தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – செப்டம்பர் 2011
தேதியூர் V.J. ராமன்

பெங்களூருக்குச் சென்ற கிருஷ்ணசாமி தன் காரியங்களை முடித்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் தன் சீட்டுக்கு எதிரே பத்து வயது பையனும் அவனுடைய தந்தையும் அமர்ந்திருந்தார்கள். அந்தப் பையன் எல்லோரையும் பார்த்து வெகுளித்தனமா சிரித்துக்கொண்டு இருந்தான். ட்ரெயின் கொஞ்ச தூரம் சென்றதும் அந்தப் பையன் மேலும் உற்சாகமடைந்தான்.

அப்பா அந்த மரத்தைப் பாருங்கள்… அந்தக் கட்டடம் எவ்வளவு பெரிசா இருக்கு… அதோ ஏரோப்ளேன்… கண்ணில் பட்டதையெல்லாம் காட்டிப் பரவசமடைந்துகொண்டிருந்தான். அவனது சைகைகள் சற்று வித்யாஸமாகவேபட்டது கிருஷ்ணசாமிக்கு. சற்று லூசாக இருப்பானோ என்று எண்ணினார்… பாவம் மனநிலை சரியில்லாத பையனை எப்படித்தான் காப்பாற்றப்போகிறாரோ என்று கவலையும்பட்டார் கிருஷ்ணசாமி.

“சார்… பையனுக்கு ரொம்ப நாளாவே இப்படித்தான் இருக்கா…” என்று ஆரம்பித்தார் கிருஷணசாமி.

“என்ன கேட்கிறீர்கள்…” எதிர் கேள்வி கேட்டார் பையனின் தந்தை.

“இல்லே. பையன் கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்கிறானே. சென்னைக்குத் தானே வரேள். எனக்குத் தெரிந்த மனோதத்துவ டாக்டர் சபரீசன் இருக்கார். ரொம்ப நல்லா பார்ப்பார்… வேணும்னா…”

“மனோவியாதி யாருக்கு” படபடப்புடன் கேட்டார் பையனின் தந்தை.

“உங்க பையனுக்குதான்… இவ்வளவு வயசான பையன் இரண்டாம் கிளாஸ் படிக்கும் பையனைப் போல் நடந்துக்கிறானே… அதுதான் எனக்கு தெரிஞ்ச டாக்டரிடம் காண்பிக்கலாம்ன்னு சொன்னேன்.”

“நீங்க தப்பா புரிஞ்சுண்டு இருக்கேள்னு தோணறது.”

“என்ன சொல்றேள் நீங்கள்…” கேட்டார் கிருஷ்ணசாமி.

“என் பையனுக்கு மனநோய் எதுவும் இல்லே… பிறவியில் இருந்து அவனுக்குக் கண் தெரியாது. பெங்களூரில் கண் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஒருத்தர் இவனுக்குப் போன வாரம் ஆபரேஷன் பண்ணினார். தெய்வ அனுக்கிரகத்தினாலே இவனுக்குப் பார்வை பூர்ணமாகக் கிடைச்சுடுத்து. இப்போதான் உலகத்தைப் பார்க்க ஆரம்பிச்சு இருக்கான். எல்லாமே அவனுக்கு வித்யாஸமா தோணறது…”

“சாரி சார். தப்பா நினைச்சுக்காதேள்…” கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்டார்.

தப்பு தப்பா முடிவு எடுக்கறதுதான் இவருக்கு எப்போதுமே வேலை.. நீங்க தப்பா நினைச்சுக்காதேள்… இவர் எப்போதுமே இப்படித்தான்… ஹி… ஹி… எதிர் சீட்டுக்காரரைச் சமாதானப்படுத்தினாள் கிருஷ்ணசாமியின் மனைவி.

அந்தப் பையனை லூஸ் என்று நினைக்கப் போய் நம்மை லூஸாக்கிவிட்டானே என்று மனம் நொந்த கிருஷ்ணசாமி சென்னை வரும்வரை பேசவே இல்லை.

“என்ன கிருஷ்ணசாமி… பெங்களூர் போய்விட்டு வந்தாச்சா.” கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமசாமி.

பெங்களூர் போகும்போது பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் நடந்த சம்பவங்கள். சூட் கேஸைத் தொலைத்தது, திரும்பி வரும்போது தவறான முடிவு எடுத்துப் பேசியது எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லித் தீர்த்தார் கிருஷ்ணசாமி.

“வா… ஜோஸ்யராத்துக்குப் போய் வரலாம்” அழைத்தார் ராமசாமி.

இருவரையும் வரவேற்றார் ஜோஸ்யர்.

