செறுப்பை ஹயக்ரீவர் கோயில் வாசலில் விட்டுவிட்டு தரிசனத்துக்கு உள்ளே சென்றார் கிருஷ்ணசாமி.. என்ன இது ஸ்கூல் பசங்க கூட்டமா இருக்கே.. எல்லா பசங்களும் ஸர்வீஸ் வேற செஞ்சுண்டு இருக்கா.. “என்ன பட்டாசார்யரே.. என்ன விசேஷம் இன்னிக்கு… ஸ்கூல் பசங்களெல்லாம் வந்திருக்கா…”

“கோயில்லே வரவா போறவாளுக்கு உதவிகளைச் செஞ்சா படிப்பிலே நல்ல மார்க் வாங்கலாம்னு ஜோஸ்யர் மாமா சொன்னாராம்.. சனி,ஞாயிறு லீவு இல்லையா… அதுதான் கூட்டம்” சொன்னார் பட்டாசார்யர். ஸ்வாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தார் கிருஷ்ணசாமி… வெச்ச இடத்திலே செறுப்பை காணோமே… திருதிருன்னு முழித்துக் கொண்டிருந்த கிருஷ்ணசாமியை யாரோ ‘தாத்தா’ என்று அழைத்த குரல் கேட்டு திரும்பி பார்த்தார்.

‘தாத்தா’ நான்தான்… இங்கே இருக்கு தாத்தா உங்க செறுப்பு… நாங்க வரவாளோடு செறுப்பை எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைச்சு பார்த்துண்டு இருக்கோம்.

பதறிபோனார் கிருஷ்ணசாமி… ‘என்னடா இதெல்லாம்… யார்டா உங்களை இதை யெல்லாம் செய்யச் சொன்னது… போங்கடா வீட்டுக்கு..’ கத்தினார் கிருஷ்ணசாமி.

ஜோஸ்யர் மாமா இந்த மாதிரி ஸர்வீஸ் செஞ்சா நல்ல மார்க் வாங்கலாம்ன்னு சொன்னார்… இன்னிக்கு லீவு தானே தாத்தா… எங்க ஸ்கூல் பசங்க எல்லோரும் வந்திருக்கா… நானும் பக்கத்து வீட்டு குமாரும் இங்கே பாத்துக்கறோம்.

இந்த ஜோஸ்யருக்கு வேற வேலை இல்லை… அவர்தான்ஃப்ரி ஸர்வீஸ் பண்றார்னா பசங்களையும் அது மாதிரி ஸர்வீஸ் பண்ண விட்டுட்டாரே… கோபத்துடன் வீட்டுக்கு கிளம்பினார் கிருஷ்ணசாமி. மாலை ராமசாமியை அழைத்துக்கொண்டு ஜோஸ்யர் வீட்டுக்கு கிளம்பினார் கிருஷ்ணசாமி..

வரவேற்ற ஜோஸ்யர் ‘என்ன கிருஷ்ணசாமி.. ரொம்ப கோபமா இருக்காபோல இருக்கு… மாமி கூட நீங்க அடிக்கடி கோவிச்சுக்கறதா நான் பார்க்கும் போதெல்லாம் சொல்லறாளே… போனவாட்டி வந்த போதே சொன்னேன்… உங்கள்ட்டே நிறைய மாற்றம் வரனும்… என்ன புரிஞ்சுதா..

கிருஷ்ணசாமியிடம் இருந்து பதில் எதுவும் வராததினால் ‘என்ன கிருஷ்ணசாமி… உங்களோட இன்றைய கோபத்துக்கு காரணம் எதுவும் சொல்லலியே.. என்ன விஷயம் சொல்லுங்கோ… ‘கேட்டார் ஜோஸ்யர். ‘என் பேரனை ஏன் கோயில் வாசல்லே ஸர்வீஸ் பண்ணச் சொன்னேள்.. என் கௌரவமே போன மாதிரி இருக்கு.’

