தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஜூன் 2011
தேதியூர் V.J. ராமன்

ஊரே ரெண்டு படும் அளவுக்கு வாசலில் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று ராமசாமியும் கிருஷ்ணசாமியும் தன் வீடுகளைவிட்டு வெளியே வந்தனர்.

அடடே… பட்டு சாஸ்திரிகளாத்து வாசலில் ஏதோ கூட்டம் நிற்கறதே… பட்டு சாஸ்திரிகள் பயத்துடன் உடல் நடுநடுங்க நிற்கும் காட்சி எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தது. அவர் அருகே முரடன் ஒருவன் சப்தம் போட்டுக் கொண்டு இருந்தான்.

“என்னப்பா… கபாலிதானே நீ. நம்ம தொகுதி கவுன்சிலரின் பாடிகார்ட் ஆச்சே… இங்கே என்ன சப்தம் போட்டுண்டு இருக்கே.” வினவினார் ராமசாமி.

கபாலி தன் கழுத்தில் தொங்கிய ஒரு அடையாள அட்டையைக் காண்பித்தான். ஒரு பிரபல தனியார் வங்கியில் Recovery Executive என்ற பதவியில் கபாலியின் பெயர், படம் இருந்தது.

எட்டாங் க்ளாஸ்கூடப் படிக்காத கபாலிக்கு Executive பதவியா. ஆச்சர்யப்பட்டார் ராமசாமி.

“கபாலி, ஏன் சாஸ்திரிகளை மிரட்டறே. அவர் என்ன தப்பு செய்தார்.”

“தப்பு அவர் செய்யலே சார். அவர் பையன் எங்க வங்கியிலே வீட்டுக் கடன் வாங்கிட்டு தவணை ஒழுங்கா கட்டலே. நான் வசூல் பண்ண வந்திருக்கேன். என் கடமையைச் செய்யறேன்.”

“மாமா… என் பையன் வேறு கம்பெனிக்கு வேலைக்குப் போனதாலே இரண்டு மாசம் தவணை கட்ட முடியாமல் போச்சு… இந்த மாதம் சேர்த்துக் கட்டிடுவான்னு சொன்னாகூட நம்பமாட்டேங்கறான். மிகவும் கேவலமா பேசறான். மானமே போயிடுச்சு.” பயத்தில் கூனி குறுகி நின்றார் சாஸ்திரிகள்.

“கபாலி… விஷயம் தெரியாதா உனக்கு ரிஸர்வ் பேங்க் ஆர்டர்படி மிரட்டிப் பணம் கேட்டால் உனக்குத்தான் ஜெயில் தண்டனை கிடைக்கும். உங்க வங்கி உதவிக்கு வராது. என்ன இப்பவே தகவல் கொடுக்கட்டுமா, படிக்காத உனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை” என்று உரக்க ராமசாமி கத்தியதும் கபாலிக்குச் சற்று பயம் வர ஆரம்பித்தது.

“சார்… சார் அப்படி ஏதேனும் பண்ணிடாதிங்க. நான் முரடன்தான் என்றாலும் எனக்கும் புள்ளை குட்டி இருக்கு. உள்ளே போய்ட்டா குடும்பம் அதோகதிதான்.” விட்டால் போதும் என்று இடத்தைக் காலிசெய்தான் கபாலி.

பட்டு சாஸ்திரிகளைச் சமாதானம்படுத்திவிட்டு கிருஷ்ணசாமியுடன் நடையைக் கட்டினார் ராமசாமி.

“கிருஷ்ணசாமி பார்த்தீரா எப்படிப் பட்டு சாஸ்திரிகள் நடுங்கியதை…”

“ஆமாம்… ஆமாம். கபாலியைப் பார்த்ததும் எனக்கே குலைநடுங்கியது. இன்னும் பதற்றம் போகலே. சாயந்தரம் ஜோஸ்யரைப் பார்த்தால்தான் மனதுக்குத் தெம்பு வரும்.”

மாலை இருவரும் ஜோஸ்யராத்துக்குக் கிளம்பினார்கள்

“வாங்கோ… வாங்கோ…” அன்புடன் வரவேற்றார் ஜோஸ்யர்.

“பட்டு சாஸ்திரிகள் பயந்த விஷயத்தைப் பற்றி இருவரும் அங்கலாய்த்தனர். பயம் மனுஷாளை என்ன பாடுபடுத்துகிறது பார்த்தேளா… எதனால் இந்தப் பயம் வருகிறது கொஞ்சம் ஜோதிட ரீதியாச் சொல்லுங்களேன்.”

