தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஜூலை 2010
தேதியூர் V.J. ராமன்

மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் எவரும் இந்த உலகில் இருக்கமாட்டார்கள் என்று சொல்லலாம். குழந்தைப் பருவம் முதலே இந்த அற்ப ஆசை தொடங்கி பெரியவர்கள் ஆகும்போது மாறுபட்ட விதத்தில் இந்த ஆசை பரிணமிக்க ஆரம்பித்துவிடுகின்றது. மற்றவர்களின் பொருளை எடுப்பது, மறைத்து வைத்துக்கொள்வது போன்ற எண்ணங்கள் நம்மைச் சிறுவயது முதலே ஆட்கொள்ளத் துவங்கிவிடுகின்றன.

அன்றும் வழக்கம்போல் கிருஷ்ணசாமியைச் சந்திக்கப் புறப்பட்டார் ராமசாமி. மிகவும் குதூகலத்தில் இருந்த கிருஷ்ணசாமியைப் பார்த்தும் ராமசாமிக்கு ஒன்றும் புரிபடவே இல்லை.

என்ன கிருஷ்ணசாமி… முகத்தில் ஏக சந்தோஷம். என்ன விஷயம்.

“ராமசாமி… கொஞ்சம் மெதுவாய்ப் பேசு. கோயிலுக்குப் போய் வந்தப்போ வழியிலே ஒரு புத்தகம், புதிய வாட்ச்… அக்கம்பக்கம் பார்த்தேன். யாரும் இல்லை. எடுத்து வந்துவிட்டேன். இதோ பாரேன் . . .”

இதற்குத்தான் இந்தக் குதூகலமா… தவறவிட்டவன் வருத்தப்படமாட்டானா.

“நல்ல வாட்ச் இல்லையே என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். பகவானாப் பார்த்துக் கொடுத்துள்ளார்.” பெருமிதப்பட்டுக் கூறினார் கிருஷ்ணசாமி.

“இருந்தாலும் இது திருட்டுக்குச் சமானம் இல்லையா . . .” சற்று இழுத்தப்படி சொன்னார் ராமசாமி.

“கிருஷ்ணன் வெண்ணையைத் திருடுவது, ராமாயணத்தில் யாரும் இல்லா நேரத்தில் ராவணன் சீதையை அபஹரித்துச் சென்றது. இப்படி புராணங்களில்கூடத் திருட்டுச் சம்பவங்கள் நியாயப்படுத்தப்பட்டுள்ளனவே.” கிருஷ்ணசாமியின் விளக்கம் ராமசாமியைச் சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“சரி, சரி. வா. நான் இங்கு வந்ததே உன்னோடு ஜோஸ்யராத்துக்குப் போய் வரத்தான். அவரிடமே இது பற்றியும் கேட்கலாம்” என்றார் ராமசாமி.

ஜோஸ்யர் கிருஹத்தை அடைந்ததும் கிருஷ்ணசாமி கேட்ட கேள்வி நான் செய்தது தப்பா என்பதுதான்.

ஜோஸ்யர் விளக்கம் அளிக்கத் தயாரானார்.

உச்சி வெயில் . . . சன்னியாசி ஒருவர் மிகுந்த களைப்புடன் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். வெளியில் யாரோ இருப்பதைப் பார்த்த அந்த எஜமானன் “ஸ்வாமி களைப்பாய் இருக்கின்றீரே. கொஞ்சம் உணவு அருந்திச் செல்லலாமே” என்றார்.

இருந்த களைப்பில் மறுபேச்சு இல்லாமல் சன்னியாசியும் சாப்பிட அமர்ந்தார். சாப்பிட்டு முடிந்ததும் கைகால் அலம்புவதற்காக வைக்கப்பட்டிருந்த சொம்பினால் அலம்பிவிட்டு ஏதோ ஒரு ஞாபகத்தில் சொம்பினைத் தனது பையிலே போட்டுக்கொண்டார். விடைபெற்றுக்கொண்டு சிறிது தூரம் போனவர், “அடடா… இந்தச் சொம்பை எடுத்து வந்துவிட்டோமே. இந்த அற்ப குணம் எனக்கு எப்படி வந்தது” என்று சற்று வியந்துபோனார். சாப்பிட்ட வீட்டை மறந்துபோனவர் அடையாளம் சொல்லி ஒருவரிடம் விசாரித்தார்.

“அடடே . . . அந்தத் திருட்டு கந்தசாமி வீடா. அதோ மூன்றாவது வீடு . . .” என்றபடி நகர்ந்தான் அந்த ஆசாமி.

சன்னியாசிக்கு இப்போது உண்மை புலப்பட்டது. திருடி வந்த அரிசியில் சமைத்த சோறு சாப்பிட்டதன் பலனா இது. உணர்ந்துகொண்டார் சன்யாசி. என்றாலும் பசியால் இருந்த எனக்கு உணவு அளித்ததற்குப் புண்ணியம் அவனுக்குக் கிடைக்கும் என்று எண்ணியபடியே சொம்பை அவன் வீட்டு வாசலில் வைத்துவிட்டு நகர்ந்தார் சன்யாசி.

இப்படி நம்மையும் அறியாமல் செய்யும் காரியங்கள்கூடத் திருட்டு என்றுதான் சொல்லவேண்டி உள்ளது. நீர் செய்ததும் இதுபோன்ற செயல்தான்… என்றார் ஜோஸ்யர்.

“ஜோதிட ரீதியாக இந்தக் குணம் ஒருவரிடம் இருக்கும் என்று சொல்ல இயலுமா . . .” கேட்டார் கிருஷ்ணசாமி.

