தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – MAY 2012
தேதியூர் V.J. ராமன்
தரையில் படுத்துக்கொண்டு, காலை சுவற்றின்மீது வைத்துக்கொண்டு, தனக்குத் தானே பேசிக்கொண்டு இருந்தார் கிருஷ்ணசாமி.
“ஏன்னா… என்ன ஆச்சு உங்களுக்கு. புத்தி பேதலிச்சு போயிட்டுதா… சித்தப்பிரமை புடிச்சா மாதிரி தனக்குத் தானே பேசிண்டு இருக்கேளே…” மாமி கேட்டாள்.
“பேரன் தான் இப்படி பிதற்ற வைச்சுட்டாண்டீ… அத்தனை பேர் முன்னாடியும் எனக்கு சவுக்கடி கொடுத்தா மாதிரி, ஸ்கூல்லே பேசிட்டான்…”
“அவன் மூலமாவது புத்திவந்தா சரி. ஆனா நீங்க ஒன்னும் மாறினா மாதிரி தெரியலையே…” அங்கலாய்த்தார் மாமி.
“அவா அவா சுபாவத்தை மாத்தரது கொஞ்சம் கஷ்டம்தான் மாமி” சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமசாமி.
“நானும் என்னை மாத்திக்கனும்னுதான் முயற்சிக்கிறேன் ராமசாமி. அப்ப… அப்ப யாராவது ஏதாவது சொல்றது. செய்யறது என்னைப் பழையபடி மாத்திடறது…”
“வாழ்க்கையிலே ஏதாவது ஒரு ஸ்டேஜ்லேயாவது தன்னை உணரனும் கிருஷ்ணசாமி. அவரவர் பிறவிக் குணத்தை மாத்த முடியாது என்பது உண்மைதான். சில பிடிவாத குணங்கள் உடும்புப் பிடிமாதிரி எல்லோரிடமும் ஒட்டிக்கொண்டு இருக்கு… என்னதான் அனுபவப்பட்டாலும் அவாளாலே அந்தப் பிடிவாத குணங்களை மாத்திக்கொள்ள முடியறது இல்லை.
“பத்து வயது பேரனுக்கு இருக்கிற நல்ல சுபாவம் இவர்கிட்டே இல்லை. தனக்குத் தெரியாதது எதுவுமே இல்லைங்கிற பிடிவாதம், அகம்பாவம் எல்லாமே சேர்ந்து இருக்கே…” பொரிந்து தள்ளினார் மாமி.
“பேரன் பேச்சை ஸ்கூல்லே கேட்டப்பறம் நிச்சயம் மாறிடுவார் பாருங்கோ மாமி, கவலைப் படாதேங்கோ” ஆறுதல் சொன்னார் ராமசாமி.
‘நன்னா சொல்லு ராமசாமி… நீ ஒண்டிதான் என்னைச் சரியா புரிஞ்சிண்டு இருக்கே.”
“என்ன… இன்னிக்கு ஜோஸ்யராத்துக்கு விஜயம் உண்டா” கேட்டார் கிருஷ்ணசாமி.
“சாயந்திரம் போகலாம் கிருஷ்ணசாமி, ஏதோ கேட்கனும்னு வந்தேன்.. எல்லாமே மறந்து போச்சே… சரி… சரி நான் வரேன்” கிளம்பினார் ராமசாமி.
“வாங்கோ ராமசாமி. வாங்கோ கிருஷ்ணசாமி… வரவேற்றார்” ஜோஸ்யர்.
“மாமா… எங்காத்து மாமி என்னை எப்போதும் திட்டிண்டே இருக்கா… கொஞ்சமாவது திருந்தமாட்டேளான்னு அப்ப அப்ப கேட்கறா… என்னால என் சுபாவத்தை மாத்திக்க முடியலையே என்ன பண்றது மாமா” கேட்டார் கிருஷ்ணசாமி.
“இதை இவரது சுபாவம்ன்னு சொல்லறதா… அல்லது பிறவிக் குணமா” ராமசாமி கேட்டார்.
