தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஆகஸ்ட் 2011
தேதியூர் V.J. ராமன்

ஸ்வாமி பிரம்மானந்தாவின் “கீதாசாரம்” உபன்யாஸம் கேட்க ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வழக்கம் போல் கிளம்பினார்கள்.

“ராமசாமி… கொஞ்சம் வேகமா நடையைப்போடு. கொஞ்சம் லேட்டானாலும் நம்முடைய ஸீட் போய்விடும்” பறந்தார் கிருஷ்ணசாமி.

ஹாலில் நுழைந்ததும் கிருஷ்ணசாமிக்குச் சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் வழக்கமாக உட்காரும் ஸீட்டில் வேறு இருவர் இருந்ததே அதற்குக் காரணம். இருந்தாலும் கிருஷ்ண சாமிக்குத் தன் இடத்தை விட்டுக்கொடுக்க மனமில்லை. முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த அந்த நபர்களைப் பார்த்து… “சார்… தப்பா நினைக்கல்லேன்னா இது நாங்கள் வழக்கமா உட்கார ஸீட்… நீங்கள் கொஞ்சம் தள்ளி அதோ, அந்த காலியான ஸீட்டில் உட்கார முடியுமா”.

ராமசாமி என்ன சொல்லியும் கிருஷ்ண சாமிக்குத் தன்னுடைய வழக்கமான ஸீட்டை விட்டுக்கொடுக்க மனமில்லை. இந்த இரட்டையரைப் பார்த்ததும் புதிய மனிதர் இருவரும் சற்று முறைத்தவாறே வேறு இடம் சென்று அமர்ந்தார்கள்.

உபன்யாஸம் ஆரம்பிக்கும் முன் யாருக்காவது என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம் என்றார் பிரம்மானந்தா.

கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே என்கிறாரே கிருஷ்ணர். எப்படி அப்படி இருக்க இயலும்? கேட்டார் ராமசாமி

சரியாகக் கேட்டீர்கள். உங்கள் பெயர் என்ன. ராமசாமியா… இதோ பாருங்கள் ராமசாமி. உங்கள் பையன் உங்களோடு இருக்கானா. தனியா இருக்கானா.

தனியாகத்தான்… கல்யாணம் ஆகி அமெரிக்காவிலே இருக்கான். ஒரு பிரயோஜனமும் இல்லை.

“இப்போ உங்கள் மனைவி ஆகட்டும், நீங்களாகட்டும் சின்ன வயது முதல் அவனை வளர்க்கும்போது பிற்காலத்தில் உங்களைக் காப்பாற்றப்போகிறான் என்று வளர்த்தீர்களா… அல்லது உங்களது கடமையைச் செய்தீர்களா…”

“கடமையைதான் செய்தோம்”

“பார்த்தீர்களா… பலன் கருதிச் செய்யும் எந்தச் செயலுமே 100/100 சதவிகிதம் சரியாக நடைபெறுவதே இல்லை ராமசாமி. காரணம் கவனம் முழுவதும் பலன் மேலேயே இருக்கிறது. பலன் உனக்கு வேண்டாம், கிடையாது என்று கீதை சொல்லவில்லை. பலனில் பற்று வைக்காதே என்றுதான் சொல்கிறது. காரணம் பலனில் பற்று வைப்பவர்கள் அதர்மமான செயலையும் செய்வார்கள். சூதாட்டம், லஞ்சம் எல்லாமே எதிலிருந்து வந்தது என்று நினைக்கிறீர்கள். பலன் மீதுள்ள பற்றுதல். பணம்தான் எல்லாச் செயல்களுக்கும் பலன் என்றால் அந்தப் பலன் மீதுள்ள பற்று தீய செயல்களைச் செய்யும்படி மனத்தைத் தூண்டிவிடுகிறது. உங்கள் மனைவி காலை முதல் இரவு வரை உங்களுக்கு சிசுரூஷை செய்கிறாளே. பலனை எதிர்பார்த்தா செய்கிறாள். இது அவளுடைய பதிவிருதா தர்மம். உங்கள்மீதுள்ள நேசம். நீங்கள் அவள்மீது காட்டும் பாசம். இது அல்லவா அவளையும் உங்களையும் உங்களது கடமைகளை மகிழ்ச்சியோடு செய்ய வைக்கிறது. இந்த பரஸ்பர அன்புதான் நான் என்கிறார் கிருஷ்ணன். இதுதான் வாழ்க்கை ரகசியம். இதைத்தான் கர்ம யோகம் என்கிறது கீதை.

உபன்யாஸம் முடிந்து இருவரும் கிளம்பினார்கள்.

“ராமசாமி… கொஞ்சம் VIP ஷோரூம் வரை போய் வரலாமா. ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் போகணும். பார்யாள் ஒரு சூட்கேஸ் வாங்கின்டு வரச் சொன்னா…”

“கீதாசாரத்தின் பலன் உடனே தெரிகிறதே. என்னே கடமை உணர்ச்சி கிருஷ்ணசாமி உங்களுக்கு… பார்யாள் சொல்லுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது.”