ஒருவரது ஜாதக ரீதியாக லக்னம் என்பது உடம்பைப் பற்றிக் கூறும் இடம். 5ஆம் இடம் என்பது புத்தி ஸ்தானம் எனப்படும் நமது புத்தியின் செயல்பாட்டை விவரிக்கும் இடம். 6ஆம் இடம் திருட்டைப் பற்றிக் கூறும் இடம்.

லக்ன கேந்திரத்தில் சனிச்வரன் இருந்தாலோ, இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சனிச்வரன் தனித்தோ அல்லது புதன் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலோ, 5ஆம் இடமான புத்திஸ்தானத்தில் சனிச்வரன், சந்திரன், புதன், கேது இருந்தாலோ, சனிச்வரன், சந்திரன், புதன் நீச்சம்பெற்று இருந்தாலோ இந்தக் குணம் பெரும்பாலும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அமாவாசையில் பிறந்தவர்களுக்கு இந்தக் குணம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. 6ஆம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்யும்காலங்களில் தனத்தையும் பொருட்களையும் உடைமைகளையும் இழக்கும் காலமாக எல்லோருக்கும் அமையும்.

மேற்சொன்னவாறு கிரக நிலைகள் இருப்பதினால் ஒருவருக்குக் கடைசிவரை இந்தக் குணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் மற்றவர்களது பொருளைத் தான் அபஹரித்துக் கொண்டவர்களாக நிச்சயம் இருப்பார்கள். இதேபோல் தனது பொருட்களை, தனத்தை ஒரு காலக் கட்டத்தில் இழக்கவும் இதே கிரகங்கள்தாம் உதவுகின்றன. ஒருவருடைய இழப்பு மற்றவர்களுக்கு சாதகமாகவும் இருக்க இறைவன் உதவுகின்றார் என்று சொல்லுவதைவிட இழந்த ஒருவனது பொருளை மற்றவன் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றான் என்பதை வேடிக்கை பார்ப்பதில் பகவான் மிகவும் விருப்பம் கொள்கிறார். இன்னும் ஒரு விதமாகக்கூடச் சொல்லலாம். ஒருவனுக்குச் சேர வேண்டிய பொருளை, தனத்தை மற்றவர்களுக்குப் பகவான் எப்படிச் சேர்க்கின்றார் என்பதும் வேடிக்கைதான். மற்றுமொரு விதமாகப் பார்த்தால் போன ஜென்மத்தில் ஒருவன் மற்றொருவனுக்குக் கொடுக்க வேண்டிய தொகை இந்த ஜென்மத்தில் அவனால் இழக்கச் செய்து மற்றவனுக்குக் கிடைக்கவும் பகவான் உதவுகின்றார்.

மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவதே திருட்டுதான். அதை நேரிடையாகச் செய்தாலும் மறைமுகமாகச் செய்தாலும் இந்தக் குணத்துக்குப் பரிகாரம் தன்னைத்தானே திருத்திக்கொள்வதைவிட வேறு எதுவும் இல்லை.

“திருட்டையே தொழிலாகக் கொண்டவர்கள் பற்றி என்ன சொல்லுகின்றீர்கள் . . . பரிகாரங்கள் இவர்களுக்குக் கிடையாதா” என்றார் கிருஷ்ணசமி.

சிறிய திருட்டோ பெரிய திருட்டோ . . . திருட்டுக் குணம் உடையவர்களுக்குப் பரிகாரம் ஜோதிட ரீதியாகச் சொல்லப்படவில்லை. மற்றவர்களது அறிவுரைகளும் தனது அனுபவங்களும் சத்சங்கங்களுமே இவர்களது மனதினை மாற்ற இயலும்.

“திருட்டு போன பொருள் திரும்பக் கிடைக்க வழி உள்ளதா.” குறுக்குக் கேள்வி ஒன்றைப் போட்டார் ராமசாமி.

கார்த்த வீர்யார்ஜுன ஹோமம் செய்தால் அல்லது மந்திரத்தை 1008 முறை ஜெபித்தால் இழந்த பொருட்கள் நிச்சயம் திரும்பக் கிடைத்துவிடும்.

கார்த்த வீர்யார்ஜுனோ நாம
ராஜா பாஹு ஸஹஸ்ரவான்|

தஸ்ய ஸமஸ்மரணா தேவ
ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே||

மேற்சொன்ன மந்திரத்தை நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் ஜெபித்தால் உடன் பலன் கிடைத்துவிடும்.

நன்றி கூறிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

மனதில் சற்றுக் குற்றவுணர்வுடன் வீடு திரும்பினார் கிருஷ்ணசாமி.

“என்னா . . . எங்கே போயிட்டேள் இத்தனை நாழி . . . உங்கள் பேரன் செஞ்ச காரியத்தைப் பார்த்தேளா . . . யாருடையதோ, பாதி சீவின பென்சிலை எடுத்துண்டு வந்திருக்கான் . . . எடுத்துண்டு வந்ததுதான் வந்தானே . . . முழு பென்சிலா எடுத்துண்டு வரப்படாதாடா”ன்னு திட்டிண்டு இருக்கேன்.

தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணசாமி. பிரபல நடிகர் நடித்த படத்தின் பாடல் டிவியில் ஒலித்துக்கொண்டிருந்தது . . .

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது . . .

அவசர அவசரமாய் வெளியில் கிளம்பினார் கிருஷ்ணசாமி. வழியில் கிடைத்த கடிகாரத்தைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் . . .


Contact Astrologer