தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஏப்ரல் 2011
தேதியூர் V.J. ராமன்

கதவு தட்டும் சப்தம் கேட்டு அவசரமாக வந்து கதவைத் திறந்தார் கிருஷ்ணசாமி.

ஐயா… சாமி… தர்மம் போடுங்க சாமி.

‘காலங்காத்தாலேயே பிச்சை எடுக்க வந்துட்டீங்களா. சில்லரை இல்லைம்மா… போ… போ’ சட்டென்று கதவை அழுத்தி சாத்தினார்.

மறுபடியும் கதவு தட்டும் சப்தம் கேட்டு எரிச்சலானார் கிருஷ்ணசாமி. இதே பொழைப்பா போச்சே இந்தப் பிச்சைக்காரங்களுக்கு… காலங்காத்தாலே தொல்லை தாங்க முடியலையே… சப்தம் போட்டுக்கொண்டே கதவைத் திறந்தார்.

என்ன கிருஷ்ணசாமி ‘ஏதோ பிச்சைக்காரன் தொல்லை’ன்னு சப்தம் போட்டுண்டே வந்தியே…

‘தப்பா நினைச்சுக்காதே ராமசாமி… காலங்காத்தாலே பிச்சைக்காரி ஒருத்தி தர்மம் போடுங்க சாமின்னு கதவைத் தட்டினா. மறுபடியும் பிச்சைக்காரங்க தொல்லையோன்னு நினைச்சேன்… சரிசரி… அதைவிடு. வந்த விஷயத்தைச் சொல்லு.’

‘என்ன மறந்துட்டியா. இன்று காலை நம்ம ரி.ஸி. கல்சுரல் அக்காடமியிலே ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்துக்கு வசூலுக்குப் போகணும்னு சொன்னேனே…’

‘குளிச்சுட்டு வரேன் ராமசாமி. ஒன்பது மணிக்குக் கிளம்பலாம்.’

இருவரும் வசூலுக்குக் கிளம்பினார்கள். ‘என்ன ராமசாமி. தில்லை கங்காநகர் கோபாலசாமி ஆத்திலேந்து ஆரம்பிக்கலாமா.’

‘சார்… சார்…’ கதவைத் தட்டினார் கிருஷ்ணசாமி.

‘யாரது… பிச்சைக்காரங்களெல்லாம் உள்ளே வரக்கூடாதுன்னு போர்டு போட்டு இருந்தும் தொந்தரவு தாங்கமுடியலயே…’ கோபத்துடன் கதவைத் திறந்தார் கோபாலசாமி.

‘சார்.. நாங்க பிச்சைக் கேட்க வரலே…’

‘சார்… சார்… தப்பா நினைச்சுக்காதேள். உங்களை எனக்கு நன்னாவே தெரியும். ரி.ஸி. கல்சுரல், தர்மகாரியம் நிறைய செய்யறேள்…’

ஹி… ஹி… உள்ளே வாங்கோ.

‘ஸ்ரீராம நவமி செலிபரேஷன்… இந்த வருடம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யலாம்னு இருக்கோம்.’ பத்திரிகையை நீட்டினார் கிருஷ்ணசாமி.

‘சித்தே இருங்கோ. இதோ வாரேன்’ என்று உள்ளே போய் வந்தவர். ‘சார், ஹி… ஹி… சில்லரை இல்லை… ஐந்நூறு ரூபாயா இருக்கு. அப்புறமா நானே வந்து தரேனே’

‘பரவாயில்லே கொடுங்கோ. என்கிட்டே சில்லரை இருக்கு.’ கிருஷ்ணசாமி சட்டென்று சொன்னார்.

‘ஹி… ஹி… வழக்கமா நூறு ரூபாய் கொடுப்பேன். எடுத்துண்டு, பாக்கி கொடுங்கோ.’ முகத்தைச் சுளித்துக்கொண்டே கொடுத்தார் கோபாலசாமி.