“இரண்டுமே ஒன்றுதான் ராமசாமி, குணங்கள்தான் சுபாவம் என்ற போர்வையை மனிதர்களுக்குப் போர்த்திவிடுகிறது, அனுபவங்கள் சிலருக்கு மாற்றத்தைக் கொடுத்து அவர்களை நல்ல மனிதர்களாக மாத்துகிறது, பலபேர் என்ன அனுபவப்பட்டாலும் அவமானப்பட்டாலும் தன்னை மாத்திக் கொள்றதே இல்லை, பல பேர் அதைத் தனக்குச் சாதகமா எடுத்துண்டு மற்றவர்கள் தன் முன்னால் பயப்பட வேண்டுமென்ற மாயத்தோற்றத்தில் மயங்க விரும்புகிறார்கள், அடியேனுடைய வாத்தியார் ஒருத்தர் இருந்தார், நீங்க கிருஷ்ணசாமிங்கற மாதிரி அவர் கிருஷ்ணமூர்த்தின்னு பேரு. கிட்டா சார்ன்னு கூப்பிடுவோம். மகா கோபிஷ்டர். தனது கடைசிக் காலம் வரை அவர் தன்னை மாத்திக்கவே இல்லை. பிள்ளையைத் தனக்குக் கொள்ளிப் போடக் கூடாதுன்னு திட்டி அனுப்பிச்சுட்டார். அவருடைய பையனோ மகா பொறுமைசாலி. ஒரே குடும்பத்தில் இரு துருவங்கள். தன்னைக் கோபக்காரன் என்று மற்றவர்கள் சொல்வதையே அவர் கடைசிக் காலம் வரை விரும்பினார்.
“கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணசாமின்னு பேர் வைச்சுண்டு இருக்கறவா எல்லோருமே பெரும்பாலும் கோபக்காராளாதான் இருக்கிறார்கள் மாமா” தூபம் போட்டார் ராமசாமி.
கோபப்படுவது அவரது சுபாவம். சமீபத்தில் அடியேனிடம் ஜோதிடம் பார்க்க வந்தார் ஒருவர் … வந்து அமர்ந்து, கால்மேல்கால் போட்டுக்கொண்டு சாய்ந்த வண்ணம் கண்களை மூடிக்கொண்டு சொல்லும் என்றார்.
சரி ஏதோ வில்லங்கம் செய்ய வந்துள்ளார் என்று முடிவுசெய்தேன் என்றாலும் மனைவியுடன் வந்துள்ளாரே என்று நினைத்து ஜாதகத்தைப் பார்த்தேன். மூன்றாம் இடத்தில் குருபகவான் உள்ளவர்களுக்குப் பலன்கள் சொல்வதில் அர்த்தம் இல்லை என்று என் தகப்பனார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
‘என்ன மேடம் ஸாருக்கு உடம்பு சரியில்லையா’ என்று கேட்டேன்.
‘இல்லை இல்லை அவர் சுபாவமே இப்படித்தான் நீங்க சொல்லுங்கோ’ என்றாள்.
துரியோதனுக்கு உண்டான அனைத்துக் குணங்களும் உடையவர் என்பதை அவரது ஜாதகம் மூலம் புரிந்துகொண்டு அவரது குணநலன்கள் மற்றும் அவருடைய பெண்கள் ஜாதகங்கள் குறித்து அடியேனுடைய கருத்துகளைத் தெரிவித்தேன். மறுநாள் காலை ஒரு போன்கால் வந்தது ‘சுவாமிகளே நேற்று வந்துவிட்டு போனேனே அவர்தான் பேசறேன். ‘நீர் ஜோதிடம் இனி சொல்லக் கூடாது உமக்கு ஜோதிடத்தைப் பற்றி எதுவுமே தெரியாது, நான் தைவக்ஞன் என்னைப் போன்றவர்கள்தான் ஜோதிடம் சொல்லலாம் நீர் பத்திரிகை ஒன்றில் வந்த கட்டுரையைப் படித்துவிட்டு அதை அப்படியே சொல்றேள். சுயமா உங்களுக்கு ஒன்னும் தெரியாது’ படபட எனப் பேசினார்.
