தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today -ஜூன் 2010
தேதியூர் V.J. ராமன்

“என்ன ராமசாமி… விஷயம் தெரியுமா உனக்கு.” பீடிகையுடன் ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.

“என்னப்பா… என்ன அப்படி பெரிய விஷயம் சொல்லப் போறே…” ஆர்வத்துடன் கேட்டார் ராமசாமி.

“நடுத்தெரு குப்புசாமி ஐயர்வாள் இருக்காரே. அவர் பெண் நேற்று இதராள் பையன் ஒருவனை இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டாளாம்… எல்லாம் ப்ராரப்த்த கர்மா” என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணசாமி.

“ப்ராரப்த கர்மா என்கிறீயே கிருஷ்ணசாமி… அப்படின்னா என்னன்னு தெரியுமா உனக்கு.”

“பூர்வ ஜென்மத்திலே பண்ணின பாபம்தான்… என்ன பாபம் பண்ணினாரோ குப்புசாமி.” அங்கலாய்த்தார் கிருஷ்ணசாமி.

“அப்படி இல்லை கிருஷ்ணசாமி… இதனுடைய சரியான விளக்கத்தை ஜோஸ்யர் ராமனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் வா…”

இருவரும் ராமன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

“நமஸ்காரம்… தினம் உங்களைப் பார்க்லேன்னா எங்களுக்கும் அந்த நாள் நன்றாகப் போனதா தோணலே… இன்றைக்கும் பெரிய சந்தேகத்துடன் வந்துள்ளோம்…” ராமசாமி ஆரம்பித்தார்.

“சொல்லுங்கோ… என்ன சந்தேகம்.”

நடந்ததைச் சொல்லி கிருஷ்ணசாமி ப்ராரப்த கர்மாவுக்கு விளக்கம் கேட்டார்.

உங்க ரெண்டு பேருக்கும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்கின்றேன். அதைக் கேட்டால் உங்களுக்கே ப்ராரப்தத்தின் அர்த்தம் புரியும்.

“அந்தக் காலம். எனது தகப்பனார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த காலம். சதுர் வேதங்களையும் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும் ஸ்ரீவித்யா உபாஸகராக இருந்தாலும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை வந்துவிட்டது. எங்க ஊருக்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில் திருமருகல் என்று ஒரு கிராமம். அந்த ஊர் பெரிய மனுஷர் ஒருத்தர் எனது தகப்பனாரிடம் உபதேசம் வேண்டி வந்தார். நாங்கள் இருந்த நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் உபதேசம் பெற்றுக் கொண்டு தன் ஊர் சென்றதும் ஒரு மூட்டை அரிசியைச் சாப்பாட்டுக்காக அனுப்பிவைத்தார். அதை குரு தக்ஷிணை என்றும் வைத்துக் கொள்ளலாம். அல்லது நாங்கள் படும் கஷ்டத்துக்கான பரிவு என்றும் வைத்துக் கொள்ளலாம். காலம் ஓடியது. நான், எனது தம்பிகள் சென்னைக்கு வந்து நல்ல நிலைமைக்கு வந்தோம். இரண்டு மூன்று பிஸினஸ்… தன்னுடைய ஜோதிஷ ஞானத்தால் எனது தகப்பனாரும் ப்ரபலமானார். பல லக்ஷங்கள் புரளும் பிஸினஸ் ஒகோ என்று நடந்து கொண்டிருக்கும் நேரத்திலே திருமருகல் பெரிய மனிதர் எனது தகப்பனாரை ஒருநாள் திடீரெனச் சந்தித்தார்.

“சாஸ்திரிகளே… நான் இப்போ கொஞ்சம் கஷ்டத்திலே இருக்கேன். பிஸினஸுக்கு ரெண்டு லக்ஷம் பணம் தேவைப்படுகின்றது. உங்கள் பையன்கள்தான் இப்போ நல்ல பிஸினஸ் செய்கிறார்களே. இந்த உதவி செய்தால் 24% வட்டியுடன் ஆறு மாதத்தில் திருப்பித் தந்துவிடுகிறேன்.