பாக்கியைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினர் இருவரும்.

‘ராமசாமி . . . மணி பணிரெண்டு ஆச்சு. கலக்ஷன் பரவாயில்லே. நினைச்சதைவிட அதிகமாகவே வந்துடுத்து. கோபாலசாமி நம்மைப் பிச்சைக்காரன் மாதிரி பார்த்ததுதான்… சில்லரை இல்லேன்னதும் எப்படிச் சமாளிச்சேன் பார்த்தேளா.’

‘சரி, சரி விடு கிருஷ்ணசாமி. சாயந்தரம் ஜோஸ்யராத்துக்குப் போகலாமா.’

‘வாங்கோ… வாங்கோ…’ வரவேற்றார் ஜோஸ்யர்.

காலங்காத்தாலே பிச்சைக்காரி வந்ததி லேந்து டொனேஷன் கலெக்ட் சென்ற விவரம் வரை சொன்னார் கிருஷ்ணசாமி.

‘பிச்சைக்காரிக்கும் உங்களுக்கும் வித்யாஸம் ஒன்னும் இல்லே கிருஷ்ணசாமி.’

‘என்ன சொல்றேள்! புரியலையே…’ பதறினார் கிருஷ்ணசாமி.

‘பிச்சைக்காரி கேட்டது அவளது தர்மம். போடுவது உங்களது தர்மம். நீங்கள் கலெக்ஷனுக்குச் சென்றதும் தர்ம காரியத்துக்கு, செய்ய நினைத்ததும் தர்ம கைங்கர்யம். இருவருமே அன்னத்துக்காகவே தர்மம் வேண்டினீர்கள்.’

‘அப்படின்னா நாங்களும் பிச்சைக்காரர்கள் தான் என்கிறீரா.’ சற்றுக் கோபத்துடன் கேட்டார் கிருஷ்ணசாமி.

‘அப்படிச் சொல்ல வரலே கிருஷ்ணசாமி. உங்கள் செயல்பாட்டையும் கோபாலசாமி செஞ்சதையும் நினைத்துப் பாருங்கள். தர்மம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் அதை உடனே செயல்லே காட்டிடனும்… சில்லரை இல்லை என்ற ஒன்னு உங்களைத் தர்மம் செய்யவிடாமல் தடுத்துவிட்டதே… கோபாலசாமியிடம் சில்லரை கொடுத்து நீர் சமாளித்தீரே… அதேபோல் சில்லரை இருக்கா என்று பிச்சைக்காரியிடமே கேட்டு அவளுக்குக் கொடுக்க நினைத்த காசைக் கொடுத்து இருக்கலாமே… அல்லது நீங்கள் கொடுக்க நினைக்கும் பணத்தை எடுத்துக்கச் சொல்லி பாக்கியைப் பெற்றுக்கொண்டும் இருக்கலாம். கோபாலசாமி தர்மம் செய்ய உங்களிடம் இருந்த சில்லரைதானே தூண்டியது. ஆனால் தர்மம் செய்யாமல் இருக்க அதே சில்லரைதான் உங்களையும் தூண்டியது.’

நீங்க என்ன சொல்ல வறேள்னு புரியலையே…

நீங்கள் எதற்காக தர்ம கைங்கர்யங்கள் செய்கிறீர்கள்… சொல்லுங்கள்.

புண்ணியத்தைச் சேர்த்துக்கத்தான்.

சரியாகச் சொன்னீர்கள் கிருஷ்ணசாமி. புண்ணியத்தைச் சேர்ப்பதன்மூலமே செய்த பாவங்களைத் தொலைக்க இயலும். இந்தப் புண்ணியம் என்பது இரண்டு வழியில்தான் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று தானம். மற்றொன்று தர்மம்.

