தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – டிசம்பர் 2010
தேதியூர் V.J. ராமன்
வாசலில் யாரோ இருவர் சண்டைபோடும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார் ராமசாமி.
அடடே. . . நம்ம கிருஷ்ணசாமி ஆட்டோக்காரரிடம் ஏதோ ஊரே கேட்குமளவுக்கு சப்தம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே என்று அவரை நோக்கி நடந்தார்.
வா ராமசாமி . . . கோயம்புத்தூர் போயிட்டு இன்னிக்குத்தான் வந்தேன். சென்ட்ரல்லே ஆட்டோ பிடிச்சேன். Prepaid ரேட்தான். நங்கநல்லூர் ஆத்துக்கு வந்ததும் ரூ. 180 கொடுத்தேன். வாங்கமாட்டேன் ரூ. 200 வேணும்னு அடம்பிடிக்கிறான். ஊரே கேட்கற மாதிரி கத்தரான். இந்தச் சென்னை ஆட்டோக் காரங்களுக்கே நேர்மை நாணயம் எதுவுமே கிடையாது. . .
என்னப்பா. . . ஸார் சொல்றது சரிதானே. ஏன் கூடகேட்கிறே. இது சரின்னு உனக்குத் தோனறதா. நேர்மையாக நடந்துகொள்ள வேண்டாமா. . . சற்றுக் கோபத்துடன் கேட்டார் ராமசாமி
ஸார். யாருக்கு நேர்மை இல்லைன்னு நீங்களே சொல்லுங்க. . . சென்ட்ரல்ல ஏறும்போது ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலே வீடுன்னு சொன்னார். பழவந்தாங்கலுக்கு Prepaid ஆட்டோ ரேட் ரூ 180. இங்கு வந்தப்பறம்தான் வோல்டாஸ் காலனி கடைசி தெருவுக்குப் போகனும்னு சொன்னார். ஆட்டோ ஏறும்போதே நங்கநல்லூர் வோல்டாஸ் காலனின்னு சொல்லியிருந்தா அங்கேயே நான் ரூ. 200ன்னு கேட்டிருப்பேன். தவறு யார் பேர்லன்னு நீங்களே சொல்லுங்க.
சற்றுத் தடுமாற்றத்துடன் கிருஷ்ணசாமியைத் திரும்பிப் பார்த்தார் ராமசாமி.
ஸார். . . அவருக்கு இருபது ரூபாய் அதிகம் கொடுக்க மனசில்லேன்னா வேண்டாம் ஸார். நான் தினமும் யாராவது ஒருத்தருக்குக் குறைந்தது இருபது ரூபாயாவது வருமானத்தில் இருந்து கொடுத்து உதவிக்கொண்டு இருக்கேன். அதுபோல நினைச்சுக்கிறேன். என்று சொல்லிக்கொண்டே ஆட்டோக்காரர் கிளம்பினார்.
‘என்ன கிருஷ்ணசாமி. சரியாகச் சொல்லி ஏற வேண்டியதுதானே. என்ன சொல்லிட்டுப் போனான் பாத்தியா. . .’
‘விடு ராமசாமி. . . இந்த ஆட்டோக்காரங்களே இப்படித்தான். . .’ இருபது ரூபாய் மிச்சம் பண்ணிவிட்டோம் என்ற பெருமையில் விடுவிடு என்று வீட்டுக்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி.
இப்போது யாரிடம் நேர்மையில்லை என்ற குழப்பத்துடன் வீடு திரும்பினார் ராமசாமி.