“அப்பா அவரது பேச்சை முழுமையாக நம்பினார். நான் கஷ்டப்பட்ட காலத்திலே நீ உதவினே. இப்போ உனக்கு உதவலேன்னா நாம் மனுஷனே இல்லை. பையன் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லி ரெண்டு லக்ஷம் வாங்கிண்டு போ…

“அவ்வளவுதான்… இரண்டு லக்ஷம் பணம் வாங்கிண்டு போனவர் போனவர்தான். இன்றுவரை திரும்பிப் பார்க்கவில்லை. சாகும்போது என் தகப்பனார் சொன்னார். ஒரு மூட்டை அரிசி 20 வருடம் முன் கொடுத்தானே… அதற்கு விலை ரூபாய் இரண்டு லக்ஷம் என்று வெச்சுக்கோடா… அவனைப் போய் பணம் எதுவும் கேட்காதே ப்ராரப்தகர்மாடா… போன ஜென்மத்திலே நாம் அவனுக்குக் கொடுக்க வேண்டிய பணம் அது. இந்த ஜென்மத்திலே வட்டியுடன் வாங்கிக் போய்விட்டான்…”

“ஆக ஒருவருக்குச் சேர வேண்டியது பணமோ… பொருளோ எதுவானாலும் அடுத்த ஜென்மத்திலோ… அல்லது எந்த ஜென்மத்தில் இருவரும் சந்திக்கின்றார்களோ அந்த ஜென்மத்திலே தானாகவே போய்ச் சேர்ந்துவிடும். ப்ராரப்த கர்மா என்பது ஒரு ஜென்மத்தில் ஒருவர் கொடுக்க வேண்டிய பொருள் மறு ஜென்மங்களில் மற்றவர்களால் பெறப்படுகின்றது. குப்புசாமி தன் பெண்ணை முன் ஜென்மத்திலே அந்தப் பையனுக்குக் கொடுப்பதாகச் சொல்லி வாக்கைக் காப்பாற்றாதது இந்த ஜென்மத்திலே அந்தப் பையன் குப்புசாமியைக் கேட்காமலே இழுத்துக் கொண்டு செல்லும்படியாக ஆகிவிட்டது.

“பகவான் யார் யாருக்கு முன் ஜென்மத்திலே விட்டதை இந்த ஜென்மத்திலே சேர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிவார். யாரும் எவரையும் ஏமாற்றிவிட்டோம் அல்லது ஏமாந்துவிட்டோம் என்றெல்லாம் வருத்தப்படத் தேவையே இல்லை. நாம் ஏமாந்துவிட்டோம் என்று நினைப்பதைவிடப் போன ஜென்மத்தில் பட்ட கடனை இந்த ஜென்மத்தில் அடைத்துவிட்டோம் என்று நிம்மதியும் சமாதானப்படுவதே உத்தமம். ப்ராரப்தம் என்பது ஒரு ஜென்மத்திலே கொடுக்கப்பட வேண்டியது பணமோ அல்லது செயலோ அடுத்த ஜென்மத்திலே மற்றவர்களால் உரிய நேரத்தில் பெறப்பட்டுவிடும் என்பதையே குறிக்கின்றது. இதைப் போய் ஏதோவொரு பாப கர்மா போல் நினைத்தல் கூடாது.”

சற்று நிதானத்துக்கு வந்த ராமசாமியும் கிருஷ்ணசாமியும் ஜோதிடரீதியாக இதை எப்படி உணர இயலும் என்று கேட்டனர்.

“ஒருவருடைய சாதக ரீதியாக லக்னம், ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடங்கள் ப்ராரப்த கர்மாக்களைத் தெளிவுபடுத்தும் இடங்கள். இந்த இடங்களில் பாப கிரகங்களான சூரியன், சனிச்வரன் வரப் பெற்றவர்கள் அல்லது இந்த இடங்கள் இதே பாப கிரகங்களால் பார்க்கப்பட்டவர்கள் இந்த கர்ம பலனை உணருபவர்களாக இருக்கின்றார்கள். இதையே பித்ருக்களால் ஏற்பட்ட தோஷங்கள், செய்வினைகள், ஸ்திரி சாபங்கள், திருஷ்டி தோஷங்கள், நாக தோஷங்கள் என்று பலவாறாக ஜோதிடர்களால் கூறப்படுகின்றது. உண்மையில் பார்க்கப்போனால் போன ஜென்மத்தில் பட்ட கடன்கள் அடுத்த ஜென் மத்தில் உரியவர்களிடம் சேர்ப்பிக்கவும், ப்ராரப்தங்களைப் புரிந்து வழிநடக்கவும் ஆண்டவன் சரியான நபர்கள், ஜோதிடர்கள் மூலம் வழிகாட்டியும் விடுவான். சரியாகப் புரிந்துகொள்பவர்கள் ப்ராரப்தங்களைப் போக்கிக்கொள்வதில் நிம்மதியடைகின் றார்கள்… உணராதவர்கள் ப்ராரப்தங்களில் என்றுமே உழன்றுகொண்டேதான் இருக்கின்றார்கள்.”