‘ரொம்ப சந்தோஷம். தாங்கள் ஆக்ஞைபடியே செய்கிறேன் எந்தப் பத்திரிகையில் வந்த விஷயத்தை அடியேன் சொன்னேன் என்று சொல்லலாமா’ கேட்டேன் நான்.
“பிராமின் டுடே” என்று ஒரு பத்திரிகை வரது அதில் உள்ள கட்டுரையைப் படித்துவிட்டு அதையேதான் சொன்னேள்’
‘அப்படியா. அந்தக் கட்டுரையை யார் எழுதியது என்று சொல்ல முடியுமா’ கேட்டேன்.
‘தேதியூர் ராமன்னு ஒருத்தர் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு சொல்றேள்’
‘அந்தத் தேதியூர் ராமனைத்தான் நீங்கள் நேற்றுப் பார்த்தேள். இப்போதும் அவரிடம் தான் பேசிண்டும் இருக்கேள்’ என்றதும் போனை கட் பண்ணிவிட்டார். யாரைப் பார்த்தோம் யாரிடம் பேசுகிறோம் என்றே தெரியாத அவர் தன்னை தைவக்ஞன் என்று சொல்லிக்கொள்கிறார். இது அவரது குணம், அவரது சுபாவம், இவரிடம் ஜோதிடம் பார்ப்பவர்கள் என்ன கதிக்கு உள்ளாவார்கள் என்பது அவர்களது அனுபவங்களைக் கேட்டால்தான் புரியும்.
‘அவர் பேசியதைக் கேட்டு, உங்களுக்கு கோபம் வரவில்லையோ’ கிருஷ்ணசாமி கேட்டார்.
‘அனுதாபப்பட்டேன் அவரது அறியாமையை பார்த்து, 1966ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்றேன் கேளுங்கோ, ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா எழுதிக்கொடுத்த ஒரு ஆசிய கீதத்தை ஐ.நா. சபையிலே எம்.எஸ் சுப்புலட்சுமி பாடினது உலக அளவில் பேசப்பட்டது. ‘மைத்ரீம் பஜத’ என்று தொடங்கும் அந்தக் கீதம் உலக மக்கள் அனைவரும் போரை விட்டுவிட்டு அமைதியுடன் வாழ வேண்டும் என்று பொருள்பட எழுதப்பட்ட உன்னதமான பாட்டு. இது நடந்த சில நாட்களில் மடத்துக்கு ஒரு கடிதம் வந்தது. உலக அளவில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள ஒரு இசைக் கலைஞரைக் கொண்டு பெரியவா இது போன்ற பப்ளிஸிட்டியைத் தேடிக்கொள்ள முயல்கிறார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு.
பெரியவாளின் பெருமைகளைப் பற்றி நமக்கெல்லாம் புரியவைச்ச ரா. கணபதியிடம் பெரியவா என்கிறார் அதற்குப் பெரியவா சொல்லறா
“இதுலே ஆத்திரப்படறத்துக்கோ கோபப்படறத்துக்கோ ஒன்னுமில்லே ஐ.நா. சபைக்காரன் இப்படியொரு மெஸேஜ் வேணும்னு கேட்டானா இல்லையே, நானாதானே அட்சதையைப் போட்டுக்கொண்டு தேசம், லோகம் பூராவுக்கும் நான் உபதேசம் பண்றவனாக்கும் என்று நினைச்சுப் பாட்டுப் போட்டுத் தந்தேன். அதனாலே இது ஒரு ஸெல்ஃப் பப்ளிசிட்டிக்கு நானா பண்ணிய காரியம்னு ஒருத்தர் நினைக்கிறான்னா அதுல தப்பில்லையே அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கார்னு புரிஞ்சிண்டு இனிமே ஜாக்கிரதையா இருக்கணும்.