‘இது தான் விஷயமா… இரண்டு நாள் முன்னாடி உங்க பேரன் ஸ்கூல்ல என்னைக் கூப்பிட்டு குழந்தைகளுக்கு அறிவுரைகள்… நாலு நல்ல வார்த்தைகள் சொல்லுங்கோன்னு அந்த ஹெட்மாஸ்டர் சொன்னார்.. அதன் விளைவுதான் இது…!

‘இந்த மாதிரி ஸர்வீஸ் செஞ்சா புத்திசாலி ஆகிவிட முடியுமா என்ன…’ கேட்டார் கிருஷ்ணசாமி.

அப்படி இல்லை கிருஷ்ணசாமி… குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் வரனும்… பல பள்ளிகளிலே விடுமுறை காலங்களிலே ஒரு கிராமத்தைச் சுத்தம் செய்யறது சேரிக்குச் சென்று உதவிகளை அங்கு உள்ளவர் களுக்குச் செய்யறது ரோட்டை சுத்தம் பண்றது, மரக்கன்றுகளை நடறதுன்னு குழந்தைகளை அழைத்துப் போய் செய்யறாளே.. ஸ்கௌட், ழிசிசி, போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி மத்தவாளுக்கு உதவனும்னு கேம்ப் நடத்தறாளே… இதெல்லாம் எதற்காக.. ‘உழவாரப்பணி’ என்று எத்தனையோ கோயில்கள்லே உபகார சிந்தனையை வளர்த்து அதன் மூலம் பகவானுடைய அனுக்ரஹத்தை பெறக்கூடிய முயற்சிகள் நடந்து கொண்டுதானே இருக்கு. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் ஒரே நாளில் இரண்டு செய்திகளைப் படித்தேன். ஒன்று திருவல்லிக்கேணியில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அந்த தெருவில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் காட்சியை படம் பிடித்து போட்டிருந் தார்கள். மற்றொன்று தஞ்சை தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் திரு.திருமலைக்கு நடந்த பாராட்டு விழாச் செய்தி. துணை வேந்தர் சொல்றார்…” சிறு வயதில் படித்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது. அக்கோயிலில் சிறு சிறு உதவிகளைச் செய்து வந்தேன். அதன் பயனாகத்தான் எனக்கு இந்த பதவி எவருடைய பரிந்துறையும் இல்லாமல் கிடைத்தது என்று நம்புகிறேன்…”உங்களால் நம்பமுடியலே இல்லையா பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை திட்டுவதையும், ‘பக்கத்து வீட்டு பையன் 90 மார்க் வாங்கி இருக்கிறான்… நீயும் இருக்கியே’ என்று ஒப்பிட்டு பார்த்து திட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். குழந்தைகளிடம் உள்ள திறமையை ஊக்கப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களை உற்சாகப்படுத்தி மேலும் அதிக மார்க்குகள் வாங்க வைப்பது. அல்லது இறை பணிகளைச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி பகவானுடைய அனுக்ரகத்தினால் வெற்றி பெறச் செய்வது. இந்த இரண்டுமே இருந்தால் அந்த குழந்தையால் உயர் மதிப்பெண்கள் நிச்சயம் எடுக்க முடியும். சமீபத்தில் மைசூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொல்றேன் கேளுங்கோ..

மைசூரில் ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் சந்திரமௌலிஸ்வரர் கோயில் உள்ளது. அதன் வாசலில் பள்ளிச் சீறுடை அணிந்த 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி இரவு நேரம் துவங்கிய சமயத்தில் தனியாக நின்று கண்ணீர் சிந்தியவாறு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாள்…

