தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஏப்ரல் 2012
தேதியூர் V.J. ராமன்
பதினைந்து நாளா வீட்டை விட்டே வெளியில் வராமல் இருந்த கிருஷ்ணசாமியைப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினார் ராமசாமி. வீட்டுக்குள் நுழைந்ததும் வரவேற்றார் மாமி.
“மாமா எப்படி இருக்கார்…” விசாரித்தார் ராமசாமி
“செஞ்ச தப்புக்கு நியாயம் பேசிண்டு இருக்கார்… இவரை நாய் கடிச்சதுக்கு அதுக்குத் தண்டனையைப் பகவான் கொடுத்துட்டாராம். இவர் உடம்பிலே உள்ள விஷம் பாவம் அந்த ஜீவனைச் சாக அடிச்சுடுத்து… உள்ளே போய் பாருங்கோ… படுத்துண்டு இருக்கார்…” சொன்னார் மாமி.
“என்ன கிருஷ்ணசாமி… ஜோஸ்யர் மாமா ஜாக்கிரதையா இருன்னு சொன்னாரே… ஏன் இப்படியெல்லாம் வம்பை விலைக்கி வாங்கறே”
“எனக்கு ஒன்னும் ஆகல ராமசாமி… பகவான் என்னை தண்டிக்கலயே… நாய்க்குத்தானே பரலோகப் பிராப்த்தி கிடைச்சது…”
“இந்த அகம்பாவம்தான் உன்னை எப்போதும் தப்புக்கு மேல தப்பைப் பண்ணவைக்கிறது கிருஷ்ணசாமி…”
“நல்லா சொல்லுங்கோ மாமா. இந்தத் திமிரு பேச்சு, தலைக்கனம்தான் எப்போதும் இவரை வம்பிலே மாட்டவைக்கிறது. தன்னிடம் உள்ள தப்பை ஒத்துக்கவே மாட்டேன்கிறார்…” ஆதங்கப்பட்டார் மாமி.
“சார் போஸ்ட்” லெட்டரைக் கொடுத்துவிட்டுப் போனார் போஸ்ட்மேன்.
பிரித்துப் படித்தார் கிருஷ்ணசாமி. “அடடே… பேரன் படிக்கிற எலிமெண்டரி ஸ்கூலில் இருந்து வந்திருக்கு. அந்த ஸ்கூல்லேதான் நானும் அந்தக் காலத்திலே படிச்சேன். பழைய மாணவர்கள் சந்திப்போம்…”
“சரி. நான் வரேன் கிருஷ்ணசாமி… முடிஞ்சா சாயந்திரம் நம்ம ஜோஸ்யரைப் பார்த்துட்டு வரலாம்” கிளம்பினார் ராமசாமி.
ராமசாமியுடன் சேர்ந்து ஜோஸ்யராத்துக்குப் புறப்பட்டார் கிருஷ்ணசாமி.
வரவேற்ற ஜோஸ்யர் “என்ன கிருஷ்ணசாமி இரண்டு வாரத்துக்கு முந்தி என்னைப் பார்த்துட்டுப் போனப்புறம் நாய் கடிச்சுடுத்தாமே உங்களை…”
“ஆமாம். எனக்கு ஒன்னும் ஆகல. நாய்தான் செத்துப்போச்சு…”
“பாத்தேளா மாமா. இந்தத் திமிருதான் ஒவ்வொரு தடவையும் இவரை ஏதாவது ஒரு கஷ்டத்தில மாட்டிக்கவைக்கிறது. கேட்டா எல்லாம் எனக்குத் தெரியும்ன்னு சொல்றார்…” தூபம் போட்டார் ராமசாமி.
“பாருங்கோ மாமா. என் பொண்டாட்டியும் இதைத்தான் சொல்றா… உங்களுக்குள்ளே உள்ள அகங்காரம், திமிரு ஒழியனும்னு சொல்றா. அவதான் தெரியாம இப்படிச் சொல்றான்னா என்னைப் பத்தி புரிஞ்ச இவரும் இதையேத்தான் சொல்றார். நீங்க சொல்லுங்கோ மாமா எனக்கு இருக்கறது அகங்காரமா…”
ஒருவர் சொல்லும் நல்ல பேச்சை கேட்காததும் தனக்கு எல்லாம் தெரியும்னு சொல்றதும் அகங்காரம்தான் கிருஷ்ணசாமி. திமிரு, ஆணவம், கர்வம், மமதை, செறுக்கு, அகம்பாவம், அகந்தை, தன் முனைப்பு (ஈகோ) இப்படிப் பல பெயர்களில் இதைச் சொல்லலாம். இவையெல்லாம் நோய்களுக்கான வாசல் என்பதை மறந்துவிடாதீர்கள். நமது பிரதான உறுப்புகளான மூளை, கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை நோயுறச் செய்வது இந்த ஈகோ என்கிற அகம்பாவம். இது ஒருவனுடைய பிறவிச்சூழல், நடைமுறை பழக்கங்கள், தான் நினைப்பதே சரி, நடந்துகொள்ளும் விதமே சரியானது என்று வாதிடும் குணம் இவற்றால்தான் அதிகரிக்கப்படுகிறது.
