தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today -ஜனவரி 2010
தேதியூர் V.J. ராமன்

அலுவலக நிமித்தமாகக் கொச்சின்வரை செல்ல வேண்டியிருந்தது. காலை 7:30 மணி இருக்கும். அலபி எக்ஸ்பிரஸ் திருச்சூரைத் தாண்டிச் சென்றுகொண்டு இருந்தது. என் இருக்கைக்கு எதிரில் உள்ள நபர் ஹிந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். படித்து முடிக்கும்வரை பொறுமையைக் கடைபிடித்த நான் அந்த நபர் படித்த நாளிதழை மடித்து வைக்கும் நேரத்தில்,

‘ஸார் … எக்ஸ்யூஸ் மி… கொஞ்சம் ஹிந்து பேப்பரைத் தர இயலுமா, படித்துவிட்டுத் தருகின்றேன்… என்றேன்.

‘ஸாரி ஸார்… தாங்கள் வேண்டுமானால் அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்கும்போது கடையில் வாங்கிப் படியுங்கள்…! என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறியவதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சிறிது நேரம் முகத்தில் சலனம் இல்லாத நிலையை உணர்ந்தேன். என்ன இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா! என்ற எண்ணம் மனதில் ஓடத்துவங்கியது.

இப்போது என்னுடைய நிலைமை மற்றும் அவரது நிலைமையைப் பற்றிச் சற்றுச் சிந்திப்போம்.

தன்னுடைய பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்க விரும்பாத அவரது சுபாவம், மற்றவர்கள் மனது புண்படும்படியாகக் கூறிய வார்த்தைகள் பயணம் செய்த நண்பரைப் பொருத்தவரை சரியென்றாலும் அவர்மீது எனக்கு வருத்தமோ கோபமோ வரவில்லை. அவருக்கு என்று தனிப்பட்ட குணம், கொள்கைகள் வைத்திருப்பது பல விஷயங்களுக்கு நன்மைதான் என்ற முடிவுக்கு வந்தேன்… என்னைப் பொருத்தவரை இனிமேல் எவரிடமும் இரவல் வாங்கி எதையும் பயன்பெறும் பழக்கத்தை முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தேன். ஒருவருடைய சுபாவம் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையைக் கற்றுக்கொடுக்கின்றது என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை எல்லோரும் ஏற்படுத்திக்கொண்டால் ஜோதிட சாஸ்திரத்துக்கே வேலையில்லாமல் போய்விடும்.

சரி . . . இது போன்ற குணங்கள் ஒருவருக்கு எப்படி வருகின்றன என்று பார்க்கலாம்.

பொதுவாக லக்ன மற்றும் சந்திர கேந்திரங்களில் (1, 4, 7ஆம் இடங்கள்) குரு பகவானோ சூரியனோ தனித்திருக்கும் ஜாதகர்களுக்கு இது போன்ற குணாதிசயங்கள் இருக்கும்.

லக்ன கேந்திரங்களில் மற்றும் பூர்வ புன்யஸ்தானத்தில் (5ம் இடம்) குரு பகவான் தனித்து வரப்பெற்றவர்களுக்கும் இந்த சுபாவம் இருக்கும்.

தனக்கு என்று தனிப்பட்ட கொள்கைகள் உள்ள இவர்கள் எப்போதும் தான் என்ன நினைக்கின்றார்களோ அதையே செயல்படுத்த விரும்புவார்கள். பிறருடைய அறிவுரைகள், ஆலோசனைகள் கொஞ்சமும் பிடிக்காதவர் களாகவே என்றும் இருப்பார்கள். மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று சிறிதும் கவலை கொள்ளமாட்டார்கள். மனம்போன போக்கில் செயல்படும் இவர்களை எவராலும் திருத்தவும் அறிவுறுத்தவும் இயலாமலேயே போகும்.

லக்ன கேந்திரத்தில் குரு பகவானுடன் சூரியன் இணைந்திருக்கும் நிலையில் உள்ள ஜாதகர்கள் பதில் கூறும் விதமே மற்றவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகக்கூட இருக்கும். தகாத வார்த்தைகள், அடக்க முடியாத கோபத்துடன் அள்ளிவீசும் குணம் உடைய இவர்களுக்கு மனம் எளிதில் கட்டுக்குள் வராமலேதான் இருக்கும். தன்னை எந்தக் காலகட்டத்திலும் உணர்ந்தவர்களாக இவர்கள் இருக்கமாட்டார்கள்.

சூரியன் உச்சம் நீச்சம் பெற்றவர்கள், சந்திரன் உச்சம் நீச்சம் அடைந்தவர்கள், 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் சூரியன் வரப் பெற்றவர்கள், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கும் ‘தான்’ என்ற எண்ணம் அதிகம் மேலோங்கியே இருக்கும்.

லக்னது மற்றும் சந்திர லக்னது குரு பகவான் மூன்றாம் இடத்தில் வரப் பெற்றவர்களின் சுபாவம் மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கும். இவர் மற்றவர்களைச் சிறிதும் மதிக்காதவர்களாகவே இருப்பார்கள். எவரையும் எதைப் பற்றியும் லக்ஷியம் செய்யாதவர்களாகவே இருக்கும் இவர்கள் தன் மனமே தனக்கு எஜமானன் என்ற கொள்கை உடையவர்கள். யார் என்ன அறிவுரைகள் கூறினாலும் கேட்பது போல் கேட்டுக்கொண்டு தன் மனம்போன போக்கிலேயே செயல்படுபவர்களாகவே என்றும் இருப்பார்கள்.