“தான் எடுக்கும் முடிவு எல்லாமே தப்பு தப்பாகவே போறதே. என்ன காரணம்னே புரியலே…” கேட்டார் கிருஷ்ணசாமி.

“இதற்குக் காலம்தான் பதில் சொல்லணும்” என்றார் ஜோஸ்யர்

“என்ன சொல்றேள். புரியலையே…”

“ஆமாம் கிருஷ்ணசாமி. உங்களுக்கு மட்டும் இல்லே. எல்லாருக்குமே கிரக சஞ்சாரங்கள் நல்ல இடத்தில் அனுகூலமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும். இந்தக் காலம் சில பேருக்கு கூடாத நட்புகளை ஏற்படுத்தி விபரீதமான பலனைத் தரும். விபரீதமான எண்ணங்கள் சிலருக்குத் தவறான முடிவுகளை எடுக்கச் சொல்லும். பெரும்பாலான காதல் திருமணங்கள் தோல்வி அடைவதற்கு மூல காரணம் தவறான முடிவுகளே. பெற்றோரும் தங்கள் குழந்தைகள் திருமண விஷயங்களில் தவறான முடிவுகளையே எடுக்கின்றார்கள். தவறான முடிவு எடுத்த ஒரு ரியல் எஸ்டேட் முதலாளி ஒரு அரசியல்வாதியுடன் கூட்டு சேர்ந்து அபரிமிதமான பணம் சம்பாதித்தான்.. முடிவு அந்த அரசியல்வாதியாலேயே அவனுக்கு மரணம் ஏற்பட்டது. பணத்தின் மீது ஏற்பட்ட மோகம் மரணத்தில் முடிந்தது. தவறான முடிவுகள் தவறான வழிகளைத்தான் நமக்குக் காட்டும்.

ஒரு இளைஞனுக்குக் கிராமம் ஒன்றில் வேலை கிடைத்தது. அந்த ஊர் மிராசுதாரர் ஊருக்குப் புதிதாக வருபவர்களைப் பரிட்சை செய்து பார்த்தே ஊருக்குள் நுழைய விடுவார். ஊருக்குள் நுழைய வேண்டுமானால் ஒன்று மது அருந்த வேண்டும் அல்லது ஒரு இளம் பெண்ணைக் களங்கப்படுத்திவிட்டுச் செல்ல வேண்டும் அல்லது ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டுச் செல்ல வேண்டும். மூன்றுமே மாபாதகச் செயல்தான். எதைச் செய்வது என்று குழம்பினான் அந்த இளைஞன். சிசுவைக் கொல்வது மாபாதகச் செயல் என்றால் பெண்ணைக் கெடுப்பது அதைவிட மாபாதகச் செயல். மதுவைச் சாப்பிட்டால் தன் உடம்பு மட்டும்தானே பாழாகும் என்று முடிவு எடுத்தான். விளைவு… போதை தலைக்கு ஏறியது. அருகில் இருந்த பெண்ணைப் பலவந்தப்படுத்திக் கெடுத்தான். குறுக்கே வந்த குழந்தையைக் காலால் எட்டி உதைக்க அது இறந்தது. மூன்று பாதகச் செயலையும் செய்துவிட்டுப் போதை தெளிந்ததும் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். இப்படிப்பட்ட வேலையே வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தால் மூன்று மாபாதகச் செயல்களையும் செய்திருக்க வேண்டாம் இல்லையா. காலம் அவனை மது அருந்தத் தூண்டியது… விபரீதமாக எடுத்த முடிவு விபரீதங்களையே விளைவித்தது.