பார்ப்பதற்கு நல்ல குடும்பத்துப் பெண் போன்று தோன்றியதால் அவளைப்பார்த்த சிலர் ‘ஏம்மா இப்படி பிச்சை எடுக்கிறேயே.. என்ன காரணம்..’ என்று கேட்டுள்ளார்கள்..’பள்ளியில் சரியாகப் படிக்காத்தினால் என் தந்தை என்னை பிச்சை எடுக்க வைத்துள்ளார்.. அதோ.. அந்த காரில் உட்கார்ந்து கொண்டு என்னை கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார் பாருங்கள்..’ என்று சொல்லியுள்ளாள். ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் அந்த கொடூரமான எண்ணம் கொண்ட தந்தையை போலிஸில் ஒப்படைத் துள்ளார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று போலீஸ் கேட்டதற்கு ‘எவ்வளவோ முயற்சித்தும் என் மகள் படிக்கவில்லை… படிக்காவிட்டால் பிச்சை எடுக்கும் நிலைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்பதை உணர்த்தவே இப்படிச் செய்தேன்..’ என்றாராம். சட்டம் அவருக்கு உரிய தண்டனையை கொடுத்தது என்றாலும் இப்படிப் பட்ட செயல் அநாகரிகமானது இல்லையா.. நமது ஹிந்து தர்மத்தில் சொல்லப் பட்ட பரிகார தர்மங்களை கடைபிடித்து இருக்கலாமே’

‘எப்படி.. என்ன பரிகாரம் செய்ய இயலும்…’ ‘கேட்டார் கிருஷ்ணசாமி

‘உம்முடைய பேரனுக்குச்சொல்லி கோயிலில் சிரமதான கைங்கரியம் பண்ணச் சொன்னேனே… அதேமுறைதான்…’

‘இப்படி கோயில்களிலே கைங்கரியம் செய்தால் படிப்பு வந்துடுமா…’ மறுபடியும் கேட்டார் கிருஷ்ணசாமி

‘நிச்சயமா… நமக்கு ஏற்படும் ஒவ்வொரு விதமான சங்கடங்களுக்கும், தேவைகளுக்கும் பகவானிடம்தானே பரிகாரம் தேடறோம்… அது போலத்தான் இதுவும்.. இதே போன்ற இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்றேன் கேளுங்கோ…

நீதித்துறை தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள டில்லி வந்த பாக்கிஸ்தான் துணை அட்டர்னி ஜெனரல் முகமது குரிஷித்கான் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குச் சென்று அங்கு வரும் பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்து பாலிஸ் செய்து கொடுத்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘பக்தர்களுக்குச் செய்யும் சேவையே பகவானுக்குச் செய்யும் தொண்டே அந்த பரந்தாமனுக்குச் செய்யும் தொண்டாக நினைக்கிறோம் இல்லையா…

‘இதை அவர் சேவையாகத்தானே செய்கிறார்.. பரிகாரம் என்று சொல்ல இயலுமா…’கேட்டார் ராமசாமி.

‘இதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா’ என்று பத்திரிக்கை நிருபர்கள் கேட்டுள்ளார்கள். தன் இனத்தைச் சேர்ந்த முகமதியர்கள் சீக்கியர்களுக்கு நிறைய கொடுமைகளைச் செய்துள்ளாரகள். கொலைகளையும் செய்துள் ளார்கள். கொலை செய்வதை இஸ்லாம் வன்மை யாகக் கண்டித்தாலும் இது போன்ற துயர சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதானே இருக்கின்றது. என் குடும்பத்தாராலும் இது போன்ற பாபச் செயல்கள் செய்யப்பட்டுள்ளன… எனது சமுதாயத்தார் செய்யும் பாபச் செயல் களுக்காவும் எனது குடும்பத்தார் செய்த கொடுமைகளுக்காகவும் நாம் இங்கே பரிகாரம் தேடுகிறேன்.. இப்படிச் செய்யும் பரிகாரம் எனக்கு மன நிம்மதியைத் தருகின்றது…’ என்றாராம் பரிகாரம் என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒன்று. இதைச் சேவை என்று சொன்னாலும் காரணம் ஒன்று கருதிற் செய்யப்படுகின்றது என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய எந்த செயலுக்குமே அது பாப கர்மாவாகவே இருந்தாலும் சரி, பூர்வ கர்மாவினால் ஏற்படும் தடைகளோ, தாமதமோ, பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும் சரி பரிகாரம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. பகவானுக்குச் செய்யும் பரிகாரங்களால் நமக்கு பிரதி உபகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் எல்லா மதத்தினர் இடையேயும் பொதுவாக நிலவி வருகிறது. ‘என் பேரனுக்கும் பகவான் அனுகிரகம் செய்வார் என்கிறீர்களா…’ ஆதங்கத்துடன் கேட்டார் கிருஷ்ணசாமி.