லோக சமாதானத்துக்காக ஐ.நா சபையிலே அனைவரும் பயன் பெற வேண்டும் என்று நினைச்சுப் பாட்டு எழுதிக்கொடுத்தற்கு ஒரு அநாகரிகமான விமர்சனம் வந்ததே என்று வருத்தப்படுவது வேதனைப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும் அதைச் சமநிலையோடு எதிர்கொண்டு அதற்குத் தன் செயலை நியாயப்படுத்தி கூற வேண்டும் என்று எண்ணாமல் அந்த அபாண்டத்தைத் தனக்கு ஒரு பாடமா பாவித்துக்கொண்டாரே, சாட்சாத் பரமேஸ்வரனான பெரியவா அவருக்கு இருந்த மனநிலைதான் அடியேனுக்கும் அன்று இருந்தது, அடியேன் மற்றும் அடியேனது குடும்பத்தார் மஹா பெரியவாமீது கொண்டுள்ள அதீதமான பக்தியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இலவசமா ஜோதிடம் சொன்னா இப்படிப்பட்டவா எல்லாம் வரத்தான் செய்வா. கட்டணம் என்றால் இது போன்ற ஆத்மாக்கள் வரமாட்டார்கள் என்று சிலர் கருத்துச் சொன்னாலும் அடியேனது சுபாவத்தை மாத்திக் கொள்ள முடியலையே ஒருவருடைய ஜாதகத்திலே லக்னம் 3, 5ஆம் இடத்தில் உள்ள கிரகங்கள வருடைய மனோபாவத்தை நிர்ணயிக்கிறது. இந்த இடங்களில் குருபகவான் வரப்பெற்றவர்கள் மற்றவர்களைத் துச்சமாக நினைப்பார்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் நினைப்பார்கள். லக்னத்தில் சூரியன், செவ்வாய் வரப்பெற்றவர்கள் புத்திக் கூர்மை உடையவராக இருந்தாலும் அதீதமான கோபத்தால் மற்றவர்களிடம் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வார்கள். லக்னத்தில் 5ஆம் இடத்தில் சனி, ராகு, கேது வரப்பெற்றவர்கள் எவரையும் எளிதில் நம்பமாட்டார்கள். 3, 6, 8, 12ஆம் இடங்களில் சந்திரன் வரப்பெற்றவர்கள், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தாராள குணம் உடையவர்களாக இருப்பார்கள். குணங்களே சுபாவமாகவும் மாறிவிடுகிறது. தன்னுள் இருக்கும் குணங்கள் சரியில்லை என்று உணரும் காலம் வரும்போது அவரவர் சுபாவமும் மாறிவிடுகிறது. அப்படி இருந்தவரா இப்படி மாறிவிட்டார் என்று சொல்றோம் இல்லையா. சக்ரவர்த்தியாய் இருந்த ‘சித்தார்த்தர்’ சன்யாசி கோலம் பூண்டு புத்தரா மாறவில்லையா. திருடனாய் இருந்தவர்தானே வால்மீகி. காலம்தானே அவரைக் காவியம் படைக்க வைத்தது.
கிருஷ்ணசாமி நீங்களும் உங்களை உணர்ந்து மாற வேண்டும் வாழும் நாட்களை அர்த்தம் உள்ளதாகச் செய்துகொள்ள வேண்டும். என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாமா கேட்டார் ஜோஸ்யர்.
“முயற்சி பண்ணாமல் இல்லை மாமா. சொல்லிக்கொண்டே கிளம்பினார்” கிருஷ்ணசாமி ராமசாமியுடன்.
இரவு சாப்பாட்டுக்கு உட்கார்ந்தார் கிருஷ்ணசாமி. வாயில் இரண்டு பிடி சாதத்தைப் போட்டுக் கொண்டதும் மகா கோபம் வந்துவிட்டது.
‘என்னடி இது, சமையல் பண்ணியிருக்கே உப்பும் இல்லை ஒரப்பும் இல்லை வெளியே வாசலிலே படுத்துண்டு இருக்கிற சொரி நாய்கூட இந்தச் சாப்பாட்டை மோந்து பார்க்காது’ உச்சத்தில் கத்தினார் கிருஷ்ணசாமி.
No Comment