மஹா பாரத யுத்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் தலைமாட்டில் துரியோதனும் காலடியில் அர்ஜுனனும் அறிவுரைகள் பெற்ற சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் இருவருக்கும் சமமான அறிவுரைகளையே போதித்தாலும் துரியோதனனைத் தன் மனம்போனவாறு நடக்கச் செய்ததும் பின்பு மாளச் செய்ததும் 3ஆம் இடத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆவார். அவனது மனமே அவனுக்கு எதிராகச் செயல்பட்ட தன் உயிர் இழக்கவும் காரணமாக இருந்தது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

சரி… இப்படிப்பட்ட குணம் உடையவர்கள் திருந்தவேமாட்டார்களா… இவர்களது கிரக நிலைகள் இவர்களுக்கு உதவவே செய்யாதா என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. இது போன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல படிப்பினைகளைப் பெற்றாலும் தன் சுபாவத்தைத் தனது கடைசி காலம்வரை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் உயர்நிலை எழுத்தர் ஒருவர் தினமும் காலை 11 மணிக்குத்தான் அலுவலகம் வருவது என்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். புதிதாக வந்த உயர் அதிகாரி இவரது இந்தச் சுபாவத்தை மாற்றிக் காண்பிப்பதாகத் தனது சக உயர் அதிகாரியிடம் சபதம் போட்டார். மறுநாள் அந்த எழுத்தர் அலுவலகம் வந்ததும் தனது அறைக்கு ப்யூன் மூலம் கூப்பிட்டு அனுப்பினார். உள்ளே நுழைந்த எழுத்தரைப் பார்த்து அதிகாரி சொன்னார்.

‘நீர் இப்படித் தினம் தினம் காலதாமதமாக 11 மணிக்கு அலுவலகம் வருவது சற்றும் சரியில்லை. தாமதமாக வந்ததற்கு 1/2 நாள் லீவு லெட்டர் கொடுங்கள். இதுபோல் தொடர்ந்தால் தினம் லீவு லெட்டர் கொடுக்க வேண்டி வரும்’ என்று எச்சரித்து உடன் லீவு லெட்டரைக் கொடுக்குமாறு பணித்தார். அவரும் பவ்யமாக 1/2 நாளுக்கான லீவு லெட்டரை அதிகாரியிடம் கொடுத்துச் சென்றார். மதியம் இரண்டு மணி அளவில் எழுத்தரைத் தனது அறைக்கு வருமாறு ப்யூன் மூலம் கூப்பிட்டு அனுப்பினார் உயர் அதிகாரி. திரும்பி வந்த ப்யூன் ‘ஸார்… நீங்கள்தான் அவருக்கு 1/2 நாள் லீவு கொடுத்துள்ளீர்களாமே மதியத்துக்கு… வீட்டுக்குச் சென்றுவிட்டார் ஸார்…’

லீவு லெட்டரைப் பார்த்ததும்தான் தெரிந்தது. எழுத்தர் கொடுத்த லீவு லெட்டர் மதியத்துக்கு என்று… காலையில் தாமதமாக வந்ததற்கு லீவு லெட்டர் கொடுக்கச் சொன்னால், கொடுக்கப்பட்டுள்ள லெட்டர் மதியம் 1/2 நாள் லீவுக்கு என்பது அப்போதுதான் புரிந்தது உயர் அதிகாரிக்கு.

தான் புத்திசாலித்தனமாக லீவு கேட்டு வாங்கியதாகப் பெருமைப்பட்டாலும் தன்னைவிடப் புத்திசாலித்தனமாக நடந்துகொண்ட அந்த எழுத்தரைப் பார்த்து வியந்து போனார் உயர் அதிகாரி.

தன்னுடைய சுபாவமான காலதாமதமாக வருவது மற்றவர்களுடைய அறிவுரைகளை மதிக்காமல் இருப்பது போன்ற தனது சுபாவத்தில் இருந்து அந்த எழுத்தர் இன்றுவரை தன்னை மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. மூன்றாம் இடம் வந்துள்ள குரு பகவான் (எழுத்தரின் ஜாதகத்தில்) இப்படியெல்லாம் அவரை நடக்கவைக்கின்றது என்பது ஜோதிடம் அறிந்தவர்களுக்குப் புரியும்.

இப்படி வக்கிரமாகச் சிந்தித்துச் செயல்படும் இவர்கள் தன் நடவடிக்கைகளை சாதனைகளாகவே என்றும் நினைக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட குணம் உடையவர்கள் தன்னைத் திருத்திக்கொள்ள பரிகாரம் ஏதாவது… என்று நீங்கள் கேட்கலாம். எனது பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஸார், என்னுடைய மனைவி மிகவும் அடங்காப்பிடாரியாகவே இருக்கின்றாள்… எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசுகின்றார். பணிவு என்பதே கொஞ்சமும் இல்லை… என்றார். அப்புறம்… என்றேன் நான்.

அப்புறம் என்ன ஸார்… நான் இப்போதெல்லாம் அவளுக்குப் பணிந்து போக ஆரம்பித்துவிட்டேன். மீதி காலம் ஓட வேண்டுமே என்றார் பார்த்தீர்களா… இது போன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் மற்றவர்கள் மாற்றும் சக்தி படைத்தவர்களாகவே என்றும் இருப்பார்கள்… தங்களை என்றென்றும் மாற்றிக்கொள்ள விரும்பாமலே….


Contact Astrologer