VIP ஷோரூமில் க்ரே கலர் சூட்கேஸ் ஒன்றைப் பொறுக்கி எடுத்தார் கிருஷ்ணசாமி. பில்லைப் பெற்றுக்கொண்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பினார்கள்.

“என்ன கலர் சூட்கேஸ் இது… வேறு கலரே உங்கள் கண்ணுக்குப் புலப்படலையா. இந்த அழுக்கு கலர்தான் உங்களுக்குப் பிடிச்சதாக்கும்.” வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமா சத்தம் போட்டாள் கிருஷ்ண சாமியின் பார்யாள்.

“இதோ பார் மீனாக்ஷி. நீ சொன்னே. நான் வாங்கிண்டு வந்தேன். எனக்கு இந்த கலர் பிடிச்சது வாங்கினேன். அவ்வளவுதான்…” தன் பங்குக்குக் கத்தினார் கிருஷ்ணசாமி.

மறுநாள் இரட்டையர் இருவரும் ஜோஸ்யரைப் பார்க்கலாம் என்று கிளம்பினார்கள்.

“வாங்கோ… வாங்கோ…” வரவேற்றார் ஜோஸ்யர்.

முதல் நாள் கீதாசார நிகழ்ச்சியைப் பற்றி இருவரும் விவரித்தார்கள்.

கீதை முழுவதுமே பற்றுதலைப் பற்றி… அதாவது ஒன்றின்மீது நாம் வைக்கும் அதீதமான ஆசையைப் பற்றியே சொல்லப்பட்டுள்ளது. எதுவுமே நமக்கு சாச்வதம் இல்லை. அந்த பரப்பிரம்மமே நிலையான ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும் என்றே கீதா ஸ்லோகங்கள் சொல்கின்றன. பற்றுதலை ஒழித்தால் ஒழிய மோக்ஷ நிலையை ஒருவரால் அடைய இயலாது.

கிருஷ்ணசாமி… நேற்று செய்த செயலைச் சற்று யோஜித்துப் பாருங்கள். நாற்காலிக்காக சபாவிலே வாக்குவாதம் செய்தீர்களே. முதல் நாள் யாரோ உட்கார்ந்து இருந்த நாற்காலியில் இது உங்கள் சீட் என்று சொந்தம் கொண்டாடினீர்களே. வேறு நிகழ்ச்சி மறுநாள் அங்கு நடக்கும்போது வேறு யாரோ அதில் உட்காரப் போகிறார்கள் இல்லையா… கொஞ்சம் யோஜித்துப் பார்த்தால் இறைவனது சிருஷ்டியில் எல்லாமே வேடிக்கைதான். இன்று உங்களுடைய பார்யாள் போன ஜென்மத்திலும் உங்களுடைய மனைவியாக இருந்தாள் என்று சொல்ல முடியுமா. அல்லது அடுத்த ஜென் மத்தில் நீங்கள் அவளுக்குப் புருஷனாக வரப்போகின்றீர்கள் என்று சொல்ல முடியுமா. இன்று உங்களுடையது நேற்றும் சரி நாளையும் சரி யாருடையதோ என்று சற்றுச் சிந்தித்தாலே இந்தப் பற்றற்ற நிலை வந்துவிடும். இன்று நீர் இருக்கும் வீட்டை உங்கள் ஆவி கூட்டைவிட்டு வெளியே போனால் சொந்தம் கொண்டாட முடியுமா. உங்கள் வீடு, உடல் இந்த இரண்டு கூடுகளுமே உங்களுக்கு என்றுமே சாச்வதம் இல்லை. இதையேதான் திரும்பத் திரும்ப கீதாசாரம் வெவ்வேறு விதமாக ஸ்லோகங்கள் மூலம் நம்மைத் தெளிவுபடுத்துகின்றது.

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் 3ஆம் இடம் மற்றும் 12ஆம் இடங்கள் பற்றுதலையும் பற்று அற்ற நிலையையும் சொல்கிறது. 3ஆம் இடத்தின் அதிபதி 12ஆம் இடத்திலும், 12ஆம் இடத்தின் அதிபதி 3ஆம் இடத்திலும் பரிவர்த்தனை யோகத்துடன் கூடிய ஜாதகர்கள் பற்று அற்ற நிலையை வாழ்க்கையில் உணர்ந்தவர்களாக இருப்பார்கள். லக்னம், 3, 7ஆம் இடங்களில் சுபகிரகங்களான குரு, சுக்ரன், சந்திரன், புதன் வரப்பெற்றவர்கள் எல்லாவற்றின் மீதும் ஆசை, பற்று உடையவராகவே இருப்பார்கள். 7ஆம் இடத்தில் சுக்ரன், சூரியன், ராகு வரப்பெற்றவர்கள் இல்லற சுகத்தில் அதிகம் பற்றுதலை உடையவராக இருப்பார்கள். 12ஆம் இடமான மோக்ஷ ஸ்தானத்தில் கேது, குரு, சனிஸ்வரன் வரப் பெற்றவர்கள் இந்த உலக சுகங்களைப் பெரிதும் விரும்பாதவர்களாகவே இருப்பார்கள். 3ஆம் இடத்தில் குருபகவான் வரப்பெற்றவர்கள் தங்கள் சகோதரர்கள் பந்துக்களை அதிகம் நேசிப்பவராகவும் இருப்பார்கள்.