மும்பையில் தான் இருந்த நாட்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டார் ராமசாமி. டோம்பிவிலியில் ஸ்டேஷனிலிருந்து ஆத்துக்குச் செல்ல ஒன்பது ரூபாய்தான். பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தால் ஒரு ரூபாய் ப்ராம்ப்ட்டாக ஆட்டோக்காரர்கள் திருப்பிக் கொடுப்பார்கள். நேர்மை என்றால் மும்பையில்தான் பார்க்க வேண்டும். பப்ளிக் டாய்லெட்டானாலும் அதிலே க்யூ. பஸ்ஸில் செல்ல பஸ் ஸ்டாண்டில் க்யூவில் நின்றுதான் ஏறுவார்கள். பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் படிப்பதற்காக வைத்துள்ள பத்திரிகைகளைப் படித்துவிட்டு அழகாக அதே இடத்தில் அடுக்கிவைக்கும் அழகு. ட்ரைனில் அந்தக் கூட்டத்திலும் என்ன டிஸிப்லின். அப்பப்பா. . . எல்லாத்திலுமே ஒரு நேர்மை நாணயம். . . யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லாததினால் மஹாலக்ஷ்மி தாண்டவம் ஆடுகின்றாள் அங்கே. . . சென்னை வந்ததும் எல்லாமே தலைகீழ்தான், ம் . . . என்று பெருமூச்சுவிட்டார் ராமசாமி. . .
மாலை கிருஷ்ணசாமியும் ராமசாமியும் ஒரு சிறிய நடைப் பயணத்தைத் துவங்கினார்கள். காலை நடந்த சம்பவத்தை அசைபோட்டுக் கொண்டே சென்ற இருவரும் ஜோதிடர் வீட்டைப் பார்த்ததும் சட்டென்று நின்றார்கள்.
என்ன ராமசாமி . . . காலை நடந்த சம்பவம் பற்றி ஜோஸ்யர் மாமாவிடம் கேட்டால் என்ன. . .
எதைப் பற்றி, நேர்மையைப் பற்றியா? ராமசாமி கேட்டார்.
ஆமாம் . இருவரும் ஜோஸ்யராத்தில் நுழைந்தார்கள்.
வாங்கோ. . . வாங்கோ. . . ஏதாவது புதுப் பிரச்சினையா. . .
ஆமாம். . . எப்படி கரைக்டா கேட்கறேள். . . காலையில் நடந்த விவரம் பற்றி விவரித்தார் கிருஷ்ணசாமி. . .
உங்கள் இரண்டு பேருக்கும் ஒரு கதை சொல்றேன் என்று ஆரம்பித்தார் ஜோஸ்யர்.
பொதுவா, இந்த உலகத்திலே நிறையப் பேர் நேர்மையுடன் இருப்பதினால்தான் மழை பெஞ்சுண்டு இருக்கு. சுபிக்ஷம் கொஞ்சம் நாட்டிலே இருக்கு. ஆனால் எல்லோருமே நேர்மையா எப்போதும் இருக்க முடியறதும் இல்லையே.
ஆங்கிரஸர் என்ற ஒரு ரிஷி இருந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரிடம் குருகுல வாஸம் செய்துகொண்டு இருந்தார்கள். எல்லோருமே நன்றாகப் படிப்பவர்களா இருப்பார்களா. . . படிக்கிற குரூப், படிக்காத குரூப் என்று இரண்டு செட் மாணவர்கள். இந்தப் படிக்காத குரூப் தங்களுக்கு குரு பாடம் சொல்லிக்கொடுப்பதில் பாரபக்ஷம் காட்டுகிறார் என்றே நம்பினார்கள்.
ஒரு நாள் குருநாதர் தனியாக இருக்கும்போது படிக்காத கூட்டத்தைச் சார்ந்த ஒரு மாணவன் குருவே. . . எங்களுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் இருக்கு. தாங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதில் நேர்மையாகவே நடந்துகொள்ளவில்லை. என்றே தோன்றுகிறது. . . தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே தாங்கள் முழு ஞானத்தின் பலனைக் கொடுக்கின்றீர்கள். ஏன் எங்களுக்கு மட்டும் பாரபக்ஷம் காட்டுகிறீர்கள். . .
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆங்கிரஸர் அதிர்ந்துபோனார். சரி. இது போன்ற அபிப்ராயம் உள்ள எல்லோரையும் அழைத்து வா. உங்களுக்கு ஒரு பரிக்ஷை வைக்கிறேன். அப்போதுதான் உங்களுக்குப் புரியும் நான் நேர்மையாக நடந்து கொள்கிறேனா. அல்லது நீங்கள் என்னைத் தவறான கோணத்தில் பார்க்கின்றீர்களா என்று புரியும்.