சமீபத்தில் கோவையில் நடந்த இரட்டைக் குழந்தைகள் கொலை சம்பவத்தைச் சற்று நினைத்துப் பாருங்கள்… தினம் தினம் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன் அன்று வரவில்லை. அதற்குப் பதிலாக புதிய வேன் புதிய டிரைவர் வந்துள்ளதைப் பார்த்ததும் குழந்தைகளை அழைத்து வந்த அந்தக் குடும்பத் தலைவிக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டாமா… புதிய டிரைவர் ஏதோ சால்சாப்பு சொல்ல அதை நம்பி குழந்தைகளை அனுப்பியதன் விளைவு பழைய விரோதத்தை மனத்தில் கொண்ட டிரைவர் குழந்தைகளைக் கொன்று மனிதாபிமானமே இல்லாமல் ஆற்றில் வீசி எறிந்துள்ளான். இக்காலப் பெற்றோர்கள் இது போன்ற தவறுகளை எல்லா இடங்களிலும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். மாம்பலத்தில் உள்ளவர் தன் குழந்தைகளைக் கோபாலபுரத்தில் உள்ள பள்ளிக்கு வேனில் அனுப்புவதையே பெருமையாக நினைக்கிறார். ஏன் மாம்பலத்தில் நல்ல பள்ளிகளே இல்லையா? தான் கொண்டு விட்டுத் திரும்பி அழைத்து வரும் தூரத்தில் உள்ள பள்ளிகள் எல்லாம் தரம் கெட்ட பள்ளிகளா? வெகுதூரத்தில் உள்ள பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பி விட்டுத் திரும்பி வரும்வரை அந்தத் தாயின் மனத்துடிப்பு எப்படித் தினம் தினம் இருக்கின்றது என்று கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். எத்தனை தாய்மார்களுக்கு 40 வயதுக்குள்ளாகவே ப்ளட் பிரஷர் வந்துள்ளதற்கு அவர்கள் எடுக்கும் இது போன்ற தேவையற்ற தவறான முடிவுகளே காரணம். தினம் தினம் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் காணவில்லை என்ற செய்திகள் பேப்பரிலும் ஊடகங்களிலும் வந்தவண்ணமே உள்ளன. தவறான முடிவுகளை எடுத்துவிட்டு பள்ளி நிர்வாகத்தை குறை சொல்லத் தொடங்கி விடுகிறார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னம், 5, 7ஆம் இடங்களில் சனிஸ்வரன், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற பாப கிரகங்கள் வரப்பெற்ற அனைவருமே எல்லா விதத்திலும் தவறான முடிவுகளைத்தான் எடுக்கின்றார்கள். 7ஆம் இடத்தில் சூரியன், ராகு, செவ்வாய் மற்றும் 8ஆம் இடத்தில் செவ்வாய் வரப்பெற்றவர்கள் தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடிக் கொள்வதன் மூலம் தவறான முடிவுகளைச் சந்திக்கின்றார்கள். இது போன்ற நிலை வருவதற்கு அந்தந்தக் காலகட்டங்களில் கிரக சூழல்கள் தவறான முடிவுகளை எடுக்க சாத்ய கூறுகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும்.

“என்ன கிருஷ்ணசாமி… புரிந்ததா.”

விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள் இருவரும்.

நடு வழியில் ஒரு பள்ளத்தில் கால் தடுக்கிக் கீழே விழுந்தார் கிருஷ்ணசாமி.

“என்ன ரோடு போட்டிருக்கான் படுபாவி. இந்த ஏரியா முழுவதும் ப்ராமணர்கள் என்பதினால் நம்ம எம்.எல்.ஏவுக்குக் கொஞ்சம்கூட அக்கறை இல்லை. நம்ம ஏரியாவுக்கு நல்ல ரோடு கிடையாது. குடி தண்ணீர் சரியா வரதில்லே, பஸ் வசதி இல்லே… ஓட்டு கேட்க வந்தப்புறம் திரும்பியே பார்க்கலே. ரோடு போடப் பணம் செலவழிச்சேன்னு பொய் கணக்கு காட்டிக் கொள்ளை அடிச்சுண்டு இருக்கான்”. மனம் குமுறினார் கிருஷ்ணசாமி.

“நாம அன்னாடம் காச்சியாகவேதான் இன்னமும் இருக்கோம்.. அவரு ஐந்து ஆறு தலைமுறைக்குச் சொத்து சேத்துட்டாரு. செஞ்ச பாபத்துக்கு நிச்சயம் நரகம்தான் கிடைக்கும்” தன் பங்குக்குச் சொன்னார் ராமசாமி.

“சார். ஒரு நிமிஷம்…” பின்னால் வந்த பெரியவர் கூப்பிட்ட குரலுக்கு இருவரும் திரும்பி பார்த்தனர்.

“எம்.எல்.ஏ. செஞ்சது அயோக்கியத்தனம், பாபச் செயல்ன்னு சொல்றேளே. ஒரு மிக்ஸி தரேன், கிரைண்டர் தரேன், டீவி தரேன்னு சொல்லிவிட்டு மூவாயிரம் ரூபாய் பணமும் கொடுத்துவிட்டுப் போனபோது யாருக்கும் தெரியாம உள்ளே வாங்கி வைச்சுண்டேளே.. ஒரு தப்பான ஆளுக்கு ஓட்டுப் போட்டோமே என்ற எண்ணம் உங்களுக்கு வரவே இல்லையா.. நீங்க எடுத்தது தப்பான முடிவுன்னு அன்னிக்குத் தோணலே இல்லையா. இப்போ கீழே விழுந்து காலை ஒடிச்சுண்டேளே.. இது உங்கள் தப்பான முடிவுக்குக் கிடைச்ச பலன் சார்.”

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருவரும் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.


Contact Astrologer