“இதானா விஷயம். பயம் என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம். பிறக்கும்போது எவருமே பயத்துடன் இந்த லோகத்தில் பிறப்பது இல்லை. இரண்டு வயது முதலே பூச்சாண்டி வரான், ஒத்தை கண்ணன் வரான் என்று சாப்பாட்டுடன் பயத்தை ஊட்டி வளர்க்கத் தொடங்கிடறோம்… தைரியத்தைச் சொல்லி எந்தத் தாய்மார்களாவது சாதம் ஊட்டுகிறார்களா? எல்லா ஜீவராசிகளுமே ஒன்றைப் பார்த்து மற்றொன்று பயப்படுகிறது. ஒரு காலகட்டம்வரை பிள்ளையைக் கண்டு பயப்பட வேண்டி உள்ளதே. பக்திக்கே மூலகாரணம் பயம்தான். கோயிலில் இன்று கூட்டம் நிரம்பி வழிகிறதே… எண்பது சதவிகிதத்துக்குமேல் செய்த பாபத்துக்குப் பயத்தின் காரணமாக பரிகாரம் தேடிவந்தவர்களாகத்தான் இருப்பார்கள். தாங்கள் செய்த தவற்றினால் ஏற்பட்ட பயம்தான் பக்தி. பவ்யம்கூடப் பயத்தின் ஒருவிதமான வெளிப்பாடே. ஆசிரியரிடம் மாணவன் காட்டும் பவ்யம், அலுவலகத்தில் அதிகாரியிடம் ஊழியர் நடந்துகொள்ளும் பவ்யம், அரசியல்வாதி மக்களைப் பார்த்து பவ்யமாக ஓட்டுக் கேட்கும் நிலை எல்லாமே பயத்தின் பரிணாமங்கள். இன்று காலை கபாலியைப் பார்த்து நீங்கள் பயந்தீர்கள். நாளையே அவன் உங்களைப் பார்த்துப் பயப்படலாம் இதற்கு எல்லாம் மூலகாரணம் மனம். ஆரம்பம் முதலே பயம் குறித்துப் பழக்கப்படுவதால்தான்.”

“இந்தப் பயம் நம்மை விட்டுவிலக என்ன செய்ய வேண்டும்…” கேட்டார் கிருஷ்ணசாமி

“சமீக முனிவரின் ஆச்ரமம் சென்ற பரீக்ஷ¤த் மகாராஜா தன்னை மதிக்காமல் த்யான நிலையில் இருந்ததால் அங்கு கிடந்த பாம்பு ஒன்றை அவர் கழுத்தில் போட்டுவிட்டுச் சென்றான். இதனை அறிந்த முனிவரின் மகன் ஸ்ரீங்கி தன் தந்தையை அவமதித்த பரீக்ஷ¤த் ஏழு நாளில் தக்ஷன் என்னும் கொடிய நாகம் தீண்டி இறக்கட்டும் என்று சபித்தான். த்யானம் கலைந்த முனிவர், தன் மகன் விடுத்த சாபம் குறித்து மிகவும் வருத்தப்பட்டாலும் அரசனுக்கு விவரம் தெரிந்தால் ஏதேனும் விபரீதம் ஆகலாம் எனப் பயந்தார். அரசனுக்கு விஷயம் தெரிவதற்கு முன்பே நடக்க இருக்கும் விபரீதம் அவருக்குத் தெரியப்படுத்திவிட வேண்டுமென்று தனது சீடன் ஒருவர் மூலம் பரீக்ஷ¤த்துக்குச் சொல்லி அனுப்பினார். விவரம் தெரிந்துகொண்ட அரசன் பரீக்ஷ¤த் சற்றே பயந்தான் என்றாலும் மரண பயம் போகும் உபாயங்கள் அவனுக்கு எடுத்துரைக்கப்பட்டன. வியாஸரின் புதல்வன் சுகப்பிரம்மத்தின் மூலம் ஆன்மிகப் பயிற்சிகளைப் பெற்றான். ஆன்மிகமே பயத்தைப் போக்கும் என்பதை பரிக்ஷ¤த் பகவத் ஸ்வரூபத்தின் தத்துவங்களைப் புரிந்துகொண்ட பரீக்ஷ¤த் மரண பயம் நீங்கி மோக்ஷத்தை அடைந்தான். ஆக, இந்த மனம் ஆன்மிகப் பயிற்சி பெற்றால்தான் பயம் நம்மைக் கண்டு பயப்படத் துவங்கும்.”

ஜோதிஷரீதியாக எவருடைய ஜாதகத்தில் மனஸ்காரகனான சந்திரன் 3, 6, 8, 12ஆம் இடங்களான மறைவிடங்களில் இருக்கின்றானோ அவர்கள் மிகுந்த பயந்த சுபாவம் உடையவர்களாகவும் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி மற்றும் 71/2 சனியின் சஞ்சார காலங்களில் ஆரோக்கியம் குறித்து எல்லோரும் பயம் கொள்ளுவார்கள். 2, 3, 7, 8க்குரிய கிரகங்களின் தசா காலம் மரண பயத்தை ஏற்படுத்தும். விருச்சிக ராசியில் பிறந்த அனைவருமே பயத்துக்குச் சொந்தக்காரர் களாக இருப்பார்கள்.