‘எந்த பரோபகாரத்துக்கும் நற்பலன்கள் கிடைக்காமல் போகாது கிருஷ்ணசாமி… இந்த பரோபகார சிந்தனை மனஸ்காரகனான சந்திரன் நீச்சம் பெற்றுள்ள விருச்சக ராசி காரர்களுக்கும் 3,6,8,12ம் இடங்களில் மறைவிடம் பெற்றவர் களுக்கும் மட்டுமே அதிகம் இருக்கும். உம்முடைய பேரனுக்கும் ஹயக்ரீவருடைய அனுக்ரகம் பூர்ணமாக நிச்சயம் கிடைக்கும். விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள் இருவரும். மறுநாள் ஒரு கல்யாணத்துக்கு கிளம்பி னார்கள் கிருஷ்ணசாமியும் மாமியும். கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

‘என்னது.. என் செறுப்பை யாரோ போட்டுக் கொண்டு போய்விட்டு அதே மாதிரியான புத்தம் புதிய செறுப்பை உங்களுக்காகவே விட்டு விட்டு போயிருக்கார் பாருங்கோ… எடுத்து மாட்டிண்டு நடங்கோ…’ உத்தரவு போட்டாள் மாமி.

‘நானும் புது செறுப்பு வாங்கனும்னுதான் ரொம்ப நாளா யோஜிச்சுண்டு இருந்தேன். பகவானே கொடுத்துட்டார்…’ ‘சொல்லிக் கொண்டே புதிய செறுப்பை மாட்டிக்கொண்டு நடந்தார் கிருஷ்ணசாமி இருந்தாலும் தான் செய்யும் இந்த காரியம் சரியில்லை என்று மட்டும் தோனியது அவருக்கு.

‘ஹயக்ரீவர் கோயில் திறந்து இருக்கே… பகவானை பார்த்துட்டே போகலாம்…’ என்று சொல்லியபடியே வாசலில் புதிய செறுப்பை விட்டுவிட்டு உள்ளே இருவரும் நுழைந்தார்கள். தரிசனம் முடிந்து திரும்பி வந்த கிருஷ்ண சாமிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. புதிய செறுப்பை வைத்த இடத்தில் தனது பழைய செறுப்பு இருப்பதை பார்த்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம் சற்று தூரத்தில் பெரியவர் ஒருவர் பேசிக்கொண்டு போவது காதில் விழுந்தது. ‘பகவான் எந்த மகானுபாவன் மூலமாகவோ என்னோட புதிய செறுப்பை என்னுடன் சேர்பிச்சுட்டார்.. க்ஷேமமா இருக்கனும் அந்த புண்ணியவான்…’

‘நாம் ஒன்று நினைக்க பகவான் ஒன்று நினைச்சுட்டாரே.. அவர் அவர்களுக்கு சேர வேண்டியதை யார் மூலமாவது சேர்த்துடரானே… மனதுக்குள் தான் செய்த காரியம் தவறு என்று தோன்றினாலும் எனது உடம்பு ஒரு நல்ல காரியம் செஞ்சுருக்கு. என்னையும் அறியாமல் நல்ல காரியம் ஒன்று இன்னிக்கு செஞ்சு இருக்கேனே’ என்று சந்தோஷப்பட்டார் கிருஷ்ணசாமி.

‘பரோபகாரம் இதம் சரீரம்’ ன்னு ஜோஸ்யர் மாமா அடிக்கடி சொல்வது ஞாபகத்துக்கு வந்தது கிருஷ்ணசாமிக்கு.


Contact Astrologer