தானம் என்பது பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்லியதுபோல் தானம் பெற்றுக்கொள்பவன் அதை வாங்கிக்கொள்ள யோக்யதாம்சம் உள்ளவனா என்று அறிந்து செய்வது. உமது பார்யாளைத் திருமணம் செய்துகொடுக்க நினைத்தபோது அவள் தகப்பனார் நீர் யோக்யமானவரா… பெண்ணை வைத்து நன்றாகக் காப்பாற்றும் யோக்யதை உள்ளவரா என்று பார்த்துதானே கொடுத்தார்… அதுதான் கன்னிகாதானம். இதேபோல்தான் அன்னதானம், கண் தானம், ரத்த தானம், கோதானம், பூமிதானம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தர்மம் என்பது உங்களை நாடி வந்து தர்மம் போடுங்கள் என்று கேட்கும்போதே கொடுத்துவிட வேண்டியது. அந்த ஆசாமி எப்படி இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. நல்ல கை காலோடு இருக்கியே… ஏன் பிச்சை எடுக்கிறே என்ற கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்கிறது தர்மசாஸ்திரம். யார் கைநீட்டி தர்மம் கேட்டாலும் உங்களால் முடிந்ததைக் கொடுத்துவிட வேண்டும். யுக தர்மங்களில் க்ருத யுகம், த்ரேத யுகத்தில் வருமானத்தில் 25 சதவீதமும் துவாபர யுகத்தில் 1/6 பங்கும் அதாவது 16 சதவீதமும் கலியுகத்தில் உங்களால் முடிந்த அளவு (சதவீதம் சொல்லப்படவில்லை) தானம் தர்மம் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஒரு சதவீதம் உங்கள் வருமானத்தில் தான தர்மங்களைச் செய்கின்றீரா… மாசத்துக்கு நூறு ரூபாய்… வேண்டாம் தினம் மூன்று ரூபாய் தர்மம் செய்கின்றீர்களா என்று யோஜித்துப் பாருங்கள். தானம் தருமம் இரண்டுமே நினைத்தபோதே செய்துவிட வேண்டும். “தர்மோ ரக்ஷ¤த ரக்ஷ¤த:” என்று வேதம் சொல்கிறது. நாம் தர்மத்தைக் காப்பாற்றினால் தர்மம் நம்மை காப்பாற்றும் என்பதே இதன் பொருள். தானத்தில் பலவிதம் இருப்பதுபோல தர்மத்திலும் தர்மம், உத்தர்மம், உத்தர தர்மம், உத்தம தர்மம், வர்ண தர்மம், குல தர்மம், ஆச்ரம தர்மம், சாமான்ய தர்மம் என்று இந்தத் தர்மங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் குறைந்தது 10 நாட்கள் வேண்டும்.

கர்ணன் தனது அரண்மனையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஆயத்தமாகிக்கொண்டு இருந்தான். அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள தங்கத்தால் ஆன கிண்ணத்தில் எண்ணெய். கிருஷ்ணன் திடீரென அங்கு பிரவேசித்தான். தங்கக் கிண்ணத்தைப் பார்த்த கிருஷ்ணன் ‘ஆஹா… மிக அற்புதமாக இருக்கிறதே கர்ணா.. எனக்கு இந்தத் தங்கக் கிண்ணத்தைத் தருவாயா’ என்று கேட்டான். அடுத்த க்ஷணம் தங்கக் கிண்ணத்தைத் தனது இடது கையால் எடுத்து கிருஷ்ணனிடம் கொடுத்தான் கர்ணன். கிருஷ்ணன் கேட்டான் ‘இடது கையால் கொடுக்கிறாயே கர்ணா… இது நியாயமா… கர்ணன் அதற்குப் பதில் சொன்னான் ‘நான் கை அலம்பிக்கொண்டு வருவதற்குள் என் மனம் மாறிவிட்டால்… அதற்காகத்தான் உடனேயே கிண்ணத்தை உன்னிடம் கொடுத்தேன்’ அசந்துபோனான் கிருஷ்ணன். எதற்கு இந்தக் கதை சொல்கிறேன் என்றால் நினைக்கும்போதே தான தர்மங்களைச் செய்துவிட வேண்டும். தாமதிக்கும் நேரம் தர்மத்தின் எதிரி என்கிறது தர்மசாஸ்திரம். இறக்கும் தருவாயிலும் தான் செய்த அத்தனைப் புண்ணியங்களையும் தர்மம் செய்தான் கர்ணன். இதுவும் உங்களுக்குத் தெரிந்ததுதான்.

