தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today -மார்ச் 2010
தேதியூர் V.J. ராமன்

மானுடராய்ப் பிறந்த அனைவருமே இந்தப் பூவுலகிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம். இவ்வுலகை விட்டுப் போகும்போது என்ன கொண்டுசெல்லப் போகிறோம் என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களில் தாமாகவும் மற்றவர்களால் சொல்லப்பட்டும் எப்போதும் எழுந்துகொண்டு இருக்கின்ற சிந்தனைகளாகவே இருக்கின்றன. இதே கருத்து பலவிதமாகப் பல கவிஞர்களால் பாடப்பட்டும் உள்ளது. இந்தக் கருத்தைச் சற்று வித்யாஸமாகச் சிந்தித்துப் பார்த்தால் நாம் என்ன கொண்டு வரவில்லை… அல்லது போகும் போது என்ன என்ன கொண்டுசெல்லப் போவதில்லை… என்ற கருத்தும் சிந்தனையைத் தூண்டும் விதமாக உள்ளது. என்ன சார்… இது… புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்புகின்றீர்கள்… என்கின்றீர்களா…

ஆமாம்… இந்த உலகிற்கு ஒவ்வொரு ஜீவனும் அடியெடுத்துவைக்கும்போது போன ஜென்மத்தின் பாப மூட்டைகளையும் புண்ணிய மூட்டைகளையும் சுமந்துகொண்டுதானே வருகின்றது. பாப மூட்டைகளின் பாரம் தாங்காமல்தான் ஒவ்வொரு ஜீவனும் பூவுலகில் நுழையும் சமயம் அழத் தொடங்குகிறதோ என்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது. இதேபோல்தான் அந்த ஜீவன் இந்த உலகினை விட்டுச் செல்லும்போது, கொண்டு வந்த பாப மூட்டைகளை இந்த ஜென்மத்தில் கரைக்காமல் மேலும் பாப மூட்டைகளைச் சுமந்து கொண்டு செல்கின்றதே என்று உற்றோரும் மற்றோரும் வருத்தப்பட்டு அழுகின்றார்கள் என்பதே உண்மை. பிறக்கும்போதும் அழுகின்றான்… இறக்கும்போதும் அழுகின்றான் என்ற கவி அரசரின் வரிகளுக்கு அர்த்தம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

என்ன ஸார்… இப்படிச் சொல்கின்றீர்களே… அப்படியானால் எல்லோரும் இந்த உலகில் பாப மூட்டைகளை மட்டும்தான் சுமந்து வந்துள்ளார்கள்… என்கின்றீர்களா…

புண்யங்களை எடுத்து வரவில்லை என்ற அர்த்தத்தில் இது சொல்லப்படவில்லை. இந்த உலகில் பிறந்தவர்கள் சொற்ப சுகங்களை அனுபவிக்காமலும் இருப்பதில்லையே… அந்தச் சுகங்கள் அனுபவத்துக்கு வரும்போதே கொண்டு வந்துள்ள புண்யங்கள் கரைந்துபோகின்றன என அர்த்தம் கொள்ளலாம். ஆனால் கொண்டு வந்துள்ள பாப மூட்டைகளைக் கரைப்பதற்கான சுலபமான வழி பலருக்கும் தெரிவதில்லை. புரிய வைப்பவர்களாகப் பலபேர் இவ்வுலகில் போதனைகளைச் செய்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடக்கும் மனப் பக்குவம் எவருக்கும் வருவதும் இல்லையே… மனம் புண்ய காரியங்களைச் செய்வதைக் காட்டினும் பாப காரியங்களைச் செய்வதையே அதிகம் நாட்டம் கொள்கின்றது.

சரி… ஒருவன் பாபம் அதிகம் செய்துள்ளானா அல்லது புண்யங்களைச் செய்துள்ளானா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது…

உங்களையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன்… நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்துள்ளீர்கள்… நல்ல அப்பா அம்மா… நல்ல சகோதர சகோதரிகள்… வீடு வாகன போகங்கள் உள்ளன. நல்ல மனைவி… நல்ல குழந்தைகள் உங்களுக்கு இருக்கின்றது… நல்ல உத்யோகம்… வருமானம் நன்றாகவே உள்ளது… உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை காட்டிலும் சற்று அந்தஸ்து அதிகம் உள்ளவராகவே இருக்கின்றீர்கள்… இப்படி உங்களது குடும்பச் சூழல் இருந்தால் நிச்சயம் நீங்கள் நல்ல புண்யம் செய்தவரே… பூர்வ ஜென்மத்தில் செய்த புண்யங்களின் பலனே இது என்று எடுத்துக்கொள்ளுங்கள்…