காமம் வந்தால் வெட்கம் தொலைந்துவிடும். கோபம் வந்தால் செல்வம் தொலைந்து போகும். தீயவனுக்கு உதவிசெய்தால் ஒழுக்கம் தொலைந்து போகும். கர்வம் வந்தால் எல்லாமே தொலைந்து போகும் என்கிறது விதுர நீதி. யட்ச பிரச்னத்தில் யட்சஸ் தர்மபுத்ரரிடம் எது அகங்காரம் எனக் கேட்கிறது. தான் தனது என்ற எண்ணமே அகங்காரம் என்கிறார் தர்மர். தான் உள்ளது குழம்பு, தான் அற்றது ரஸம் என விளக்கமும் சொல்றார்.
எந்த ஒரு பலம் ஒருவனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்துகிறதோ அதுவே அவனுக்கு பலவீனத்தையும் ஏற்படுத்திவிடும். தான் அழகாக இருக்கிறோம் என்ற மமதை உள்ள பெண்ணுக்கு அந்த அழகே பலவீனத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும். படிப்பினில் கர்வம் உடையவனுக்கு அதுவே சில சமயங்களில் எதிரியாகவும் மற்றவர்களால் தனிமைப் படுத்தப்படவும் செய்துவிடும். இதே போல் ஏதேனும் ஒரு துறையில் பிரசித்தி பெற்று அகம்பாவம் கொண்டவர்களுக்கு அந்தத் துறையே மக்களிடம் அவர்கள் மேல் துவேஷத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
“இந்த அகங்காரம் எப்போது ஒழியும் மாமா” கேட்டார் ராமசாமி.
அவமானப்படும்போது பலருக்கும் இந்த அகங்காரம் ஒழிந்துவிடுகிறது. அகங்காரப்படும் பலர் தன்னுள் கோழையாகவும் இருப்பார்கள். இந்தக் கோழைத்தனம் தன்னுள் கிளம்புகிற போது அச்சத்தை ஏற்படுத்தி அகங்காரத்தை அழித்துவிடும். அகங்காரம் என்கிற பலம் அவனுள் உள்ள பலவீனத்தால் அவனை அழித்துவிடும் என்பதைப் பல புராண கதைகளால் சொல்லலாம்.
காஞ்சி பரமாச்சார்யாளைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார் ஒரு பயில்வான். தான் ஒரு பிடி எள்ளைக் கையால் எடுத்து கசக்கி எண்ணெயாகப் பிழிந்துகாட்டும் பலம் உள்ளவன் என்ற விபரத்தையும் சொல்லி அனுப்பினாராம். அதே தினம் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள் என்ற பக்தர்… அடிக்கடி மடத்துக்கு வந்துபோகக் கூடியவர். அவரும் பரமாச்சார்யாளைப் பார்க்க வந்திருந்தார். நல்ல உடற்கட்டும், உயரமும் பீமசேனனை போல உருவமும் உடைய அவரைப் பெரியவா ‘இன்று நீ மடத்து வாசலிலே ராத்திரி வரைக்கும் நிற்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டார். பெரியவாளின் உத்தரவைக் கேட்ட சாஸ்திரிகளுக்கும் மற்ற சிப்பந்திகளுக்கும் ஏன் அப்படிப் பெரிய உத்தரவு போட்டா என்று புரியலே. சிப்பந்திகள் அனைவருமே வரப்போற பயில்வானைப் பற்றிப் பேசிக்கொண்டும் அவரது வரவு குறித்து ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் கடைசிவரை பயில்வான் வரவே இல்லை.
விஷயம் என்னவென்றால் அந்தப் பயில்வான் தனது சிஷ்யனை முதலில் அனுப்பி மடத்துக்குச் சென்று தான் வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனி என்று அனுப்பி உள்ளார். மடத்து வாசலில் பெரிய கடோத்கஜன் போன்ற உருவம் நிற்பதைப் பார்த்த சிஷ்யன் பயில்வானிடம் உங்களைவிட பன்மடங்கு பலசாலியான பயில்வான்கள் மடத்தில் உள்ளார்கள் என்ற விஷயத்தைச் சொல்லி உள்ளான் அப்புறம் என்ன சொல்லிக்கொள்ளாமல் பயத்தினால் வந்த பயில்வான் காஞ்சியை விட்டே ஓடி இருக்கிறார். பெரியவா கிருஷ்ணசாஸ்திரிகளை வாசலில் நிற்கச் சொன்னதன் ரகஸ்யம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தையும் உத்ஸாகத்தையும் எற்படுத்தியதாம்… பயில்வானின் பலம் பலவீனம் பெரியவாளுக்கு புரியாதா என்ன…
“ஜோதிடரீதியாக அகங்காரம் உடையவன் என்பதை எதன் மூலம் புரிந்துகொள்ளலாம்” கேட்டார் கிருஷ்ணசாமி.