எவன் ஒருவன் ஜாதகத்தில் சந்திரன் நீச்சமாகவும், 3, 6, 8, 12ஆம் இடங்களில் மறைவிடம் அடைந்தும் இருக்கிறாரோ அவன் தர்மிஷ்டனாக எப்போதுமே இருப்பான்.

12ஆம் இடத்தில் குருபகவான், சனிச்வரன், கேதுபகவான் வரப்பெற்றவர்கள் தனது 40 வயதுக்கு மேல் தர்ம கைங்கர்யங்களில் ஈடுபடுகின்றார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் குருபகவான் கேதுபகவான் வரப்பெற்றவர்கள் ஓரளவே தர்ம நோக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

நிச்சயம். முடிந்த அளவு தினம் தானம் தர்மம் செய்வோம் என்று உறுதி அளித்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

வரும் வழியில் பிச்சைக்காரன் ஒருவன் கிருஷ்ணசாமியைப் பார்த்து ‘ஐயா தர்மப்ரபோ… தருமம் போடுங்க சாமி…’ என்று கெஞ்சினான்.

பையில் கையை விட்டார் கிருஷ்ணசாமி. அடேடே… சில்லரை இல்லையே… சரி ஜோஸ்யர் சொன்னபடி, அவனிடமே கேட்டு தர்மம் செய்யலாம் என்று நினைத்தார் கிருஷ்ணசாமி.

‘இந்தாப்பா, பத்து ரூபாய்க்கு சில்லறை இருக்கா’.

இருக்கு சாமி… பத்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு சில்லரையைத் தந்தான் பிச்சைக்காரன்.

ஒரு ரூபாயை ஜம்பமாக அவனுக்கு லாவகமாகக் கொடுத்துவிட்டுப் பாக்கி சில்லறையை எண்ணினார் கிருஷ்ணசாமி. என்னது ஏழு ரூபாய்தான் இருக்கு. ஏமாற்றிவிட்டானே. ஒரு ரூபாய் தர்மம் போட்டது போக ஒன்பது ரூபாய் இருக்க வேண்டுமே.

உடனே பிச்சைக்காரன் பக்கம் திரும்பி, ‘ஏம்பா… சில்லரை குறைவா கொடுத்திருக்கியே…’

இல்லே சாமி… எனக்குச் சேரவேண்டியதை எடுத்துண்டுதானே கொடுத்தேன் சாமி. கடைகள், ஹோட்டல்களில் நாங்கள் சில்லரை கொடுக்கும்போது வழக்கமா எங்களது கமிஷனை எடுத்துண்டுதான் கொடுப்போம்… இது சில்லரை தர்மம் சாமி.

ஆஹா… இப்படி ஒரு தர்மம் இருக்கா. நாம் ஒரு ரூபாய் போட்டிருக்க வேண்டாம் போல இருக்கே… தினம் மூன்று ரூபாயாவது தர்மம் செய்யணும்னு ஜோஸ்யர் சொன்னதன் விளக்கம் இப்படி ஆகிவிட்டதே… பெருமூச்சு விட்டபடியே சற்று நிலை தடுமாறினார் கிருஷ்ணசாமி.

தாங்கிப் பிடித்தார் ராமசாமி. தர்மம் நம்மைத் தாங்குகிறது என்று நினைத்தார் கிருஷ்ணசாமி. தாங்கப்படுவதைத் தர்மமாக எண்ணினார் ராமசாமி.


Contact Astrologer