சரி சார்… ஆனாலும் நான் பல கஷ்டங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றேனே… உடம்பு அடிக்கடி படுத்துகின்றது. பையனுக்கு / பெண்ணுக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. கல்யாணம் ஆகவில்லை… அகத்துக்கு மருமகள் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்யம் இல்லை. ஆபிஸில் ப்ரமோஷன் இல்லை. மனைவிக்கும் எனக்கும் ஒத்துப் போகவில்லை. கடன் தொல்லை எல்லை மீறிப் போய்க் கொண்டு இருக்கு. வியாபாரத்தில் நஷ்டம். எதிரிகள் தொல்லை, கோர்ட் கேஸ் இப்படி மனதுக்கு நிம்மதியைக் கெடுப்பதாக வாழ்க்கை. எல்லோருக்கும் இல்லாமல் இல்லை. சொல்லாமலும் எவரும் இல்லை. இவையாவும் போன ஜென்மத்து பாப சேர்க்கைகள்தான் என்றால் மனம் ஒப்புக்கொள்ளவும் செய்யாது. பொதுவாக மனம் என்ன நினைக்கின்றது என்றால் பணக்காரர்கள் எல்லோருமே புண்யம் செய்தவர்கள். கஷ்டப்படுபவர்கள் எல்லோருமே பாபம் செய்தவர்கள். உண்மையிலேயே பணக்காரர்கள் எல்லோருமே சந்தோஷமாக இருக்கின்றார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். மஹா பாதகங்களைச் செய்த ஒருவனை இந்தப் பணக்காரக் குடும்பத்தில் சேர்த்து வேடிக்கை பார்ப்பவனாகவே இறைவன் திருவிளையாடல் புரிகின்றான். பெரும்பாலான பணக்காரர்கள் குடும்பத்தில் மூளை சக்தி இழந்த ஒருவர் அல்லது ஊனம் உற்ற ஒருவர், படிப்பறிவு இல்லாத ஊதாரி, குடும்பத்தின் பெயரினைக் கெடுப்பவராக ஒரு குடிகாரர், இப்படி ஒருவர் இருப்பதைக் காணலாம். இது அந்தப் பணக்காரன் செய்த பாபமா அல்லது அந்த ஊனம் உடையவர் செய்த புண்யமா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது அல்லவா. இது அந்தப் பணக்காரருக்கு மன நிம்மதி தரும் விஷயமா… பாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ய ஆத்மாக்களாகவே பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆக இந்த உலகில் எவருமே எப்போதும் சந்தோஷமாக நிம்மதியாக இருந்ததும் இல்லை. எப்போதும் துக்கத்தை அனுபவித்த வண்ணமும் இருந்ததும் இல்லை.

ஜோதிடரீதியாக இந்த பாப புண்யங்களைப் பற்றிக் கூறும் இடம் 5ஆம் இடமான பூர்வ புண்ய ஸ்தானம் மற்றும் 9ஆம் இடமான பாக்ய ஸ்தானம். இந்த இரண்டு இடங்களிலும் புண்ய கிரகங்களான குரு, புதன், சுக்ரன், சந்திரன் வரப் பெற்றவர்கள் வாழ்க்கையில் அதிகம் சந்தோஷங்களை அனுபவிப்பராகவும் குறைவான கஷ்டங்களை அனுபவிப்பவராகவும் இருக்கின்றார்கள். இதே இடங்களில் பாப கிரகங்களான சூரியன், சனிச்வரன், செவ்வாய், ராகு, கேது வரப் பெற்றவர்கள் கஷ்டங்களை அதிகம் அனுபவிப்பவர்களாகவும் சுகங்களைக் குறைவாகக் காணுபவர்களாகவும் இருப்பார்கள். மேலும் லக்னம், இரண்டாம் இடம் எனப்படும் குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானம், 12ஆம் இடமான மோ க்ஷ ஸ்தானம் இந்த இடங்களில் பாபகிரகங்கள் வரப் பெற்றவர்களும் கஷ்டங்களை அதிகம் அனுபவிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். லக்னம் என்பது உடம்பைப் பற்றி கூறும் இடம். இதன் இரு பக்கத்திலும் இருக்கும் இடங்களே 2ஆம் இடம் மற்றும் 12ஆம் இடங்கள். இந்த மூன்று இடங்களிலும் பாபகிரகங்கள் வரப் பெற்றவர்கள் அதிகம் துன்பங்களை அனுபவிப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

ஒரு ஜீவன் இந்த உலகில் ஜனித்த உடனேயே அவருடைய ஜாதகம் அவரது பூர்வ புண்யத்தைத் தெளிவாக உணர்த்தி விடும். 12 வயதுக்கு மேல்தான் ஒரு ஜீவன் பாபங்களைச் செய்ய ஆயத்தம் ஆகின்றது என்கின்றது ஜோதிட சாஸ்திரம். 12 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் ஸ்திரம் இல்லை என்பதினால் சொல்லப்பட்ட கருத்து இது. உலக நடப்பு மனதுக்குப் புரிய ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டம் முதல் ஒருவனுக்கு நல்ல படிப்பினைகள் போதிக்கப்பட்டால் நிச்சயம் அவனால் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்காமல் இருக்க இயலும்.


Contact Astrologer