ஏதோ கொஞ்சம் புரிந்துகொண்டவர் போல் இருவரும் கிளம்பினர். வரும் வழியில் கிருஷ்ணசாமி சொன்னார். “ஜோதிடர் கூறியது புரிந்தது போலவும் உள்ளது புரியாதது போலவும் உள்ளதே…”

“என்ன கிருஷ்ணசாமி… சினிமாவில் வருவதுபோல் தெரியும்… ஆனால் தெரியாது என்று ஜோக்கடிக்கிறியே… சமீபத்தில் படித்த கதை ஒன்றைச் சொல்றேன்… புரியும் பார்.” என்றார் ராமசாமி.

அந்த ஊர் குருக்கள் மிகவும் பய பக்தியும் ஆண்டவனிடம் அஸாத்ய அன்யோன்யமும் உடையவராகவே இருந்தார். போன ஜென்மத்திலே பண்ணிய புண்ணியம் உன் காலடியில் சேவை செய்யும் பாக்யம் கிடைத்ததே என்று தினம் தினம் பெருமைபட்டுக்கொள்வார். என்றாலும் குடும்பத்தில் தாரித்ரியம்தான்.

மராமத்து வேலைக்காக ஊர்த் தச்சனை அகத்துக்கு வரச் சொல்லியிருந்தார். அன்று காலை, வரும் வழியில் கோவில் வாசலில் தச்சன் சிறு மூட்டை ஒன்றைக் கண்டான். எடுத்துப் பார்த்த அவனுக்கு ஆச்சர்யம்… மூட்டையில் துவரம் பருப்பு அளவில் தங்கக் காசுகள். மூட்டையை நன்றாகக் கட்டிக்கொண்டு குருக்கள் அகத்துக்கு வந்தான்.

குருக்கள் அகத்தில் அவரது மனைவி மற்றும் ஊர் பெரியவர்கள் சிலரும் இருந்தார்கள். வேலை பற்றிய விவரங்களைச் சொன்னார் குருக்கள். அதே சமயம் தச்சன் அருகிலுள்ள மூட்டையைப் பார்த்த மாமி அது என்ன என்று விசாரித்தார்…

“இதுவா மாமி… வீட்டுக்காரி வரும்போது துவரம் பருப்பு வாங்கி வரச் சொன்னாள்… துவரம் பருப்பு மூட்டை” என்று ஒரு பொய்யைச் சொன்னான்.

மதியம் ஆனது… சாப்பிடுவதற்காக வெளியே சென்றான் தச்சன். துவரம் பருப்பு எப்படி இருக்கின்றது என்று பார்க்க ஆவல்கொண்டார் மாமி. தச்சன் இல்லையே… மூட்டையைப் பிரித்துப் பார்ப்போம் என்று பிரித்ததும் வாயடைத்துப் போனார் மாமி. துவரம் பருப்பு என்றானே. தங்கம் மாதிரியல்லவா இருக்கின்றது. ஏதோ ஒரு உந்துதலில் மூட்டையில் இருந்த தங்கத்தை எடுத்துவிட்டுத் துவரம் பருப்பை நிரப்பினார் மாமி.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினான் தச்சன். மிகுந்த மகிழ்ச்சியோடு மூட்டையை பிரித்த அவனுக்குப் பேரிடிதான் காத்திருந்தது. துவரம் பருப்பு என்று மாமியிடம் பொய் சொன்னது நிஜமாகவே ஆகிவிட்டதே. கடவுளே… இது என்ன அநியாயம் என்று முறையிட்டான் தச்சன்… அப்போது அசரீரி ஒன்று கேட்டது. “தங்கம் அந்த குருக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டியது. உன் கையில் அது சிக்கியதினால் உன் மூலமாகவே சேர்க்கப்பட வேண்டும் என்பதும் ப்ராரப்தம். உனக்கும் குருக்கள் மூலமாகச் சேர வேண்டிய துவரம் பருப்பு சேர்க்கப்பட்டது.”

இப்போது புரிகின்றதா கிருஷ்ணசாமி. கடவுள் யார் யாருக்கு என்னதைச் சேர்க்க வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் சேர்த்துவிடுவார். தச்சனின் ப்ராரப்தம் புரிந்ததா உனக்கு.

புரிந்தது போல் தலையாட்டினார் கிருஷ்ணசாமி.


Contact Astrologer