லக்னம் மற்றும் 7ஆம் இடத்தில் சூரியன் வரப்பெற்றவர்கள், லக்னம் மற்றும் 10ம் இடத்தில் குரு பகவான் வரப்பெற்றவர்கள் உயர் பதவி அரசாங்க ரீதியாகவோ தனியார் துறையிலோ வகிப்பதன் மூலம் பதவி அகங்காரம் உடையவர்களாக இருப்பார்கள்.
லக்னம் மற்றும் 7ஆம் இடத்தில் சந்திரன் வரப்பெற்றவர் வசீகரமான தோற்றம் பெற்று தான் தான் மிக அழகானவர் என்ற அகங்காரம் உடையவராக இருப்பார்கள்.
3, 6, 8, 12ஆம் இடங்களில் புதன் வரப் பெற்றவர்கள் வித்யா அகங்காரம் உடையவர்கள். 3ஆம் இடத்தில் குருபகவான் வரப்பெற்றவர்கள் தான் என்ற மமதை உடையவர்களாகவே இருப்பார்கள். தன்னை தைவக்ஞன் என்றும் சிலர் சொல்லிக்கொள்வார்கள். புதனும் சுக்ரனும் சேர்ந்து ஜாதகத்தில் வரப்பெற்றவர்கள் ஏதேனும், ஒரு கலையில் தனித்திறன் பெற்றும் அதன் மூலம் கர்வம் அடைந்தவர்களாகவும் இருப்பார்கள். 3ஆம் இடத்தில் சனிச்சுவரன் வரப்பெற்றவர்கள் தன்னைவிட பலசாலி இல்லை என்று பெருமை கொள்பவனாகவும் இருப்பான்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.. அகங்காரம் கண்ணை மறைக்கும் என்றெல்லாம் வழக்கு உள்ளது. அகங்காரம் உள்ளவர்களுக்கு ஆத்திரம் அதிகம் வரும். என்ன கிருஷ்ணசாமி… உங்களுக்குள் இருக்கும் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவம் ஆத்திரத்தை ஏற்படுத்திப் புத்தியை அவ்வப்போது மழுங்கவும் செய்துவிடுகிறது. உங்களைத் திருத்த ஒருவன் நிச்சயம் வருவான். அது இன்றோ அல்லது நாளையோ கூட நடக்கலாம்.
“சரி மாமா…” சொல்லிக்கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.
பேரன் பள்ளி ஆண்டு விழாவுக்கு ராமசாமியையும் அழைத்துக்கொண்டு போனார் கிருஷ்ணசாமி.
பள்ளி நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பழைய மாணவர்களை அழைத்து பேசச் சொன்னார்கள். கிருஷ்ணசாமியும் பேசினார்.
தன்னைத் தன் பேரன் மூலம் அறிமுகப்படுத்திக்கொண்ட கிருஷ்ணசாமியும் பேசினார்.
இடைமறித்த பேரன் மைக்கைப் பிடுங்கி பேச ஆரம்பித்தான். எங்க தாத்தா இந்தப் பள்ளியில் படித்தாலும் தன்னைப் பற்றியே பேசினாரே ஒழிய இந்தப் பள்ளி எவரால் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றி ஒருவார்த்தைகூடப் பேசவில்லை.
“யார்… யார்…” என்று எல்லோரும் கூச்சல் போட்டார்கள்.
“எங்க தாத்தாவோட, தாத்தா கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள்தான் இந்தப் பள்ளிக்கூடம் வரத்துக்கு மூலகாரணமாகச் செயல்பட்டவர். நான்கு வேதங்களையும் கரைத்து முடித்தவர். நல்ல உபன்யாஸகரும்கூட. தர்க்கத்தில் அவரை வெல்ல முடியாதாம். தனது உழைப்பில் கிடைத்த பணத்தினால் இந்த ஊரில் பள்ளிக்கூடம் அவசியம் தேவை என உணர்ந்து கட்டினாராம். இந்தக் கிருஷ்ணசாமி தாத்தாவோட அப்பாவும் பெரிய கணபாடிகள்தான். தன்னை வைதீக பரம்பரையில் வந்தவர் என்று சொல்லிக்கொள்ள இந்தக் கிருஷ்ணசாமி தாத்தாவுக்கு எப்போதுமே வெட்கம். ஆனால் ஒரு வைதீகப் பரம்பரையில் வந்தவன் என்று சொல்லிக்கொள்ளவே நான் விரும்பறேன். வேதத்தைக் கற்றுக்கொள்ள இப்பவே ஆரம்பிச்சுட்டேன். குடுமியும் வைச்சுண்டு இருக்கேன் பாருங்கோ…” பிச்சு பிச்சு உதறினான் பேரன்.
எல்லோர் முன்னாலும் அவமானப்பட்டு வெட்கப்பட்டுத் தலைகுனிந்த கிருஷ்ணசாமி தன் வறட்டு கௌரவம், தலைக்கனம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைவிட்டு விலகுவதாகவே உணர்ந்தார்.
No Comment