“தாய்மார்கள் தைரியசாலிகளின் கதைகளைச் சொல்லிக் குழந்தைக்கு சாதம் ஊட்ட வேண்டும். ஆஞ்சநேயரின் ஸ்லோகங்கள், கந்த சஷ்டி கவசம், நரஸிம்ம ஸ்தோத்ரங்கள் இளம் வயது முதலே சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் பயம் நம்மை விட்டு விலகும். மனத்தை ஒருநிலைப்படுத்தும் யோகாப்யாஸங்கள் பயம் நம்மைவிட்டு விலக பெரிதும் உதவும்.”

ஜோஸ்யராத்து கடிகாரம் எட்டுமுறை அடித்தது.

“ஐய்யய்யோ… ராத்திரி எட்டு மணி ஆயிடுத்தே…” கிருஷ்ணசாமி படபடத்தார்.

“என்ன கிருஷ்ணசாமி. ஏன் பயப்படுகிறீர்கள்.”

“எட்டு மணிக்கு மேல் வந்தால் வெளியிடத்தில் சாப்பாட்டுக்குப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பர்மனெண்ட் ஆர்டர் பார்யாள் போட்டிருக்கா… அதுதான். ஹி… ஹி…”

“பார்த்தீரா ராமசாமி… பார்யாள்மேல் கிருஷ்ணசாமிக்கு எவ்வளவு பவ்யம்…” கிண்டலடித்தார் ஜோஸ்யர்.

பவ்யமா… அல்லது பயமா…

எதையும் காதில் வாங்காமல் நடையைக் கட்டினார் கிருஷ்ணசாமி.

ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் மாலை நடைப்பயணத்தைத் துவக்கினர் ராமசாமியும் கிருஷ்ணசாமியும்.

சௌக்யமா சார்… எதிரே வந்த போஸ்ட்மேன் சைக்கிளைவிட்டு இறங்கி கிருஷ்ணசாமியைப் பார்த்து பவ்யமாகச் சல்யூட் அடித்தார்.

ம்… ம்… சௌக்யம்தான்.

சற்றுதூரம் சென்றதும். “சார்… சார்…” என்ற குரல்கேட்டு இருவரும் திரும்பினர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள் வண்டியை நிறுத்தி இறங்கி கிருஷ்ணசாமி அருகே வந்து “என்ன சார் சௌக்யங்களா…” பவ்யமாக குசலம் விசாரித்தார்.

ராமசாமிக்கு ஒரே ஆச்சரியம். கிருஷ்ணசாமிக்கு என்ன திடீர் மரியாதை. “கிருஷ்ணசாமி. என்ன இதெல்லாம்!”

“ராமசாமி… இவாளெல்லாம் அப்பப்ப தலையைச் சொரியும்போது முடிஞ்சதைக் கொடுக்கிறேனோன்னோ… திரும்பி வராத கடன்னு வெச்சுக்கோயேன். அதான் இந்த பவ்யத்துக்குக் காரணம்.”

“கிருஷ்ணசாமி. அதோ பார். அன்னிக்கு பட்டு சாஸ்திரிகளை மிரட்டிய கபாலி. உன்னைப் பார்த்ததும் ஏன் தலைதெறிக்க பயந்து ஓடறான்.”

“ஒன்னுமில்லை ராமசாமி… போனமாசம் அந்த சம்பவத்துக்குப் பிறகு ஒரு ஆயிரம் ரூபாய் வேணும்னு கேட்டான். திருப்பித் தரணும் என்கிற கண்டிஷன்லே ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். எங்கே திருப்பிக் கேட்கப் போறேளேன்னு பயம். ஓடறான். அன்னிக்கு இவனைப் பார்த்து நான் பயப்பட்டேன். இன்று இவன் என்னைப் பார்த்துப் பயப்படறான். பணம் படுத்தும்பாடு.”

“ஜோஸ்யர் சொன்னது பலித்துவிட்டது கிருஷ்ணசாமி. எனக்கே உன்னைப் பார்த்தால் இனிமேல் பயம் வரும் போல் இருக்கே…” போஸ்ட்மேன் மற்றும் கான்ஸ்டபிளின் பவ்யமும் கபாலியின் பயமும் ஒன்னுதானோ… பவ்யம் என்பதே பயத்தின் வெளிப்பாடே என்பதைப் புரிந்துகொண்டார் ராமசாமி.

“வீட்டிலே பூனையானாலும் வெளியிலே புலி என்பதை நிரூபித்துவிட்டாய் கிருஷ்ணசாமி.”

புன்னகைத்தார் கிருஷ்ணசாமி.

பயத்தைப் போக்க இப்படியும் ஒரு வழி இருக்கா என்று மனத்துக்குள்ளேயே புன்னகைத்துக்கொண்டார் ராமசாமி.


Contact Astrologer