ஒன்றை எதிர்பார்த்தே இந்தப் பற்றுதல் எல்லோருக்கும் வருகின்றது. எதிர்பார்ப்புகள் இருக்கும்வரை ஏமாற்றங்களும் தொடரும் என்பது உலக நியதி. எதுவுமே என்னுடையது இல்லை என்பதைப் புரிந்துகொண்டால் அந்தப் பரப்பிரம்ம ஸ்வரூபத்தை உணர்ந்துவிடலாம். இன்று உங்களுடையது நாளை நிச்சயம் வேறு ஒருவருடையதாகவே இருக்கும். ஆனால் அந்தப் பரப்பிரம்மம் மட்டும்தான் என்றுமே உங்களுடையதாகவே உங்கள் உள்ளேயே இருக்கும். நான், என்னுடையது, எல்லாமே மாயை… எல்லாமே அவன்தான். அவனுடையதுதான் என்பதைப் புரிந்துகொண்டால் மனம் லேசாகிவிடும். இதை உங்களுக்கு அனுபவங்கள் புரியவைக்கும்.

“ரொம்ப சந்தோஷம் ஜோஸ்யர்வாள். நாளை பெங்களூருக்குப் போறேன்… போயிட்டு வந்ததும் உங்களைச் சந்திக்கிறேன்” சொல்லிக் கொண்டு கிளம்பினார் கிருஷ்ணசாமி. ராமசாமியும் அவரைப் பின்தொடர்ந்தார்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. விண்டோ கார்னர் சீட்களில் எதிரும் புதிருமாக உட்கார்ந்தனர் கிருஷ்ணசாமி தம்பதியர்.

உலகத்திலே எதுவுமே யாருக்குமே நிரந்தரம் இல்லை. இன்று உன்னுடையது. நாளை யாருடையதோ மாயவலையில் சிக்கித்தவிக்கிறதே இந்த மனம். என்னமா புரியவைத்தார் ஜோஸ்யர்.

ஏன்னா… என்ன தனக்குத்தானே பேசிக்கிறேள்.

ஒன்னுமில்லே… சீட்டைப் பார்த்துக்கோ… டாய்லெட் போயிட்டு வரேன்.

திரும்ப வந்த கிருஷ்ணசாமி தன் சீட்டில் வேறு யாரோ உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார்.

சார்… அது என்னோட சீட்…

“சாரி சார்… போன வாரம் பெங்களூர் போனபோது இதே சீட்டிலேதான் உட்கார்ந்து இருந்தேன்… அந்த ஞாபகத்தில் தவறுதலா … சாரி சார்…” எழுந்து வழிவிட்டார் அந்த ஆசாமி.

போன வாரம் உங்க சீட்… இந்த வாரம்… கீதாசாரம் ஏதோ புரியற மாதிரி இருக்கே..

ட்ரெயின் கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் நின்றது. முக்கால்வாசி ட்ரெயின் காலியானது.

“மீனாக்ஷி… அதோ பார்… நம்மகிட்டே இருக்கிறப்போல க்ரே கலர் சூட்கேஸ் அவரும் எடுத்துண்டு போறார் பார்… போயும் போயும் இந்த கலரா உங்களுக்குப் புடிச்சதுன்னு கேட்டியே எத்தனை பேருக்கு இந்த கலர் புடிச்சிருக்கு பார்த்தியா.”

“ம்… ம்… முக்கால் தூக்கத்தில் தலையாட்டினாள் மீனாக்ஷி”

சிட்டி ஸ்டேஷன் வந்தாச்சு.. இறங்கணும். “எங்கேடி நம்ம சூட்கேஸ்”

“கண்டோன்மெண்ட் வரைக்கும்தான்…” தூக்கக் கலக்கத்தில் சற்றே பிதற்றினாள் மீனாக்ஷி. “இல்லே கண்டோன்மெண்டிலேயே இறங்கி இருக்கலாமென்று… சூட்கேஸை எடுத்துக்கலையா…”

அதுதான் சொன்னியே கண்டோன்மெண்ட் வரைக்கும்தான்னு… பரப்பிரம்மமாகக் காட்சி அளித்த மீனாக்ஷியின் வாயிலாக கீதாசாரம் முழுமையாகவே புரிந்தது கிருஷ்ணசாமிக்கு.

இப்போ பாரம் கையிலும் இல்லை… மனசிலும் இல்லை என்பதை உணர்ந்தார் கிருஷ்ணசாமி.


Contact Astrologer