசாமி மறுபடியும் ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தார். “என்ன கிருஷ்ணசாமி. என்னைத் தெரியலே நான்தான் ரத்னசாமி. ஏதோ சோகத்திலே பார்த்தும் பார்க்காததுபோல் போகிறீரே. என்ன ஆச்சு உங்களுக்கு. முகமே சரியில்லையே.”

அவ்வளவுதான். கிருஷ்ணசாமிக்கு வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது… நன்னாத் தானே நான் இருக்கேன். மற்றவர்கள் பேச்சுக்கு என் மனம் முக்கியத்துவம் தரத் தொடங்கிவிட்டதா. சந்தோஷத்துடன் கிளம்பிய கிருஷ்ணசாமி விடுவிடு என வீடு திரும்பினார்.

என்னன்னா. திரும்பி வந்துட்டேள். நானே உங்களைக் கேட்கணும்னு இருந்தேன். குழந்தைகளை அழைச்சுண்டு பீச்சுக்குப் போகலாமா.

எனக்கும் அதுதான் தோனறது. வாங்கோ எல்லோரும் பீச்சுக்குப் போகலாம். சற்றுக் குதூகலத்துடன் கிளம்பினார் கிருஷ்ணசாமி

பேரக்குழந்தைகள் மணல் வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்ததை ரசித்தவண்ணம் இருந்தார் கிருஷ்ணசாமி. ஏறக்குறைய கட்டிமுடிக்கும் தருவாயில் ஒரு அலை வந்து மணல் வீட்டை அடித்துச்சென்றது.

அச்சச்சோ. குழந்தைகள் அழப்போகின்றதே என்று நினைத்தார் கிருஷ்ணசாமி. ஆனால் குழந்தைகளோ கலகலவெனச் சிரித்தபடி சந்தோஷத்துடன் கைகோத்துக்கொண்டு சற்று தள்ளி வேறு ஒரு மணல் வீட்டைக் கட்ட ஆரம்பித்தன. வாழ்க்கையில் துன்பங்கள் வந்தால் அதை இன்பமாகவே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குழந்தைகளுக்கு இருக்கும்போது நமக்கு அது இல்லாமல் போயிற்றே என்று நினைத்த கிருஷ்ணசாமி குழந்தைளோடு குழந்தையாய் தானும் ஒரு மணல் வீட்டைப் பேரானந்தத்துடன் கட்டத் தொடங்கினார். மனம் இப்போது அலை கடல் போல் சந்தோஷத்தில் மிதந்தது அவருக்கு.


Contact Astrologer