நீங்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள கிராமத்துக்குப் போய் எல்லா விதத்திலும் மிகவும் நேர்மையுடன் இருக்கும் ஒருவரை அழைத்து வர வேண்டும். இதுதான் பரிக்ஷை.
அடே. பரிக்ஷை மிகவும் எளிதாக இருக்கே. இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் குரு தங்கள்மீது விசேஷக் கவனம் செலுத்திப் பாடம் சொல்லிக் கொடுப்பார் என்று ப்ரயாசைப்பட்டு அனைவரும் கிளம்பினார்கள். ஆனால் துரதிருஷ்டம் அவர்களால் ஒருவரைக்கூட மிக நேர்மையான மனிதனாக அந்த ஊரில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு விதத்தில் குற்றம் குறை இருக்கத்தான் செய்தது. . .
சோகத்துடன் திரும்பிய மாணவர்கள் குருவிடம் தங்களால் அப்படிப்பட்ட ஒருவரைப் பார்க்க முடியவில்லை என்று கூறினர்.
சரி, சரி, பரவாயில்லை அடுத்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மிகவும் கெட்ட காரியங்களை மட்டுமே செய்த நேர்மையே இல்லாத ஒரு மனிதனை அழைத்து வாருங்கள் என்று கூறி அனுப்பினார்.
சிறிது காலம் பொருத்துத் திரும்பிவந்த அந்த மாணவர்கள் குருவே மன்னிக்க வேண்டும் . அந்த ஊரில் மிகுந்த கொடுமைகளை மட்டுமே செய்த கெட்டவன் ஒருவன்கூட இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் நல்ல காரியங்களும் செய்திருக்கின்றார்கள்.
இப்போது புரிகிறதா. ஒருவன் நேர்மையானவனா. . . இல்லையா என்பதும் நல்லவனா கெட்டவனா என்பதும் நாம் பார்க்கும் கோணத்தில்தான் இருக்கின்றது. என்னைப் பொருத்தவரை நீங்கள் அனைவரும் ஒன்றுதான். குருவிடமாகட்டும் கடவுளிடமாகட்டும் முழுமையாக நம்பிக்கை கொள்பவனே நேர்மையானவன். அவனே என்றும் முன்னுக்கு வருவான். இந்த விளக்கத்தைக் கேட்ட மாணவர்கள் தங்களது மனோபாவத்தைத் திருத்திக்கொண்டார்கள்.
வழக்கமான கேள்வியைக் கேட்டார் ராமசாமி. யார் யார் எல்லாம் நேர்மையாக இருப்பார்கள் ஜோதிஷ ரீதியாக.
லக்னத்தில் சூரியன் உள்ளவர்கள், லக்னம் 4, 5, 7, 9, 10ஆம் இடங்களில் குருபகவான் இருக்கப் பெற்றவர்கள் அல்லது இந்த இடங்களைக் குருபகவான் பார்க்கப் பெற்றவர்கள் அனைவரும் பெரும்பாலும் நேர்மையானவர் களாகவே இருக்கின்றார்கள். லக்னம் 5, 7, 12ஆம் இடங்களில் சுக்ரன் ராகு வரப் பெற்றவர்கள், 5, 7, 9ஆம் இடங்களில் சூரியன் வரப் பெற்றவர்கள் நேர்மை தவறி நடப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
கிருஷ்ணசாமி. நேர்மையாக இருப்பது நாம் வளர்க்கப்படும் விதத்தைப் பொருத்தும் இருக்கின்றது. நேர்மையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் என்றும் மதிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றார்கள். நேர்மையாக இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்யும் பலர் நேர்மை இல்லாமலும்தான் இந்த உலகில் இருக்கின்றார்கள். அளவற்ற ஆசையும் சுற்றமும் சூழலும்கூட நேர்மை இழக்கச் செய்துவிடுகின்றது. எந்தத் தருணத்திலும் நேர்மையைக் கடைபிடிப்பவர்கள்தான் உண்மை மஹாத்மாக்கள். அவர்களைப் பரப்பிரம்மத்துக்கு நப்பானவர்கள் என்றும் கூறலாம். நேர்மையின்றிக் கிடைக்கும் எந்தப் பணமும் நம்மிடம் தங்குவதும் இல்லை. மாறாக ஒன்றுக்குப் பத்தாகத் தன நஷ்டங்களையும் அவப்பெயரையும் சம்பாதித்துக் கொடுத்துவிடும். நேர்மைக்குச் சோதனை வருகின்றது. எதிர்கொள்பவனே என்றென்றும் போற்றப்படுகின்றான்.
நன்றி கூறிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.
மறுநாள் மந்தைவெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கிருஷ்ணசாமி ஏஸி பஸ்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்து கிண்டிக்கு டிக்கெட் வாங்கினார். கண்டக்டர் பதினைந்து ரூபாய்க்கான டிக்கெட்டும் மீதி 85 ரூபாய்க்கான சில்லரையும் கொடுத்தார். வாங்கிக்கொண்ட கிருஷ்ணசாமிக்குச் சற்று சபலம் தோன்றியது. இன்று நரிமுகத்தில் முழிச்சிருக்கேன் போல இருக்கு . ஐம்பது ரூபாய் கொடுக்க டிக்கெட்டும் எண்பத்தைந்து ரூபாயும் கிடைத்துள்ளதே என்று மகிழ்ந்தார் . தவறுதலாகக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்ற மனோபாவம் வரவில்லை.
கிண்டி இறங்கியதும் ட்ரைனைப் பிடித்து நங்கநல்லூர் வீடு வந்து சேர்ந்தார். மனம் அன்று கிடைத்த ஜாக்பாட்டைப் பற்றியே அங்கலாய்த்துக்கொண்டிருந்தது.
என்னண்ணா . கொண்டுபோன பை என்னாயிற்று. மாமி கேட்டதும்தான் பையைப் பற்றிய ஞாபகம் வந்தது கிருஷ்ணசாமிக்கு.
அடடா . . . கை பையை எங்கேயோ தவறவிட்டுட்டேனே. எண்பத்தைந்து ரூபாய்க்கு ஆசைப்பட்டுப் பையில் உள்ள எட்டாயிரம் ரூபாய் பணத்தைத் தவறவிட்டுட்டோமே என்று மனம் பதைபதைத்தது. எங்கே பையைத் தவறவிட்டேன். பஸ்ஸிலா. . . ட்ரைனிலா . . . மனக் குழப்பத்தில் இருந்தார் கிருஷ்ணசாமி.
இரண்டு மணிநேரம் இப்படி மனப் போராட்டம். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு . நேர்மை தவறி நடந்ததற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையா . அல்ப சந்தோஷம் துக்கமாக மாறியது.
ரொம்ப நேரம் ஒலித்துக்கொண்டிருந்த டெலிபோனை விரக்தியுடன் எடுத்தார் கிருஷ்ணசாமி.
ஸார். . . கிருஷ்ணசாமியா . . .
ஆமாம். . . நீங்கள் . . .
நான்தான் ஸார் . 21ஜி பஸ் கண்டக்டர். . . உங்கள் பையை பஸ்ஸில் தவறவிட்டுவிட்டுப் போயிட்டீங்களே. உங்கள் அட்ரஸ், டெலிபோன் நம்பர் பையில் இருந்தது. . . நானும் நங்க நல்லூர்தான். . . ட்யூடி முடிந்து வரும்போது உங்களது பையைக் கொண்டு வந்து தர்றேன் ஸார்.
மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போன்று இருந்தது கிருஷ்ணசாமிக்கு. ஒரு கண்டக்டருக்கு இருக்கும் நேர்மை இவ்வளவு வயசாகியும் எனக்கில்லையே. வெட்கித் தலைகுனிந்தார் .
இரவு தனது பை திரும்ப வந்ததும் வயது வித்யாஸம் பார்க்காமல் சாஷ்டாங்கமாக அந்த கண்டக்டருக்கு ஒரு நமஸ்காரம் செய்தார். ப்ரயாசைப்பட்டு பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுத்தார். இவரது சைகைகளைப் பார்த்த கண்டக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பரப்பிரம்மத்துக்குப் புரிய வேண்டிய அவசியமும் இல்லையே.
No Comment